

‘சித்து ப்ளஸ் 2’ தொடங்கி ‘அம்மாவின் கைபேசி’ வரை பல வண்ணங்களில் அமைந்த கதைகளில் நடித்தாலும் பாக்யராஜின் மைந்தர் சாந்தனுவுக்கு ரசிகர்களின் ஆதரவு கிட்டாத நிலையே இருந்துவந்தது. ‘வாய்மை’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ஆகிய படங்களுக்குப் பிறகு எழுந்து வந்திருக்கிறார் சாந்தனு. இந்தப் படங்களில் அவரது நடிப்பு, நடனம் இரண்டுமே பாராட்டப்பட்டுவரும் நிலையில், தற்போது அவரை முன்னணி வரிசைக்குக் கொண்டுவரும் படமாக உருவாகிவருகிறதாம் ‘முப்பரிமாணம்’.
இயக்குநர்கள் பாலா, கதிர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அதிரூபன் இயக்கிவரும் இந்தப் படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ். “சாந்தனு மூன்று விதமான தோற்றங்களில் மட்டுமல்ல; மூன்று விதமான பரிமாணங்களில் நடித்திருக்கிறார். அவரை இந்தப் படத்தில் வேறு விதமாகப் பார்க்கலாம்” என்கிறார் இயக்குநர்.
லைட்மேன்களின் வாழ்க்கை
ஒரு திரைப்படம் உருவாக முகம் தெரியாத பல தொழிலாளர்களின் உழைப்பு தேவைப்படுகிறது. அப்படிப் பட்டவர்களில் முக்கியமானவர்கள் லைட்மேன்கள் ஒளியுடனான அவர்களது வாழ்க்கை முதல் முறையாகத் தமிழ் சினிமாவில் திரைப்படமாகியிருக்கிறது ‘லைட்மேன் - சில்ரன் ஆஃப் லைட்’ எனத் தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஜி.வெங்கடேஷ்குமார்.
விருதுக்கான நடிப்பு
சின்னத்திரையில் பிரபலமான கதாநாயகியரில் ஒருவர் சான்ட்ரா எமி. இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் சாண்ட்ராவின் நடிப்புக்கு விருதுகள் உறுதி என்கிறார்கள் ஊடக வட்டாரத்தில். சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறாராம் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் யுரேகா.
ஜல்லிக்கட்டு சினிமா
‘வடம் ஜல்லிக்கட்டு’ என்ற வழக்கொழிந்த வீரவிளையாட்டுக்குக் கதையில் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்து உருவான ‘இளமி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், ஜல்லிக்கட்டை மட்டுமே மையப்படுத்திய திரைப்படங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவரவில்லை. தற்போது அதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. அமீர் இயக்கத்தில் ஆர்யா, அவரது தம்பி சத்யா ஆகிய இருவரும் நடிக்கும் ‘சந்தனத்தேவன்’, ‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ ஆகிய இருபடங்களும் ஜல்லிக்கட்டையே கதைக் களமாகக்கொண்டு உருவாக இருக்கின்றன.
குறும்படத்தில் தன்ஷிகா!
புகழ் பெற்ற பிறகு எந்த முன்னணி நட்சத்திரமும் குறும்படங்களில் நடிப்பதில்லை. ஆனால் தன்ஷிகா இதில் விதிவிலக்கு. 25 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார் தன்ஷிகா. இந்தக் குறும்படம் பற்றி அதன் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி கூறும்போது, “மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு பாலியல் தொழிலாளிப் பெண்ணைச் சந்திக்கிறார் ஒரு பெண் ஆவணப்பட இயக்குநர். அந்தத் தொழிலில் தள்ளப்பட்ட காரணத்தை அறிந்துகொள்ளும் இயக்குநர், இறுதியில் யாரால் அவள் இந்த நிலைக்குள்ளானாள் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இதுதான் கதை. உண்மை நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு இந்தக் குறும்படத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.
மேலும் ஒரு மலையாள வரவு
மலையாளக் கதாநாயகிகளால் நிறைந்திருக்கும் கோலிவுட்டுக்கு மேலும் ஒரு புதுவரவு. கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகும் அனு இம்மானுவேல்தான் அவர். மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ பட கதாநாயகி அதிதி ராவ் இந்தப் படத்துக்காக முதலில் அழைக்கப்பட்டாராம். ஆனால், தற்போது அனு இம்மானுவேல் நடிக்கவிருப்பதை ‘துருவ நட்சத்திரம்’ படக்குழு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்திவிட்டனர். ‘பிரேமம்’ படத்தைத் தொடர்ந்து நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இந்த அனு. சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகி ஆகியிருக்கிறார். இவருடைய அப்பா தங்கச்சன் மலையாள சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்.