

அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘விழித்திரு’. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா ஃபெர்ணான்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒரே இரவில் சென்னையில் நடப்பதுபோல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்துக்காக டி.ராஜேந்தர், சுப்பிரமணிய நந்தி, தமயந்தி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு அறிமுக இசை அமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார். தவிர டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன், சி.சத்யா, அல்ஃபோன்ஸ் என ஏழு இசை அமைப்பாளர்கள் இந்தப் படத்தின் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
# ஜிப்ரானின் இசைப் பயணம்
‘காற்றின் திசை எங்கும் கானம் சென்று தங்கும்’ என்பதற்கேற்ப, இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு புதிய இசைப் பயணத்துக்கு முயல்கிறார். ‘சென்னை டு சிங்கப்பூர்’ என்ற படத்துக்கு இசையமைத்திருக்கும் இவர், அந்தப் படத்தின் ஆறு பாடல்களை, வரும் ஆகஸ்ட் 12 அன்று தொடங்கி ஆறு நாடுகளில் அதுவும் சாலை வழியே சென்று வெளியிடுகிறார். சென்னையில் ஆரம்பித்து பூடான், மியான்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் வழியே பயணம் செய்து இறுதியாக சிங்கப்பூரில் முடிக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ‘வாடி வாடி என் கன்னுக்குட்டி’ என்ற பாடலின் டீசர் இப்போதே இணையத்தைக் கலக்கிவருகிறது. அறிமுக இயக்குநர் அப்பாஸ் அக்பர் இயக்கியிருக்கும் ‘சென்னை டு சிங்கப்பூர்’ படத்தில் புதுமுகங்கள் கோகுல் ஆனந்தும் அஞ்சு குரியனும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
# ஓயாத கௌதம்
சிம்புவின் நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’, தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகிய படங்களை இயக்கிவரும் கௌதம் மேனன் இந்தப் படங்கள் முடிந்ததும் ஜெயம் ரவியையும் இயக்கவிருக்கிறார் என்கிறார்கள். இந்தப் படங்கள் இல்லாமல் ‘ஒன்றாக’ என்ற தலைப்பில் மல்ட்டி ஸ்டாரர் படம் ஒன்றையும் கௌதம் மேனன் இயக்க விருக்கிறாராம். அந்தப் படத்தில் மலையாளத்திலிருந்து பிருத்விராஜ், தெலுங்கிலிருந்து சாய் சரண்தேஜ், கன்னடத்திலிருந்து புனித் ராஜ்குமார், தமிழிலிருந்து ஜெயம் ரவி ஆகிய நான்கு பேர் நடிப்பது உறுதியாகியிருக்கிறதாம். கதாநாயகிகளாக அனுஷ்கா, தமன்னா ஆகியோர் இப்போதைக்கு உறுதிசெய்யப் பட்டிருக்கிறார்களாம். நான்கு நாயகர்களும் இணைந்து ஒரு ‘ட்ரிப்’ செல்கிறார்கள். அங்கே நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் கதை என்கிறார்கள் கௌதம் வட்டாரத்தில்.
# மூன்றாவது நாயகி
‘வீரம்’வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாக அஜித்தை இயக்குகிறார் சிவா. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஒரு கதாநாயகி காஜல் அகர்வால். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க அக்ஷரா ஹாசனிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் மூன்றாவதாக ஒரு கதாநாயகி இணையவுள்ளதாகவும், அவர் அதிரடி ஆக் ஷன் காட்சிகளில் நடிக்கவிருக்கிறார் என்றும் படக்குழு வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. பல்கேரியாவில் இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
# ரிலீஸ் தேதி
தனது முதல் படத்துக்கு இரண்டு தேசிய விருதுகளை வென்று ஆச்சரியப்படுத்தியவர் ‘காக்கா முட்டை’ மணிகண்டன். வசூல் ரீதியாகவும் லாபம் தந்த படம் அது. அவரின் அடுத்த படம் ‘குற்றமே தண்டனை’. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான மணிகண்டன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டுவருகிறது. சில திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்ட இந்தப் படத்தை இம்மாதம் 25 அன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
# லட்டு கூட்டணி
‘தில்லுக்குத் துட்டு’ படத்தின் மூலம் வசூல் நாயகனாக உயர்ந்திருக்கிறார் சந்தானம். இந்நிலையில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட இயக்குநர் மணிகண்டன் இயக்க ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘நான் கடவுள்’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களைத் தயாரித்த வாசன் விஸுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் சந்தானம். நகைச்சுவை கலந்த குடும்பப் பொழுதுபோக்குப் படமாக இதை உருவாக்குகிறார்கள். கதாநாயகி, மற்ற நட்சத்திரங்கள் , படத் தலைப்பு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.