

அஜித் நடிக்கும் அவரது 57-வது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. எனவே ‘ஏகே-57’ என்று தாற்காலிகமாகத் தலைப்பிட்டுள்ளனர். இந்தத் தலைப்பு அஜித்துக்குப் பிடித்திருப்பதால் ஒரு பாதுகாப்புக்காக இதையும் பதிவு செய்திருக்கிறார்களாம்.
இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார் என்றார்கள். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு முக்கியமான கேரக்டரில் ‘பிரேமம்’ படப் புகழ் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார் என்றும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துவருவதாகவும் படத்தைத் தயாரிக்கும் ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ வட்டாரம் தெரிவிக்கிறது.
சிவா இயக்கும் இந்தப் படத்தில் இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு வெற்றி, படத்தொகுப்புக்கு ஆண்டனி எல்.ரூபன், பாடல்களுக்குக் கபிலன் வைரமுத்து ஆகியோர் பணியாற்றவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் பிரபல தெலுங்கு நாயகன் வருண் தேஜா தெலுங்கு, தமிழ் ஆகிய இருமொழிகளில் நடிக்கும் படத்தை பிரபல தெலுங்குப் பட இயக்குநர் சேகர் கம்யூலா இயக்குகிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ‘அமெரிக்கா அப்பாய்- தெலுங்கானா அம்மாய்’ எனத் தெலுங்குப் பதிப்புக்குத் தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். இயக்குநர் சேகர் கம்யூலாவின் அழைப்பை ஏற்று இந்தப் படத்துக்கான பயிற்சிப் பட்டறையில் நாயகன், நாயகி இருவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
காஜலை விஞ்சும் கேத்தரீன்!
மூன்றாவது முறையாக மலையாள நடிகைகள் இப்போதெல்லாம் நேரடியாக தெலுங்குப் படவுலகில் நடிக்க முனைப்பு காட்டுகிறார்கள். ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்தரின் தெரேசா. அல்லு அர்ஜுனுடன் ‘சரைனோடு’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார். படம் ஹிட்டாக இயக்குநர் தேஜா தனது அடுத்த படத்துக்கு கேத்தரீனை ஒப்பந்தம் செய்துவிட்டார். 'பிரதிகட்டனா' படம் விஜய சாந்தியைப் பிரபலமாக்கியது போல் தேஜாவின் படம் கேத்தரீனுக்கு அமையும் என்கிறார்கள். படத்தின் ஹீரோ ராணா டக்குபதி. ராணாவுக்கு ஜோடி காஜல் அகர்வாலாம். ஆனால், கேத்தரீனுக்குத்தான் கதையில் முக்கியத்துவம் இருக்கும் என்கிறாராம் இயக்குநர்.
கார் திருடன்!
ஒளிப்பதிவாளர், நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் தற்போது கோலிவுட்டின் வசூல் ஹீரோக்களில் ஒருவர். ‘நாளை’ படத்தின் மூலம் கவனம்பெறத் தொடங்கினாலும் ‘சதுரங்க வேட்டை’ படமே அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இதே பாணிக் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நட்ராஜ் நடித்து முடித்திருக்கும் புதிய படம் ‘போங்கு’. உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கார் திருடும் நான்கு பேர் கொண்ட குழுவின் கதைதான் இந்தப் படம். நட்டி இந்தக் குழுவின் தலைமைத் திருடர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். படத்தை இயக்கியிருப்பவர் கலை இயக்குநர் சாபுசிரிலின் மாணவரான தாஜ்.
மூன்றாவது முறையாக
‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படம் மூலம் இயக்குநர் ஆன சுசீந்திரன், நாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் கிரிக்கெட் முறைகேடுகளைப் பேசிய ‘ஜீவா’ படத்தின் மூலம் இரண்டாவது முறையாகக் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றார்கள். தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘ஜீவா’வுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
தமிழின் திரைப்படமாகும் நாவல்!
- மீரா கதிரவன்
நவீன நாவல்கள் திரைப்படமாவது மிக அரிதாகவே நடக்கிறது. தற்போது இரா.முருகவேள் எழுதிய ‘மிளிர் கல்’ நாவலுக்குத் திரை வடிவம் தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மீரா கதிரவன். ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘விழித்திரு’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் ‘மிளிர் கல்’ நாவலை மையமாக வைத்துத் தனது மூன்றாவது படத்துக்கான திரைக்கதையை எழுதிமுடித்திருக்கிறார். எழுத்தாளர் இரா.முருகவேள் மிளிர்கல்லைப் படமாக்கும் முறைப்படியான உரிமையை மீரா. கதிரவனுக்கு அளித்திருப்பதை தன் முகநூல் பக்கம் வழியாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதுபற்றி இயக்குநர் மீரா கதிரவனிடம் கேட்டபோது, “கண்ணகி நடந்த பாதையில் பயணிக்கும் கதாநாயகன், கதாநாயகி, கார்ப்ரேட் மாஃபியாக்கள், கரைவேட்டி கேங்ஸ்டர்ஸ் என விறுவிறுப்பான படமாகவும் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தைத் தரக்கூடிய படமாகவும் இருக்கும். திரைக்கதை வேலைகள் முடிந்துவிட்டதால் விரைவில் நட்சத்திரத் தேர்வு, தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வில் இறங்க இருக்கிறோம்” என்றார்.