

ஒன்றிரண்டு உலக சினிமா பார்த்தவர்கள்கூட உச்சரிக்கும் உன்னதமான பெயர் அகிரா குரோசவா. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திரைப்பட இயக்குநர்களைப் பாதித்த மாபெரும் திரைச் சிற்பி. இன்று தமிழ் சினிமாவில் தனித்துவத்துடன் இயங்கத் துடிக்கும், மிஷ்கின் அகிரா குரோசவாவைத் தன் குரு என்கிறார். ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’‘ஒன்பது ரூபாய் நோட்டு’ ஆகிய உருப்படியான படங்களை எடுத்த தங்கர்பச்சானும் ‘குரோசவாதான் எனது ஆசான்’ என்று ஸ்டேட்டஸ் தட்டுகிறார்.
வன்முறையும் இயற்கையும்
குரோசவாவை ஆதர்சமாக எடுத்துக்கொண்டாலும் அதைப் பிரகடனப்படுத்தாமல் தனது காட்சிகளில் அவரின் பாதிப்பை முன்வைக்கும் இன்னொரு தமிழ் இயக்குநர் பாலா. அவரது படங்களில் இருக்கும் கச்சாத்தனம் மிகுந்த வன்முறைக்கான ஆதர்சம் அகிராதான் என்பதைக் கூர்ந்து கவனித்தால் கண்டுகொள்ளலாம். உலகப்போருக்குப் பிறகான வெறுமை நிறைந்த வாழ்க்கையில் நுழைந்த வன்முறையை முன்வைக்கும் அகிரா குரோசவா தனது எல்லாப் படங்களிலும் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை வலியுடன் எடுத்துவைக்கத் தவறவில்லை. இயற்கையின், இருத்தலியலின் நேசர் அவர்.
‘இயற்கையை விட்டு விலகிச்சென்றால் மனிதன் வன்முறை விலங்காகிவிடுவான்.’ என்கிற அகிரா தன் படங்களில் காட்சிகளால் பேசிய உயரிய கலைஞன். அறுபதுகளின் இறுதியிலும் 70-களின் தொடக்கத்திலும் ஹாலிவுட்டுக்குள் புதிய அலையாக நுழைந்த ஜார்ஜ் லூகாஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பிரான்சிஸ்போர்ட் கப்போலோ உட்பட பத்துக்கும் அதிகமான சாதனையாளர்களின் ஆதர்சமாக அகிரா குரோசோவா இருந்ததை அவர்களே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஒருபடி மேலே சென்று ‘மாஸ்டர் ஆஃப் விஷுவல்ஸ்’என்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இப்படித் உலகத் திரைவரலாற்றின் கலங்கரை விளக்கமாக மாறிநிற்கும் அகிரா குரோசாவின் படங்களை காப்பியடித்த கதைகள் உலகம் முழுவதும் உண்டு. இத்தாலி, ரஷ்யா, அமெரிக்க, ஜெர்மானிய இயக்குநர்கள் அவர்களது படங்களைத் தழுவியும் உருவியும் உருவாக்கிய படங்கள் ஏராளம். இன்றும் அகிராவின் படங்கள், அவர் அறிமுகப்படுத்திய திரைக்கதை உத்திகள், வடிவமைத்த காட்சிகளின் கட்டமைப்பு ஆகியவற்றின் பாதிப்பில் உருவாகும் படங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. என்றாலும் ஒரு காப்பியை மட்டும் நாம் உருப்படியாக இங்கே காணலாம். இது காப்பியடித்த கலைஞரை மட்டந்தட்ட அல்ல; ‘கவுரமான காப்பி’ நல்லது என்பதை எடுத்துக்காட்டவே…
கௌபாய் துப்பாக்கியின் நெருப்பு
அகிரா குரசோவாவை வாய்ப்பு அமையும்போதெல்லாம் புகழ்ந்துகொண்டிருந்த ஸ்பீல்பெர்க்கிடம் அவருக்கு இணையான இன்னொரு திரைப்பட இயக்குநரைச் சொல்ல முடியுமா என்று கேட்டபோது அவர் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்ன பெயர், செர்ஜியோ லியோனி (Sergio Leone). அகிராவுக்கு இணையாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய இத்தாலிய சினிமாவின் தன்னிகரற்ற கலைஞன். ஸ்பீல்பெர்க் இப்படி ஃபீல் செய்து சொன்னதால் செர்ஜியோ லியோனி இயக்கியதெல்லாம் உலகத்தரமான கலைப்படங்களாக இருக்குமோ என்று எண்ணிவிடாதீர்கள்.
செர்ஜியோ லியோன் ஒரு கௌபாய் ஸ்பெஷலிஸ்ட். அவர் இயக்கிய பெரும்பாலான வெஸ்டர்ன் படங்கள் கௌபாய் உலகில் நிகழும் கற்பனையான சாகசங்களை முன்னிறுத்தும் அதிரடி ஆக்ஷன் படங்கள். அவரது இயக்கத்தில் வெளியான ‘The Good, the Bad and the Ugly’ திரைப்படத்தை எழுபதுகளின் சென்னை, மதுரை, கோவை இளைஞர்கள் விழுந்து விழுந்து பார்த்தார்கள் என்கிறார் மூத்த சினிமா வரலாற்றாசிரியரான ராண்டார் கை. வாயில் சுருட்டுப் புகைந்தபடி, இறுக்கமான முகத்துடன் வாட்டசாட்டமான குதிரையில் ஏறி வந்து மின்னல் வேகத்தில் எதிரிகளைச் சுட்டு வீழ்த்தும் கௌபாய் நடிகர் கிளிண்ட் ஈஸ்வுட்டை உலக ரசிகர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்திய இயக்குநர்.
இவரது படங்களின் பாதிப்பில் ‘எங்க பாட்டன் சொத்து’, ‘நான்கு கில்லாடிகள்’ என்று முதுபெரும் இயக்குநர் கர்ணன் பல படங்களை இயக்கித் தயாரித்திருக்கிறார். இந்தியிலும் அப்போது லியோனியின் படங்களால் கௌபாய் நெருப்பு பற்றி எரிந்திருக்கிறது.
வாளுக்கு பதிலாகத் துப்பாக்கி
அப்படிப்பட்ட லியோனியை கௌபாய் படங்களின் பிரம்மாவாக அடையாளம் காட்டிய அவரது முதல் கௌபாய் படம் 1964-ல் இத்தாலிய மொழியில் வெளியான ‘A Fistful of Dollars’ (ஒரு கைப்பிடியளவு டாலர்கள்). இத்தாலியில் சூப்பர் டூப்பர் ஹிட்டித்த கையோடு ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டது சாதனையாகப் பதிவாகியிருக்கிறது. அந்தப் படத்தின் கதை, அகிரா குரோசவாவின் இயக்கத்தில் உருவாகி 1961-ல் வெளியான ‘யோஜிம்போ’வின் (Yojimbo) காப்பி.
ஆனால், அகிரா சித்தரித்திருந்த சாமுராய்களின் உலகை. லியோனி அப்படியே மேற்குலக கௌபாய்களின் வாழ்க்கையாக மிகத் திறமையாக ஆனால், கவுரமாக உருமாற்றம் செய்திருந்தார். சாமுராய்களின் வாளுக்குப் பதிலாக கௌபாய்களின் கைகளில் துப்பாக்கி. இருந்தும் என்ன செய்ய ‘யோஜிம்போ’வின் அடிப்படைக் கதையமைப்பை அவரால் மாற்றமுடியாததால் காப்பி விவகாரம் அன்றைய பத்திரிகைகளுக்கும் விமர்சகர்களுக்கும் சூடான விவாதம் ஆகியது. குரோசவாவிடம் அனுமதி பெறாத லியோனியை வறுத்து எடுத்தார்கள். ‘யோஜிம்போ’வின் தாக்கத்தில் உருவானது என்றுகூட டைட்டிலில் போடாது ஏன் என்று எழுதுகோல் சாட்டையைச் சொடுக்கினார்கள்.
காப்பியால் வளர்ந்த கலை
படம் தோல்வி அடைந்திருந்தால் இப்படித் தேரை இழுத்துத் தெருவில் விட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இந்த கதை காப்பி விவகாரம் குரோசவாவின் கவனத்துக்கு வந்ததும் விமர்சிப்பதையெல்லாம் விட்டுவிட்டு லியோனி மீது வழக்குத் தொடுத்தார் அகிரா. வழக்கின் முடிவில் கவுரவமான தொகையை நஷ்ட ஈடாகவும் பெற்றார். ஆனால், காப்பியடிக்கப்பட்ட அந்தப் படமே திரைக்கலையின் வண்ணத்தை மாற்றி எழுதியது. வெஸ்டர்ன் கௌபாய் படங்களை வெறும் சாகசப் படமாக மட்டும் காணாமல் கலாபூர்வமான படங்களின் ஒரு வகையாகவும் அவற்றை வளர்த்தெடுக்க உதவியது இந்த காப்பி. அதுவரை மூன்று அங்கமுறை என்ற நாடகத்தனம் மிகுந்த அரதப் பழசான திரைக்கதை உத்தியைக் உதறிவிட்டு எங்கிருந்து வேண்டுமானாலும் கதையைத் தொடங்கலாம் என்று திரைக்கதைக்குப் பாதையைக் காட்டியது.
அலட்டல் இல்லாத ஆனால் ஸ்டைலான கதாபாத்திர வடிவமைப்பு, அதிக வசனங்கள் இல்லாமை, வெட்டிப் பாய்ந்து செல்லும் ‘கட் அவே’ படத்தொகுப்பு, கதாபாத்திரங்களின் மனநிலையை வார்த்தைகளின்றி வெளிப்படுத்தும் காட்சிக்கோணம், பரந்த நிலப்பரப்பைக் காட்டும் விரிகோணக்காட்சிகள், லார்ஜ் ஸ்கேல் கம்போசிங் எனக் கொண்டாடப்பட்ட சிம்பொனி இசையை அரங்கிலிருந்து திரைப்படத்தின் பின்னணி இசையாக உயர்த்திக்காட்டிய என்னியோ மாரிகோணி என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியது, தொலைக்காட்சி நடிகர்களைத் திரையில் சூப்பர் ஸ்டார் ஆக்கியது (க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அப்படி உருவானவர்தான்) என்று செர்ஜியோ லியோனி எனும் மிகப்பெரிய கலைஞன் இந்த காப்பி வழியே சாத்தியப்படுத்திய இந்த சுவாரஸ்யங்கள் புதிய சோதனைகளுக்குக் காரணமாகவும் களமாகவும் அமைந்தன.
லியோனியைத் பின் தொடர்ந்து அங்கே டரண்டினோ எனும் கலைஞர் உருவானார். தமிழ் உட்பட உலகம் முழுவதும் பலமொழிகளில் இந்தப் பாதிப்பு திரைப்படக்கலை அடுத்த கட்டத்தை எட்ட அடித்தளம் அமைத்தது. ஆக மொத்தத்தில் காப்பி நல்லது. ஆனால், தாக்கத்தை ஏற்படுத்திய அசல் குறித்து கவுரவத்துடன் குறிப்பிடுவதே அந்தப் படைப்பாளிக்குச் செலுத்தும் மரியாதை.