

திரைப்படம் என்பது காட்டிலிருந்து பிடித்துவரப்பட்ட சிங்கம். கூண்டிலிருந்து அதை விடுவிக்கும் 'ரிங் மாஸ்டர்'தான் எடிட்டர்!. படத்தொகுப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் இந்த சொற்றொடருக்கு 30 ஆண்டுகளைக் கடந்து அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சுரேஷ் அர்ஸ். பாலச்சந்தர், மணிரத்னம் தொடங்கி, இன்றைய பாலா வரை இயல்பை மீறாத இயக்குனர்களின் தவிர்க்க இயலாத படத்தொகுப்பாளராக இயங்கிவருகிறார். இதுவரை 500க்கும் அதிகமான படங்களை தனது கத்திரிக்கோலால் உச்சிமுகர்ந்திருக்கும் இவரது. கலையுணர்ச்சியை தேசியவிருதுகளும் தேடிவந்திருக்கின்றன.
‘ஐடொன்லா ஐடு’ கன்னடப்படதுக்காக கடந்த ஆண்டின் சிறந்த படத்தொகுப்பாளராக கார்நாட மாநில அரசின் விருதைப் பெற்றிருக்கும் நேரத்தில் தி இந்துவுக்காக செய்தியாளர் ஜெயந்தனோடு அவர் உரையாடியதன் ஒரு பகுதி…
படத்தொகுப்பை விரும்பித் தேர்ந்தெடுத்து இந்தத்துறைக்கு வரும் நிலை இருக்கிறதா? நீங்கள் எப்படி வந்தீர்கள்?
இன்று திரைப்படக் கல்லூரிகளில் படத்தொகுப்பு பாடம் இருக்கிறது. ஆனால் இயக்கம், ஒளிப்பதிவு போன்ற பிரிவுகளில் இடம் கிடக்கவில்லை என்றால்தான் படத்தொகுப்பை எடுத்துப் படிக்க முன்வரும் நிலை இருக்கிறது. ஆனால் பயந்து விலகிச் செல்ல வேண்டிய துறையல்ல படத்தொகுப்பு. நான் சினிமாவில் நுழையக் காரணம் எனது அண்ணன்.சுந்தரகிருஷ்ணா. கன்னடத் திரையில் அவருக்கு நடிகர், குரல் நடிகர், இயக்குநர், என்று பல முகங்கள் உண்டு. அவர் என்னை ஒளிப்பதிவாளர் ஆக்க விரும்பினார். ஆனால் அதற்கு வாய்ப்பு அமையவில்லை. உதவி இயக்குனராக வாழ்க்கையை ஆரம்பித்தேன். பிறகு படத்தொகுப்பு என்னைக் கவர்ந்தது.
எண்பதுகளில் உலக சினிமாவுக்குப் பங்களிப்பு செய்துகொண்டிருந்த கிரிஷ் கர்னாட், காஸரவள்ளி, விவி. காரந்த், பிரேம் காரந்த், நாகாபரணம், டீ.எஸ். ரங்கா போன்ற கன்னட இயக்குநர்களின் படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, தமிழ் சினிமா அழைத்துக்கொண்டது. அப்படி இங்கே வந்தவன், தமிழ்நாட்டையே என் வீடாக ஏற்றுக்கொண்டு இங்கேயே தங்கிவிட்டேன். வந்தவர்களை அங்கீகரிப்பதில் தமிழ்மக்களின் மனம் விசாலமானது. அவர்களது அன்புக்கு அணைபோட முடியாது. அதற்கு நான் எடுத்துக்காட்டு.
கலைப் படங்கள் மற்றும் வெகுஜனப் படங்களுக்குப் பாணியாற்றும்போது என்ன வேறுபாட்டை உணர்ந்திருக்கிறீர்கள்?
கலைப் படங்களில் வர்த்தக அம்சங்கள் என்பதே இருக்காது. அவற்றில் இருப்பதெல்லாம், கதை, இயக்குனரின் திரைக்கதைத் திறன், காட்சிகளைக் கையாண்ட விதத்தில் இயக்குனரின் ஆளுமை, நடிகர்களின் திறமை, ஒளிப்பதிவாளரின் திறமை, இசையமைப்பாளரின் திறமை இந்த அம்சங்கள்தான் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஷாட்டும் கதை சொல்லும். ஷாட்கள் குறைவாக இருக்கும். வர்த்தகப் படங்களில் இருப்பதுபோல ஷாட்ஸ் இருக்காது. முக்கியமாக இசை மூலம் கதை சொல்வதைக் குறைத்துக்கொண்டு நடிகர்களின் வெளிபடுத்தும் திறன் வழியாகக் கதை சொல்லும் முயற்சி முழுமையாக இருக்கும். மிகச் சுலபமாக ஒரு காட்சியையோ, ஷாட்டையோ வெட்டி எறிந்துவிட முடியாது. அதே நேரம், இசையமைப்பாளருக்கும் சரியான இடங்களில் அவருக்கான வெளியை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அது படத்தொகுப்பாளரின் கையில்தான் இருக்கிறது. அதேபோலக் கதாபாத்திரங்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் இயக்குனர் விரும்பும் நீளத்தில் நாம் நிலைநிறுத்த வேண்டும். ஒரு கதாபாத்திரத்தின் வளர்ச்சி கலைப் படங்களில் 12 ரீலிலும்கூட இருக்கலாம். ஆனால் அதன் வீழ்ச்சியை ஒரே காட்சியில் அழுத்தமாகப் பதிவு செய்ய இயக்குனர் விரும்பலாம். அதைப் புரிந்துகொண்டு செயல்படுவது முக்கியம். முக்கியமாக எந்த ஒரு ஷாட்டும் பார்வையாளரின் படம் பார்க்கும் அனுபவத்தைத் துண்டிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
திரைக்கதையாக இருக்கும்போதே அதைத் தேவையான அளவு 'பேப்பர் எடிட்' செய்துவிட வேண்டும் என்று சொல்லப்படுவதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?
நான் முரண்படுகிறேன். ஒரு திரைக்கதை பேப்பரில் இருக்கும்போது அதை முழுமையாக எடிட் செய்வது புத்திசாலித்தனம் அல்ல. ஒரு படைப்பாளி என்ன நினைக்கிறாரோ அதையெல்லாம் முதலில் காட்சிகளாக எடுத்துவிட வேண்டும். காரணம் காகிதத்தில் இருக்கும்போது ஒரு காட்சியை வாசித்தால், அட இவ்வளவுதானா இந்த சீன் என உப்புச்சப்பில்லாமல் இருக்கலாம். அதற்குக் காட்சி வடிவம் கிடைக்கும்போது அதுவே மிகச் சிறந்த காட்சியாக அமைந்துவிடலாம். அதேபோல எழுத்தில் படித்து ஒரு காட்சியைக் கற்பனைசெய்து பார்க்கும்போது நன்றாக இருக்காலம். மிக மோசமான காட்சிப்படுத்தல் காரணமாக அது மிகச் சுமாரான ஒரு காட்சியாக ஆகிவிடலாம். பிறகு படத்திலிருந்தே அதை எடுக்க வேண்டிவரும். எனவே ஒரு படைப்பாளியின் கற்பனையைக் காகிதத்தில் வெட்டுவது சரியான முறையல்ல.
சில படங்களில் “எடிட்டர் பின்னிட்டார்ப்பா..!” என்று ரசிகர்கள் வியந்து சொல்வதுண்டு. அது படத்தொகுப்பா?
கண்டிப்பாக இல்லை. படத்தொகுப்பு என்றில்லை; ஒளிப்பதிவு சூப்பர், கலை இயக்கம் சூப்பர், இசை அருமை என்று ரசிகன் உணருவதில் தவறில்லை. ஆனால் கதையையும் கதாபாத்திரங்களின் தாக்கத்தையும் மீறி, தொழில்நுட்பம் துருத்திக்கொண்டு தெரிந்தால் அது தேர்ச்சிபெற்ற கலையாளுமை அல்ல. ஒட்டுமொத்தமாகப் படம் சூப்பர் என்று விமர்சனம் வந்தால், அதில் அனைவரும் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு துறையை மட்டும் குறிபிட்டுப் பேசினால் இயக்குநர் தன் ஆளுமையைச் செலுத்தவில்லை என்று அர்த்தம்.
உங்களது மேசையில் குப்பையாக வந்து விழும் படங்கள்தான் உங்களுக்குச் சவாலா?
உண்மையில் அதுதான் மிகச் சுலபமானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கும் மெயின் ஸ்ட்ரீம் படங்களை எடிட் செய்வதுதான் சவாலானது. குப்பையான படங்களுக்கு மக்கள் ஆதரவு எப்போதுமே இருக்காது.
படத்தொகுப்பாளர்கள் தங்களுக்கென்று பாணியை உருவாக்கிவிட்டதாகச் சொல்லப்படுவதை நம்புகிறீர்களா?
அப்படிச் சொல்வது ஏமாற்று வேலை. சினிமா இயக்குநரின் மீடியம். இதில் படத்தொகுப்பாளர் தனது பாணியைத் திணிக்க முயல்வது, அத்துமீறல். கதை சொல்லும்முறையில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஒரு பாணி இருக்கும். அதைப் படத்தொகுப்பாளர் சிதைப்பதைவிட, அவர் இயக்குநராக மாறிவிடுவது நல்லது. என்னைப் பொறுத்தவரை முன்னணி இயக்குனர், அறிமுக இயக்குனர் யாராக இருந்தாலும் சரி, இயக்குனரின் கதை என்ன, அதில் அவர் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்த நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதிலேயே குறியாக இருப்பேன். எனது இயக்குநரின் எதிர்பார்ப்பதைப் பூர்த்திசெய்வதுதான் எல்லாப் படங்களிலுமே எனது நோக்கம். பாலச்சந்தர், மணிரத்னம், பாலா, சேரன் என்று நான் பணியாற்றிய இயக்குனர்கள் அனைவருமே தாங்கள் கையாளும் கதைக்குத் தகுந்த மாதிரிதான் படத்தொகுப்பை அணுகுவார்கள். அவர்கள் விரும்பும் ஸ்டைலை அந்தப் படத்தில் அப்படியே பின்பற்றுவேன்; அவ்வளவுதான். இதில் வேறு எந்த ரகசியமும் இல்லை. இயக்குநர்களை மீறிச் செல்லாத படத்தொகுப்பை நான் பின்பற்றுவதால்தான் என்னால் நீடித்து நிற்க முடிகிறது. இயக்குநரின் காட்சிப்படுத்தலைச் சிதைக்கவோ, திசைதிருப்பவோ செய்யும் உத்திகளைக் கையாள்வது, அந்தப் படத்தின் ஆன்மாவைக் கெடுத்துவிடும்.
சமீபத்தில் நீங்கள் வியந்து பாராட்டிய படத்தொகுப்பு?
சுந்தரபாண்டியன்.