Published : 23 Jan 2015 01:10 PM
Last Updated : 23 Jan 2015 01:10 PM

அமுதாய்ப் பொழிந்த நிலவு -அந்தநாள் ஞாபகம்

புராணப் படங்களின் ஆதிக்கம் குறையாத ஐம்பதுகளில் தெலுங்கு சினிமாவை சீர்திருத்த சினிமாவாக மாற்றிக்காட்டிய சினிமா சிற்பிகளில் முக்கியமானவர் கரிகாபட்டி ராஜா ராவ். புகழ்பெற்ற மருத்துவராகவும் இருந்த இவர், நாடகம், சினிமா இரண்டையும் சீர்திருத்தக் கருவியாகக் கையாண்டவர். இவரது பெருமைமிகு அறிமுகம்தான் ‘ஆந்திராவின் நர்கீஸ்’ என்று புகழப்படும் ஜமுனா.

தெலுங்கு சினிமாவின் காவிய கால சூப்பர் ஸ்டார்கள் என்.டி.ஆர்., அக்னிநேனி நாகேஷ்வர ராவில் தொடங்கி அறுபதுகளின் முன்னணிக் கதாநாயகர் அத்தனை பேருடனும் சுமார் 200 தெலுங்குப் படங்களில் நடித்தவர்.

தமிழில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடித்திருந்தாலும் சிவாஜி, எம்.ஜி.ஆரில் தொடங்கி ஜெய்சங்கர் வரையிலும் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்த காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரர். தெலுங்கு, தமிழ் மொழிகளைக் கடந்து இந்திப் பட உலகிலும் வெற்றிக்கொடி நாட்டிய கன்னடத்துப் பெண்.

ஜமுனாவின் தந்தை சீனிவாச ராவ் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள துக்கிராலா என்ற ஊரில் குடியேறியவர். அந்த ஊரின் கறிமஞ்சள் உலகப்புகழ் பெற்றது. அதையும் பருத்தி இழைகளையும் ஏற்றுமதி செய்யும் வெற்றிகரமான வியாபாரியாக இருந்தார். இவரது மனைவி கவுசல்யாதேவி கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தவர்.

ஜமுனா வட கர்நாடகத்தின் ஹம்பியில் பிறந்தபோது அவரது நட்சத்திரத்தை மனதில் வைத்து அவருக்கு ஜமுனா என்ற நதியின் பெயரை வைத்தார்கள். அம்மாவிடம் இளமையிலேயே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். பிறகு பரதம் பயின்றார்.

தெலுங்கு சினிமாவில் பின்னாளில் நடிகராக உயர்ந்த ‘கொங்கரா ஜக்கையா’ஜமுனாவின் பள்ளி ஆசிரியர். ஜமுனாவின் நடிப்புத் திறனைக் கண்ட பள்ளி ஆசிரியர் ஜக்கையா, “ உங்கள் மகளை நீங்கள் நாடகங்களில் நடிக்க வைக்கலாமே” என்று அவரது அம்மாவிடம் எடுத்துக் கூற, ஜமுனா பத்து வயது முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். படிப்பிலும் படுசுட்டியாக இருந்ததால் அவரை டாக்டருக்குப் படிக்க வைக்க விரும்பினார் அவரது அப்பா. இதற்காகத் தன் குடும்ப நண்பரான டாக்டர் கரிகாபட்டி ராஜா ராவிடம் மகளை அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டார்.

ஜமுனாவின் அழகைக் கண்ட அவரோ தனது ‘மா பூமி’ என்ற நாடகத்தில் கதாநாயகியின் தங்கையாக நடிக்க வைத்தார். நாடகத்தில் அவரது நடிப்பைக் கண்ட ராஜா ராவ், ஜமுனாவைப் புகைப்படங்கள் எடுத்து, அவற்றை இந்திப்பட உலகில் புகழ்பெற்ற கேமராமேனாக இருந்த தம் நண்பர் வி. என். ரெட்டிக்கு அனுப்பிவைத்தார்.

“நான் முதல்முறையாகத் தயாரிக்க இருக்கும் படத்துக்கு இந்தப் பெண்ணைக் கதாநாயகி ஆக்கலாம் என்று நினைக்கிறேன். உன் அபிப்ராயம் என்ன?” என்று கேட்டு எழுதினார். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் வி. என். ரெட்டியிடமிருந்து பதில் இல்லை. இனியும் தாமதிக்க முடியாது என்று எண்ணி, வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்தார்.

அப்போது ரெட்டியிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் ‘இந்தப் பெண் ஆந்திராவின் நர்கீஸ்’என்று புகழ் பெறுவாள்’என்று செய்தி அனுப்பியிருந்தார். இதற்கு மேலும் தயங்குவாரா கரிகாபட்டியார். உடனடியாக ஜமுனாவைத் தனது படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

1953-ல் வெளியான ‘புட்டில்லூ’ என்ற அந்தத் தெலுங்குப் படத்தில் ஜமுனாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை பொழிந்தது. அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் தெலுங்கு சினிமாவின் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்தார். அறிமுகப் படம் வெளியான அடுத்த ஆண்டே 1954-ல் வெளியான ‘பணம் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் தமிழில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார்.

எச்.எம்.ரெட்டி தனது ‘ரோகிணி பிக்சர்ஸ்’ பட நிறுவனம் சார்பில், தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்த நகைச்சுவைப் படம் இது. என்.டி. ராமராவ் -சவுகார் ஜானகி ஜோடியாக நடித்திருந்த இந்தப் படத்தில் ஜமுனா இரண்டாவது கதாநாயகி. நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலுவுக்கு ஜோடி.

தமிழில் அறிமுகப் படம் தோல்வியடைந்தாலும் 1955-ல் விஜயா - வாகினி ஸ்டூடியோ தயாரித்த ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ஜமுனாவுக்குப் பெற்றுத் தந்தார் சாவித்திரி. ஜெமினி கணேசனும், சாவித்திரியும் நடித்து ரசிகர்களை உருக்கிய இந்தப் படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்.

கொட்டக் கொட்ட உருளும் காந்தக் கண்களைக் கொண்டு குழந்தைத்தனம் கொண்ட சீதா என்ற ஜமீன்தார் மகள் வேடத்தில் ஜமுனா பிரமாதமாக நடித்திருந்தார். ‘தமிழ்ப் படவுலகம் ஒரு நல்ல நடிகையைப் பெற்றுக்கொண்டது’ என ஆனந்த விகடன் எழுதியது. தெலுங்கிலும் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம் இந்தியில் தயாரிக்க அங்கேயும் வெற்றிபெற்று ‘யாரிந்தப் பெண்மணி?’ எனக் கேட்க வைத்தது.

‘மிஸ்ஸியம்மா’ மூலம் கிடைத்த புகழ் ஜமுனாவைத் தென்னகத்தின் முன்னணிக் கதாநாயகி ஆக்கியது. சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, அஞ்சலி தேவி என ஐம்பதுகளில் ஜொலித்த கதாநாயகிகளில் யாருடைய திறமையிலும் கடுகளவும் சளைதவர் அல்ல என்று பெயர் பெற்றார் ஜமுனா. நளினமான நடனம், கண்ணியம் மீறாத கிளாமர், கண்களால் பேசி நடிக்கும் திறன் என்று கலக்கிய ஜமுனா, 1957-ல் சிவாஜிகணேசனுடன் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தில் சுசீலாவின் தேன் குரலில் ஜமுனா பாடுவது போல் இடம்பெற்ற ‘அமுதைப் பொழியும் நிலவே’ என்ற பாடலில் அவரது பவ்யமான நடிப்பைக் கண் குளிரக் கண்டு, அந்தப் பாடலை பாடாத ஆண், பெண் ரசிகர்களே அன்று இல்லை என்று சொல்லும்விதமாக அனைவரும் பாடிப் பாடி , ஜமுனாவைக் கொண்டாடினார்கள்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஜமுனா, அண்ணா கதை வசனம் எழுதிய ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு சினிமாவில் ஜமுனாவின் நடிப்புக்குப் பல படங்கள் உதாரணமாக இருக்க, தமிழில் அவரது நடிப்புத்திறன் முழுமையாக வெளிப்பட்டு நின்ற படம் ‘குழந்தையும் தெய்வமும்.’ ஏவி.எம். தயாரிப்பான இந்தப் படத்தில் ஜமுனாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெய்சங்கர்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு தெலுங்குப் பட உலகுக்குத் திரும்பி அங்கே 15 ஆண்டுகள் கதாநாயகியாக நடித்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில், கமலுக்கு அம்மாவாக நடித்தார்.

மங்காத புகழுடன் வாழும் ஜமுனாவை 1983-ல், அரசியலுக்கு வருமாறு அழைத்தார் அந்நாளின் பிரதமர் இந்திரா காந்தி. காங்கிரசில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்தல் களம் வென்று மக்கள் பணி புரிந்த ஜமுனா, புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர். தற்போது அரசியலில் இருந்து விலகி வாழும் ஜமுனா, 1965-ல் கல்லூரிப் பேராசிரியர் ரமண ராவை மணந்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு வம்சி கிருஷ்ணா, ஸ்ரவந்தி ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x