

‘பாகுபலி’யின் பிரம்மாண்ட வெற்றி காரணமாக மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு இரண்டு பிரம்மாண்ட மொழிமாற்றுப் படங்கள் வருகின்றன. அதில் ஒன்று மோகன்லால் நடிப்பில் வெளியாகி கேரளத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலித்த ‘புலிமுருகன்’. அதே தலைப்பில் இந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்துடன் தமிழில் வெளியிடுகிறார்கள்.
இரண்டாவது படம், தெலுங்குப் படவுலகில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் அவரது 100-வது படமாக உருவான ‘கெளதமி புத்ர சாதகர்ணி’ என்ற தெலுங்குப் படம். முதல் நூற்றாண்டில் நடக்கும் கதை. ‘வானம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அறியப்படும் கிரிஷ் இயக்கத்தில் 80 கோடி செலவில் உருவாகி 160 கோடி வசூலித்த வரலாற்றுப் படம். ஸ்ரேயா, ஹேமமாலினி உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் 80 நாட்களில் படம்பிடித்து முடித்திருக்கிறார் இயக்குநர். இதை அறிந்து ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமௌலியே இயக்குநர் கிரிஷைப் பாராட்டியிருக்கிறாராம்.
வெற்றிக் கூட்டணி
‘புலி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களைத் தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் ‘சாமி 2’ படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ஒப்பந்தமாகி யிருக்கிறார்கள். ஜூலை மாதம் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்குகிறது. ‘சிங்கம்’, ‘எஸ் 3’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய தேவி ஸ்ரீபிரசாத் மீண்டும் ‘சாமி 2’க்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத் திருக்கிறார். ஹரி, விக்ரம், தேவி ஸ்ரீபிரசாத் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையுமா என்று பார்க்கலாம்.
மீண்டும் ராசா
ராஜ்கிரணை வெள்ளி விழா கதாநாயகன் ஆக்கிய படம் ‘என் ராசாவின் மனசிலே’. ‘ப.பாண்டி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே-2’ படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து இயக்குகிறார் ராஜ்கிரண். ஐந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த தனது ‘ரெட் சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்’ பட நிறுவனம் மூலம் இதைத் தயாரிக்கும் ராஜ்கிரண் தற்போது அதன் திரைக்கதையை எழுதிவருகிறார். அடுத்த கட்டமாக கதாநாயகி தேர்வு இருக்கும் என்கிறார்.
கணவரின் பரிசு
‘துணைவன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடையப்போகிறதாம். அதை வித்தியாசமாகக் கொண்டாட விரும்பியிருக்கிறார் ஸ்ரீதேவியின் காதல் கணவர் போனி கபூர். இதற்காக ஸ்ரீதேவி நடிப்பில் அவரது 300-வது படத்தை இரண்டு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். ‘மாம்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இதை இயக்கியிருப்பவர் ரவி உத்யவார். தமிழ், தெலுங்கு,இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் தயாராகியிருக்கும் நிலையில் அனைத்துமொழிகளிலும் ஸ்ரீதேவியே குரல்கொடுக்க இருக்கிறாராம்.