

பு
திய தலைமுறை கொண்டாடும் இசைக்கலைஞராகிய ஏ.ஆர்.ரஹ்மான், கன்சர்ட் வகைத் திரைப்படம் ஒன்றை இயக்கித் தயாரித்திருக்கிறார். ‘ஒன்ஹார்ட்’ என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். அது என்ன கன்சர்ட் வகை? ஒரு இசைக்கலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் திரைப்படமாம். தமிழில் இப்படியொரு படம் வருவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.
ஹாலிவுட்டில் இதற்கு முன் மைக்கேல் ஜாக்சனை வைத்து உருவாக்கப்பட்ட ‘திஸ் இஸ் இட்’ (This is it) பிரம்மாண்ட வெற்றிபெற்ற கன்சர்ட் வகைத் திரைப்படம். இதை முன்மாதிரியாகக் கொண்டுதான் உருவாகியிருக்கிறது இந்த ‘ஒன் ஹார்ட்’.
ஏ.ஆர்.ரஹ்மான், மேடையில் பாடியிருப்பதைக் கண்டிருக்கலாம். லைவ் இசை நிகழ்ச்சியை அவர் ஒருங்கிணைத்து நடத்துவதை நேரில் பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால், ஒரு இசை நிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு குறித்தோ, அதற்கான பணிகளில் தன்னுடைய குழுவினருடன் அவர் எப்படித் திட்டமிடுகிறார் என்பது குறித்தோ, மேடைகளில் பாட வேண்டிய, இடம்பெற வேண்டிய நிகழ்வுகளின் வரிசைப் பட்டியல் குறித்தோ, ரஹ்மான் ஒரு இசைக் குறிப்பை எப்படி உருவாக்குகிறார் என்பது பற்றியோ, அதை ஏனைய இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார் என்கிற பின்னணி குறித்தோ அவரின் ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவை அனைத்தையும் ஒரு திரைப்படக் கதைக்கான அம்சங்களுடன் சுவைபட சொல்ல இருக்கிறதாம் இந்தப் படம்.
‘ஒன் ஹார்ட்’ படத்தில் மொத்தம் பதினாறு பாடல்கள். அவற்றில் பல தமிழ்ப் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன என்கிறது படக்குழு . ரஹ்மானும் அவருடைய இசைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கலைஞர்களும்தான் இந்தப் படத்தில் நடிகர்கள். பலவித உணர்வுகளின் கலவையாக இருக்கும் இப்படத்தைத் தமிழ், ஆங்கிலம் , இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே வேளையில் வெளியிட இருக்கிறார்கள். ஆங்கிலப் பதிப்பில் தமிழ்ப் பாடல்கள் நேரடியாக இடம்பெற்றிருப்பது தமிழுக்குப் பெருமை என்கிறது படக்குழு.