தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: சினிமாவில் ஒரு சிற்றரசர்!

தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: சினிமாவில் ஒரு சிற்றரசர்!
Updated on
3 min read

கல்கத்தாவிலும், பம்பாயிலும் கோலாப்பூரிலும் இயங்கிவந்த இந்திய சினிமாவை சேலம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தார் இந்த ‘செல்லுல்லாய்ட் சீமான்’. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 150 படங்களைத் தயாரித்தவர். 55 படங்கள் இயக்கியவர். 40 ஆண்டுகள் இடைவிடாமல் இயங்கிச் சாதனை படைத்த அவர்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய டி.ஆர். சுந்தரம்.

அடங்க மறுக்கும் சாதனைகள்

“முதலாளி” என முன்னணி நட்சத்திரங்களாலும் ஸ்டூடியோ தொழிலாளர்களாலும் அழைக்கப்பட்ட சுந்தரத்தின் சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘திரைப்படத் தயாரிப்பு முறை என்றாலே ஹாலிவுட்டுக்கு இணையாக யாருமில்லை’ என அங்கலாய்ப்பவர்கள் நாற்பதுகளில் வாழ்ந்திருந்தால் அப்படிக் கேட்க வாய்ப்பே இல்லை. ஹாலிவுட்டுக்குச் சற்றும் குறையாத முழுமையான கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு பிரம்மாண்ட ஸ்டூடியோவை இயற்கை எழில் சூழ்ந்த சேலம் – ஏற்காடு மலையடிவாரத்தில் அமைத்தார்.

அங்கே படப்பிடிப்புத் தளங்கள், பாடல் ஒலிப்பதிவுக்கூடம், ப்ராப்பர்ட்டி டிபார்ட்மெண்ட், பிலிம்லேப், ப்ரிவியூ தியேட்டர், மாஸ் கிச்சன் என ஒரு திரைப்படம் முழுமையாகத் தாயாராகி வெளியே வரும் வரைக்குமான அத்தனை வசதிகளை ஏற்படுத்தினார் ‘ஸ்டூடியோ சிஸ்டம்’என்னும் ராணுவக் கட்டுக்கோப்புடன் இத்தனைபெரிய ஸ்டூடியோவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். தனது ஸ்டூடியோவுக்குத் தேவையான தொழிலாளர்களை அருகிலிருந்த கிராமங்களில் இருந்தே வேலைக்கு அமர்த்திக்கொண்ட சுந்தரம், அவர்களுக்கு ஆசிரியர்களை அமர்த்தி தினசரி ஒருமணிநேரம் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே பள்ளிக்கூடம் நடத்தினார்.

அது மட்டுமல்ல; டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், வாலிபால் கிரவுண்டு, டேபிள் டென்னிஸ், கேரம் போர்டு, சடுகுடு மைதானம், ரீடிங் ரூமுடன் கூடிய நூலகம் போன்ற பல வசதிகளை ஸ்டூடியோவுக்குள்ளே ஏற்படுத்திக்கொடுத்து வாழ்க்கையையும் சினிமாவையும் தன் தொழிலாளர்கள் காதலிக்கும்படி செய்தார்.

ஹாலிவுட் முறையைப் பின்பற்றி

ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்கள் தனி, இயக்குநர்கள் தனி என்ற முறைதான் அங்கிருந்து ரசிக்கும்படியான படங்கள் வருதற்கு இன்றளவும் முக்கியக் காரணமாக இருக்கிறது. ஹாலிவுட்டின் இந்த முறையை சுந்தரம் இறுகப் பிடித்துக்கொண்டதால் கண்ணதாசன், மருதகாசி, கலைஞர் மு. கருணாநிதி, கா.மு.ஷெரிப் தொடங்கி பல புகழ்பெற்ற எழுத்தாளர்களைத் திரைக்கதாசிரியர்களாகவும் பாடலாசிரியர்களாகவும் அறிமுகப்படுத்தினார்.

அதேபோல் ஹாலிவுட்டிலிருந்து பல ஒளிப்பதிவாளர்கள், ஸ்டண்ட் இயக்குநர்களை அன்றே அழைத்துவந்துவிட்ட முன்னோடி. இவர் தயாரிக்காத சினிமா வகைமையே இல்லை எனலாம். புராணத்தில் ஃபாண்டஸி, முதல் முழுநீள நகைச்சுவை சினிமா, கொலையைத் துப்புதுலக்கும் மர்டர் மிஸ்டரி படங்கள், முழுநீள ஸ்டண்ட் படம், என்று சளைக்கமல் தயாரித்தார். மலையாள சினிமாவின் முதல் பேசும்படமான ‘பாலன்’(1938) தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான ‘ அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, தமிழ் சினிமாவுக்கு ஜேம்ஸ் பாண்ட் வகைப் படங்களை அறிமுகப்படுத்தியது என அசாத்திய தன்னம்பிக்கைக்காரராக விளங்கினார்.

பல ஆங்கிலப் படங்களையும் ஆங்கில நாவல்களையும் தமிழுக்கு ஏற்ப தழுவி பல வெற்றிப்படங்களைத் தயாரித்தார். அசல் திரைக்கதைகளுக்கும், தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற கதைகளுக்கும் முழுமையான ஆதரவளித்தார். பாரதியாரின் பாடல்களை முதன்முதலில் திரைப்படங்களில் பயன்படுத்தத் தொடங்கிய ரசனைக்காரார். இவை எல்லாவற்றுக்கும் உச்சமாகத் தனது நிறுவனத்தின் பெயரால் பங்குகளை ஷேர் மார்க்கெட்டில் வெளியிட்டு ஐந்து லட்சம் திரட்டி பிரம்மாண்டப் படங்களை எடுத்தவர் என இவரது சாதனைகள் அடங்க மறுப்பவை.

புதுமை விரும்பி

இன்றைய சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1907-ம் ஆண்டு ஜூலை மாதம் 16 அன்று செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர், டி.ஆர்.சுந்தரம் என அழைக்கப்படும் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம். இவருடைய தந்தை ராமலிங்கம் பருத்தி நூல் வியாபாரி. நூற்பையும் நூல்களில் சாயம் ஏற்றும் நுட்பத்தையும் முறையாகக் கற்றுவர வேண்டும் என்று எண்ணி, பி.ஏ.முடித்திருந்த மகனை இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார்.

அப்பா விரும்பியபடியே அங்கே படித்துப் பட்டம்பெற்ற சுந்தரம் காதல் பாடத்தையும் கற்கத் தவறவில்லை. கிளாடிஸ் என்ற வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலித்து மணந்துகொண்ட அவர் கிளாடிஸ்ஸுடன் 1933-ல் நாடு திரும்பினார். தன் மகன் தனக்குப் பிறகு நூல் வியாபாரத்தைத் தொடருவான் என அவரது தந்தை நினைத்தார். ஆனால், புதுமை விரும்பியான சுந்தரத்தைத் திரைப்படக் கலை சுண்டி இழுத்தது. சினிமாதான் தனது ஆடுகளம் என்பதைக் கண்டுகொண்டார். அதன் பிறகு அவர் எங்கும் தேங்கி நிற்கவில்லை.

எதற்காக கல்கத்தா?

சுப்பராய முதலியார், வேலாயுதம் பிள்ளை ஆகியோர் நடத்திவந்த ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர் ஆன டி.ஆர்.சுந்தரம், அந்த நிறுவனத்துக்காக கல்கத்தா சென்று பல படங்களைத் தயாரித்தார். படத் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட அலைச்சல், பண விரயம், படத் தயாரிப்பில் ஏற்பட்ட கால விரயம் ஆகியவற்றைக் கண்ட சுந்தரம், ஏஞ்சல் பிலிம்ஸில் இருந்து வெளியேறி 1936-ல் ‘மார்டன் தியேட்டர்ஸ்’ என்ற பிரம்மாண்ட ஸ்டூடியோவைத் தொடங்கினார். தொடங்கிய அடுத்த ஆண்டே 1937-ல் தனது முதல் படமான ‘சதி அகல்யா’ வைத் தயாரித்தார். தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி எனப்பட்ட தவமணி தேவிதான் அந்தப் படத்தில் அகல்யாவாக நடித்தார்.

அதன் பிறகு சின்னப்பாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து, ‘உத்தமபுத்திரன்’ என்ற படத்தை இயக்கிய சுந்தரம், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டப் படம் என்று குறிப்பிடப்படும் ‘மனோன்மணி’ படத்தை இரண்டு லட்சம் செலவில் தயாரித்து ஆச்சரியப்படுத்தினார். வி.என்.ஜானகி நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’ (1947), மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களிலேயே அதிக செலவு பிடித்த படம்; பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படமும்கூட.

நினைவுச் சின்னம்

பின்னாளில் திராவிட இயக்கத்தில் தலைவர்களாகவும், கவிஞர்களாகவும், நடிகர்களாகவும் விளங்கிய பலருக்கு மார்டன் தியேட்டர்ஸ் களமாகவும் தாய்வீடாகவும் அமைந்தது. கலைஞர் மு. கருணாநிதி கதையும் கணல் தெறிக்கும் வசனங்களும் எழுத, எல்லீஸ் ஆர். டங்கன் இயக்க, அன்று வளர்ந்துவரும் நடிகராக இருந்த எம்.ஜி, ராமச்சந்திரன் கதாநாயகன் வேடம் ஏற்க சுந்தரம் தயாரித்த ‘மந்திரி குமாரி’ தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் முக்கிய படமானது.

இருமுறை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகப் பொறுப்பு வகித்து தமிழ் சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் இவர் ஆற்றிய பணிகள் பல. அவரது திரைத்துறைப் பங்களிப்பைப் போற்றும் வண்ணம், அவரது சிலை சென்னை அண்ணாசாலையில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. சேலம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ ஸ்டூடியோ வளாகம் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு வளாகமாக மாறிவிட்டது. அந்த சரித்திர சாம்ராஜ்யத்தின் நினைவுச் சின்னமாக ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ ஸ்டூடியோவின் நுழை வாயில் மட்டுமே அங்கே தற்போது எஞ்சியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in