

ஆஸ்கர் என்பது அமெரிக்கப் படங்களுக்கான விருதுகள் மட்டுமே என்ற விமர்சனம் பிப்ரவரி மாதம் எடுபடாமல் போய்விடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அகாடெமி ஆஃப் மோஷன் பிக்ஸர்ஸ் ஆர்ட் அண்ட் சயின்ஸ் அறக்கட்டளை (AMPAS) வழங்கும் ஆஸ்கர் விருது விழா உலகை ஈர்த்துவிடுகிறது.
இவ்விழாவின் நேரலை நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி வழியே கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கண்டு களித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 43 மில்லியன். இந்த ஆண்டு இது 53 மில்லியனாக இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆஸ்கர் இத்தனை வரவேற்பைப் பெறக் காரணம் என்ன?
ஆஸ்கர் விருதுகள் வழங்கக் கடைபிடிக்கப்படும் விதிகளும் தர ஒழுங்குகளுமே காரணம் என்று மதிப்பிடுகிறார்கள் அமெரிக்காவுக்கு வெளியே இருந்து அகாடெமி விருதுகளை விமர்சிக்கும் பலர்.
ஆஸ்கரை நெருங்கலாம்
இது அமெரிக்கத் தயாரிப்பு, இங்கிலாந்து தயாரிப்பு, மூன்றாம் உலக நாடுகளின் தயாரிப்பு என்றெல்லாம் ஆஸ்கர் பேதம் பார்ப்பதில்லை. சிறந்த வெளிநாட்டு மொழிப்படம் என்ற பிரிவுக்கு அனுப்பப்படும் படங்களைத் தவிர, மற்ற பிரிவுகளுக்கான போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் படங்கள் ஆங்கிலத்தைப் பேச்சுமொழியாகக் கொண்டு நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
40 நிமிடத்துக்குக் குறைவாக இருக்கக் கூடாது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் ஒரு சில திரையரங்குகளிலாவது வெளியாகி ஏழு நாட்கள் ஓடியிருக்க வேண்டும். இந்த அடிப்படைத் தகுதிகளுக்கு அப்பால் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் படங்கள் எந்த வகைமையில் அடங்கினாலும் அவற்றின் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு ஆகியவற்றுக்கு அடிப்படை அளவுகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் படங்களையும் கலைஞர்களையும் சுமார் 4700 அகாடெமி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் அனைவருமே திரைப்படத்துறையின் பலவேறு பிரிவுகளில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்கள். செய்துகொண்டும் இருப்பவர்கள். இவர்கள் யார் என்பதை அகாடெமி ரகசியமாகவே வைத்திருக்கிறது.
ஒரு படத்தை அல்லது கலைஞரை இந்த உறுப்பினர்கள் பரிந்துரை செய்யவும், விருதுக்காகத் தேர்ந்தெடுக்கவும் ரகசிய வாக்களிப்பை நிறைவேற்றுகிறார்கள். இந்த வாக்களிப்பு, படங்களின் உள்ளடக்கம், உருவாக்கத்தில் உள்ள நேர்த்தி, நடிப்பில் பங்குகொண்ட கலைஞர்களின் நடிப்புத் திறன் பங்களிப்பு, இயக்குநரின் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.
87-வது போட்டி
நாளை மறுநாள் நடைபெற இருக்கும் ஆஸ்கர் திருவிழாவுக்காக ஹாலிவுட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் விழாக் கோலத்துடன் தயாராகிவிட்டது. பல்வேறு உலகநாடுகளிலிருந்து அழைக்கப்படும் கலையுலகச் சிறப்பு விருந்தினர்களை உபசரிக்கப் பல குழுக்கள் அங்கே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன.
இதுவொரு பக்கம் இருக்க ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்திருக்கும் படங்களில் எந்தப் படத்துக்கு விருது உறுதி, சிறந்த நடிகர் விருதை வெல்லப்போவது யார், எது சிறந்த அனிமேஷன் திரைப்படம், விஷுவல் எஃபெக்ட் விருது எந்தப் படத்துக்கு என்று ஒவ்வொரு பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்ட படங்கள், கலைஞர்கள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் ஊக விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றியெல்லாம் கவலைப் படாமல் அமெரிக்க ரசிகர்கள் கடந்த சில தினங்களாக ஆஸ்கர் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
இந்த ஆண்டு ‘பேர்ட்மேன்’, ‘தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்’ ஆகிய இரண்டு படங்கள், சிறந்த படம் உட்பட தலா ஒன்பது பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றோடு மேலும் ஆறு படங்கள் சிறந்த படங்களுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கடும்போட்டியில் இந்த இரண்டு படங்களையும் பின்தள்ளி கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கியிருக்கும் ‘அமெரிக்கன் ஸ்னிப்பர்’ படத்துக்கே சிறந்த பட விருதுக்கான அலை வீசுவதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. சிறந்த இயக்குநருக்கான விருது ‘பாய் ஹூட்’ படத்தை இயக்கிய ரிச்சர்ட் லிங்க்லேட்டருக்குக் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சிறந்த நடிகருக்கான விருது ‘அமெரிக்கன் ஸ்னிப்பர்’ படத்தில் ‘செரிஸ் கெய்ல்’ என்ற மன அழுத்தம் மிக்க அமெரிக்கப் போர் வீரனாக நடித்துக் கவர்ந்த பிராட்லி கூப்பருக்குக் கிடைக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள். இவர் ஏற்கெனவே சிறந்த நடிகருக்காக மூன்றுமுறை பரிந்துரைக்கப்பட்டவர். அதேபோல சிறந்த நடிகைக்கான விருதை ‘ டூ டேய்ஸ் ஒன் நைட்’ படத்தில் கதாநாயகியாக நடித்த மரியான் தட்டிச்செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் பரிந்துரைகளில் மற்றொரு ஆச்சரியம் நடிகை மெரில் ஸ்ட்ரீப். இவர் 19-வது முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதிக முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் என்ற தகுதியுடன் மனம் தளராமல் இம்முறை ‘இன் டு தி உட்ஸ்' படத்திற்காகச் சிறந்த துணை நடிகை விருதுக்காகக் காத்திருக்கிறார்.
மார்டின் லூதர் கிங் ஜூனியரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘செல்மா’, பல பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறந்த படம் மற்றும் அசல் பாடல் ஆகிய பிரிவுகளில் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவற்றோடு சிறந்த விஷுவல் எஃபெக்ட் பிரிவில் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘இண்டெர்ஸ்டெல்லர்’ திரைப்படம் விருதைத் தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பிரபல மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிய மலையாளப் படமான 'லயர்ஸ் டைஸ்' இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டாலும் பரிந்துரைப் பட்டியலில் பரிதாபகரமாகப் பின்தள்ளப்பட்டது. சிறந்த வெளிநாட்டு மொழிப் படப் பிரிவில் போலந்து, ரஷ்யா, எஸ்டோனியா, மவுரித்டானியா, அர்ஜென்டீனா ஆகிய ஐந்து நாடுகளின் படங்கள் களத்தில் நிற்கின்றன.