Published : 18 Oct 2013 10:19 AM
Last Updated : 18 Oct 2013 10:19 AM

தொங்கலில் நிறுத்தும் தொலைக்காட்சி உரிமை

ஒரு தனிப்பட்ட தயாரிப்பாளர், பொதுப் பங்கு வெளீயிடு மூலம் பணம் திரட்டிப் படமெடுக்க முடிவதில்லை. ஒன்று சொந்தப் பணம் அல்லது கடன். இந்த இரண்டு வழிகளில் எதைத் தேர்வு செய்தாலும், தயாரிப்பாளர் போட்ட முதலீட்டைத் திரும்ப எடுக்கவும், லாபம் பார்க்கவும் முதன்மையான தொழில் உரிமையாக இருப்பது, திரையரங்குகளில் வெளியிடும் உரிமை.

அதற்கு அடுத்த நிலையில் தயாரிப்பாளர்களின் பொன் முட்டையிடும் வாத்தாக வளர்ந்திருக்கும் உரிமை ‘சாட்டிலைட் ரைட்ஸ்’என அழைக்கப்படும் தொலைகாட்சியில் ஒளிபரப்பும் உரிமை. பார்த்துப் பார்த்து எடுக்கும் படத்தைத் திரையரங்களில் ரசிகர்களே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்குத் தோள் கொடுக்கும் தோழனாகத் தொலைக்காட்சி உரிமை வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட தொலைகாட்சி உரிமை சமீப காலமாகத் தேளாகக் கொட்ட ஆரம்பித்திருப்பதில் திகில் பிடித்துக் கிடக்கிறது திரையுலகம்.

வியாபாரத்தின் எல்லையும் அரசியலும்

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னனிக் கதாநாயகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள், ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இயக்குனர்கள் இயக்கிய படங்கள் ஆகியவற்றுக்கு படத்தின் பட்ஜெட்டில் 40% தொகை, தொலைக்காட்சி உரிமை மூலம் தயாரிப்பாளருக்கு திரும்பக் கிடைத்து விடுகிறது என்கிறார்கள். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் உள்ள முன்னனி நடிகர்கள், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெரும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு தயாரிப்புச் செலவின் 30% முதல் 35 % தொலைக் காட்சி உரிமை மூலம் கிடைத்து விடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக முன்னனி அரசியல் கட்சிகளின் பிரச்சார ஊடங்களாக, அந்தந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் தலைவலி கொஞ்சநஞ்சமல்ல என்று கதறுகிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத தயாரிப்பாளர்கள் சிலர். “இன்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் நாயகனாக இருக்கும் அந்த முன்னனி ஹீரோவின் படம், சமீபத்தில் வெளி வந்தது. அப்போது, தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமைய ‘எங்களுக்குத்தான் தர வேண்டும்’ என்று பிடிவாதமாக நின்றார்கள். எதற்கு வம்பு என்று தயாரிப்பாளர் தரப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை அவர்களுக்கே கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், அந்தத் தொலைக்காட்சிக்கு எதிர்முகாமில் இருந்து இயங்கும் முன்னணி தொலைக்காட்சி கொடுப்பதாகச் சொன்ன தொகையைவிடப் பாதி விலைக்குக் கொடு என்றபோதுதான் ஆடிப்போனார்களாம். “இப்படிக் கேட்டால் ஒரு தயாரிப்பாளர் எப்படிக் கொடுப்பார்? நட்சத்திர சம்பளம், இயக்குனர் சம்பளம், படப்பிடிப்பு செலவு, இவற்றை, தியேட்டர் உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மூலம் வரும் விற்பனை வருமானத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, துண்டு விழாமல் இருந்தால்தானே அடுத்த படத்தை அந்தத் தயாரிப்பாளரால் எடுக்க முடியும். இப்படி கேட்ட விலைக்குக் கொடுக்காமல், நல்ல விலை கொடுத்த எதிர்முகாம் தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் உரிமையை விற்றதால் அந்தப் படத்தின் கதி என்னவானது என்பதை தமிழ்நாடே கவனித்துக்கொண்டிருந்ததுதான் எல்லோருக்குமே தெரியுமே” என்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிவர்.

அதேபோல ஒரு குறிப்பிட்ட கட்சியின் நிழலாக இயங்கும் தொலைக்காட்சியோ, அல்லது மற்ற தொலைக்காட்சிகளோ ஒரு படத்தை வாங்கிவிட்டால், மற்ற சேனல்கள் அந்தப் படத்தின், டிரைலர், பாடல்கள் என எதையும் ஒளிபரப்பரப்புவது கிடையாது. ஒரு படம் வெளியாகும்போது எல்லா தொலைக்காட்சிகள் மூலம் கிடைக்க வேண்டிய விளம்பரம், முன்னதாகவே தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்ட படத்துக்குக் கிடைக்காமல் போகிறது. ஆனால் ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமையை 99 ஆண்டுகளுக்குக் கிரயமாக எழுதி வாங்கிய பிறகு, பாடல்களைத் தனியாகப் பிரித்து ஒரு நிகழ்ச்சியாகவும், நகைச்சுவைக் காட்சிகளைப் பிரித்து ஒரு நிகழ்ச்சியாகவும், படத்தின் மற்ற் கதைப் பகுதியை வேறொரு நிகழ்ச்சியாகவும், பிரித்து ஒளிபரப்பி விளம்பர வருமானம் பார்க்கிறார்கள். உண்மையில் இப்படிச் செய்வது மிகப் பெரிய உரிமை மீறல். ஒரு முறை அல்லது சில முறைகள் மட்டுமே ஒளிபரப்பும் உரிமையாக சாட்டிலைட் உரிமையை மாற்றி அமைக்க வேண்டும். அதுவரை சேனல்களிடம் நாங்கள் பணிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கொதிக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்த முன்னாள் நிர்வாகி ஒருவர்.

கடைசிநேர மல்லுக்கட்டு

இது ஒருபுறம் இருக்க, “எரியும் வீட்டில் பிடுங்குவதில் சில தொலைக்காட்சிகளை அடித்துக் கொள்ளவே முடியாது ஒரு முழுப்படத்தையும் தயாரித்து, முடித்து பாக்கித்தொகை எதுவுமில்லாமல் படத்தை வெளியிடும் சக்தி ஒரு தயாரிப்பாளருக்கு இருந்தால், அந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை அவருக்கு பிக்ஸட் டெபாசிட் மாதிரிதான். ஆனால் படத்தின் பின் தயாரிப்பு வேலைகள், மற்றும் பாக்கிகளை, சாட்டிலைட் உரிமையை விற்று செட்டில் செய்துவிடலாம் என்று தொலைக்காட்சியைச் சார்ந்து இருக்கும்போதுதான் மாட்டிக்கொள்கிறார்கள். காரணம் கடைசி நேரத்தில் “நீங்க கொடுக்கிறதை கொடுங்க” என்று பல தயாரிப்பாளர்களைக் கதற வைக்கிறார்கள். இதனால் ஆரம்பத்தில் பேசிய தொகையிலிருந்து விலகி, அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். இப்படி சாட்டிலைட் பணத்துக்காகக் காத்திருந்து, கடைசி நேர பாக்கிகளை செட்டில் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்ட படங்கள் பல.

இதைவிடத் துயரம் சாட்டிலைட் உரிமையை வாங்கலாம் என்று முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு 5 முதல் 15 சதவிகிதம்வரை கொடுக்க வேண்டியிருக்கும் கமிஷன். இது நோகாமல் நொங்கு தின்னும் வகையைச் சேர்ந்தது. இந்த கமிஷன் கத்தியிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் படங்களும் தப்பிக்க முடியாது” என்கிறார் இன்னொரு தயாரிப்பாளர்.

சீண்டப்படாத சின்னப் படங்கள்

முன்பெல்லாம் சாட்டிலைட் உரிமையை நம்பித் துணிச்சலாகச் சின்னப் படங்களை தயாரித்த அனுபவம் மிக்க தயாரிப்பாளர்கள் தற்போது இல்லை. காரணம் முன்பு சாட்டிலைட் உரிமையை சேனலுக்கு விற்கும் முன்பே அதை வெளியே அடமானம் வைத்து பைனான்ஸ் வாங்கும் அளவுக்கு சின்னப் படங்களை சேனல்கள் மதித்தன. ஆனால், “கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியான சுமார் 400 சின்ன பட்ஜெட் படங்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்க எந்த சேனலும் முன்வரவில்லை. காரணம் பிரபலமாகாத படங்களை வாங்கி ஒளிபரப்பினால் அவற்றுக்கு விளம்பரதாரர்களின் ஆதரவு சுத்தமாக இருப்பதில்லை. பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்க மட்டும்தான் முன்னணித் தொலைக்காட்சிகள் போட்டிபோடுகின்றன. குறைந்தது 25 நாட்களாவது திரையரங்குகளில் ஓடியிருந்தால்தான் சின்னப் படங்களுக்கு விலை கிடைக்கிறது. இப்படி மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூது கவ்வும் படத்துக்கு, தயாரிப்புச் செலவை விட இரண்டு மடங்கு அதிகமாக சாட்டிலைட் உரிமையில் விலை கிடைத்த விதிவிலக்கு உதாரணமும் இருக்கிறது” என்கிறார் தொலைக்காட்சி பத்திரிகையாளரான கே. வெற்றிவேல்.

உளவும் களவும்

இன்னொரு பக்கம், தரமான உள்ளடக்கமும், விமர்சகர்களின் பாராட்டும் கிடைத்திருக்கும் பல சின்னப் படங்களையும் கைகழுவி விடுகின்றன சேனல்கள். அதற்குக் காரணம் படம் வெளியாகி சில வருடங்கள் ஆகிவிட்டதும், அவை ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருப்பதும்தான் காரணம். இவற்றையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு சேனலிலும் என்ன நடக்கிறது என்று உடனுக்குடன் உளவறிந்து சொல்லும் சிலர் ஒரு சேனலில் சாட்டிலைட் பேரம் படியாமல் வேறு சேனல் படியேறினால், அங்கே என்ன விலை பேசப்பட்டது என்பதை இந்த சேனலில் அச்சு பிசகாமல் சொல்லிவிடுகிறார்களாம். ஒரு சேனலுக்கு படத்தை போட்டுக் காட்டிவிட்டாலும், மற்றொரு சேனல் வாங்காமல் தவிர்க்கும் பழக்கமும் அதிகரித்திருக்கிறதாம். சாட்டிலைட் உரிமை விற்கப்பட்ட மாஸ்டர் பிரதியிலிருந்து, களவாடப்பட்டு, வெளிநாட்டு டிவிடி உரிமை விற்கப்படாத பல படங்கள், சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தொலைக்காட்சி உரிமை ஒரு காலத்தில் வரமாக இருந்தது. அது சாபமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் இப்போது பல தயாரிப்பாளர்களின் கவலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x