

ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’.
அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி) துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார், ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.
திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த சினிமாத்தனமான கனவுகள் கொண் டவர் பொன்னி (அஞ்சலி). பொன்னிக்கும் மைக்கேலுக்கும் திருமணமாகிறது.
பட வெளியீடு தொடர்பான தகராறு உச்சத்தை எட்ட, பல குளறுபடிகளும் விபரீ தங்களும் இந்தக் குடும்பங்களின் வாழ்வைக் கலைத்துப் போடுகின்றன. இவற்றின் முடிவு என்ன என்பதைச் சொல்கிறது இந்த நீண்ட படத்தின் கதை.
பெண்களைப் பற்றிய கவலையோ, புரிதலோ அற்ற ஆண்களின் போக்கு பெண்க ளின் வாழ்வை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதைப் படம் அழுத்தமாகக் காட்டுகிறது.
விசுவாசத்தின் அதீத எல்லைக்குள் பிரவேசிக்கும் மைக்கேல், அதனால் பெற்ற பாதிப்பைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அதே எல்லைக்குள் பிரவேசிக்கிறான். மது அடிமை மையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அருள் மீண்டும் தடாலடி முடிவை எடுக்கிறான். தன்னுடைய விருப்பத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும் ஜகனின் செயல்பாடு, பிறரது வாழ்வைச் சிதைக்கிறது. மனைவி மீதான தொடர் அலட்சியம் அருளின் தந்தையின் மீதான பெரும் குற்ற உணர்வாய்க் கவிகிறது. உணர்ச்சி சமநிலையோ, பொறுமையோ, நுண்உணர்வோ அற்ற ஆண்கள் திரும்பத் திரும்பச் சறுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். மழையைச் சுதந்திரத்தின் குறியீடாகக் காட்டியிருக்கும் விதம் கவித்துவமானது.
வசனங்கள் கூர்மையாகவும் வலுவாக வும் உள்ளன. எனினும், பல்வேறு கதாபாத் திரங்களின் கதைகளை சுவாரஸ்யமாகத் திரைக்கதையில் இணைத்துத் தருவதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார். படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது. பாடல்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் சில இடங்களில் சமநிலை தவறுகிறது. ஆண் பெண் உறவு சார்ந்த சித்தரிப்பில் ஆழம் இல்லை. ஆண்கள் அனைவருமே நிதானமற்றவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பு எதார்த்தத்துக்குப் புறம்பானது. கோவலன் கண்ணகி கதையாடலைச் சமகாலத்தில் பொருத்திக்காட்டும் முயற்சி முழுமை பெறவில்லை. சிலைத் திருட்டுக் காட்சிகள் படத்தின் ஆதார நோக்கத்தில் இருந்து கவனத்தை விலக்குகின்றன. இறுதிக் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் நாடகத்தன்மை தூக்கலாக உள்ளது. பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பு பலவீனம்.
தனது பாலியல் தேவையை நியாயப்படுத் தும் மலர் கதாபாத்திரம் வலுவானது. ஆனால், இந்தப் பாத்திரம் புனிதமாக்கப்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.
எல்லா நடிகர்களும் தத்தமது கதாபாத்திரங் களை உணர்ந்து இயல்பாக நடித்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம். எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி, பூஜா தேவாரியா, ராதா ரவி, பாபி சிம்ஹா, சீனுமோகன் ஆகியோரின் நடிப்பு அவர்களைக் கதாபாத்திரங்களாக மட்டும் காண வைக்கிறது. கிளைமாக்ஸில் சூர்யாவின் நடிப்பு அவரைத் தேர்ந்த நடிகராக அடையாளம் காட்டுகிறது. தன் பாத்திரத்தை உணர்ந்து ஆழமான நடிப்பைத் தந்துள்ளார் அஞ்சலி.
மழைக் காட்சியில் தொடங்கி மழைக்காட் சியில் முடியும் படத்தில் சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிக்குமான ஒளியமைப்பு (லைட்டிங்) கதைக்குப் பெருந் துணை. சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை கதை யோட் டத்தைத் தாங்கிப்பிடிக்கிறது. படத்தொகுப் பில் விவேக் ஹர்சன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தப் படமும் உபரிக் காட்சிகளுடன் மூச்சுமுட்ட வைக்கிறது.
பெண்களின் வலியையும் பாடுகளையும் அழுத்தமாகச் சொல்ல முயன்றதற்காக கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அதே நேரம் இதுபோன்ற தீவிரமான கதையைக் கட்டுக்கோப்பான கால அளவில், ஈர்க்கக்கூடிய படமாகத் தந்திருந்தால் இறைவி அருமையான தரிசனமாக அமைந்திருக்கும்.