

இ
ரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வீச்சுக்கு ஆளான நாகசாகி நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஹஸிமா தீவு. ‘பாட்டில்ஷிப் ஐலேண்ட்’ என்று அழைக்கப்படும் இந்தத் தீவு,தெற்கு ஜப்பானின் வரலாற்றில் புதைக்கப்பட்ட சம்பவங்கள் பலவற்றை தன்னுள் வைத்திருக்கிறது. அதில் ஒன்றை ‘தி பாட்டில்ஷிப் ஐலேண்ட்’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக்கியிருக்கிறார் தென்கொரிய இயக்குநரான ரியோ சீங்-வான்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் கொரியாவை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது ஜப்பான். அங்கிருந்து வலுக்கட்டாயமாகக் குடும்பம் குடும்பமாகச் சாமானியர்களையும் போர்க்கைதிகளையும் ஜப்பானுக்குக் கொண்டுவந்து தனது வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டது. ஹஸிமா தீவில் கடலுக்கடியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றைத் தோண்டி நிலக்கரி எடுத்துவந்த ஜப்பான், ‘பூமியின் நரகம்’ என்று வருணிக்கப்படும் நாற்புறமும் கடல் நீரால் சூழப்பட்ட அந்தக் குட்டித் தீவில் அடைத்துவைத்து வேலை வாங்கியது. சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மடிந்தபடியிருந்தனர்.
சிறைபோன்ற இந்தக் கொத்தடிமைத் தீவிலிருந்து கொரியத் தொழிலாளர்கள் 400 பேர் தங்கள் குடும்பத்துடன் தப்பிச் செல்ல, படிப்படியாகத் திட்டமிட்டனர். அதை அவர்கள் செயல்படுத்த முனைந்தபோது, நடந்த வரலாற்றுச் சம்பவத்தை விறுவிறுப்பான ஜீவ-மரணப் போராட்டமாகப் படமாக்கியிருக்கிறாராம் இயக்குநர் ரியோ சீங்-வான். தென்கொரியா முழுவதும் 2,500 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், தற்போது உலகம் முழுவதும் வெளியாகிறது.