‘நடிப்பில் ஒரு கை பார்க்க வேண்டும்’ - தேஜ் சரண்ராஜ் பேட்டி

‘நடிப்பில் ஒரு கை பார்க்க வேண்டும்’ - தேஜ் சரண்ராஜ் பேட்டி
Updated on
2 min read

திரையில் கண்டதும் ரசிகர்களை மிரளவைத்த வெகுசில வில்லன் நடிகர்களில் ஒருவர் சரண்ராஜ். தென்னிந்திய மொழிகள் தாண்டி இந்தியிலும் கால்பதித்த சரண்ராஜின் மகன் தேஜ், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆறடி உயரம், காற்றில் அலையும் கேசம், ஊடுருவும் பார்வை எனக் கம்பீரமான தோற்றத்தில் இருந்தவர் பணிவான குரலில் அளவான வார்த்தைகளில் அடக்கமாகப் பேசுகிறார்.

ஒரு பிரபலமான நடிகரின் மகன் என்பது எத்தனை வயதில் தெரியும்? உங்கள் அப்பாவை வில்லன் கதாபாத்திரங்களில் கண்டபோது சிறுவயதில் என்ன நினைத்தீர்கள்?

அப்பா நடிகர் என்பதே 8 வயதில்தான் தெரியும். 9-ம் வகுப்பு படிக்கிறபோது ‘ஜெண்டில்மேன்’ படத்தை முதல் முறையாகப் பார்த்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு அப்பா நடித்த படங்கள் தொலைக்காட்சியில் வந்தால் பார்க்க உட்கார்ந்துவிடுவேன். ரஜினி சாருடன் அப்பா சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன். நெகட்டிவ் ரோல்ஸ், கேரக்டர் ரோல்ஸ் எதுவாக இருந்தாலும் அப்பா கமிட்மெண்டுடன் நடித்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். பாலிவுட் வரை அவர் போக முடிந்ததற்கு இந்த கமிட்மெண்ட் தான் காரணம் என்று நம்புகிறேன்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா?

சினிமாவில் நடிக்க எனக்கு விரும்பம் இல்லை. முதலில் படிப்பு, அடுத்து பேட்மிண்டன் விளையாட்டு இந்த இரண்டிலும்தான் எனது கவனமெல்லாம் இருந்தது. நான் இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என அம்மா விரும்பினார். ஆனால், ப்ளஸ் டூ முடித்ததும் “படிப்பு உனக்குப் போதும்… வா.. உன்னைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்..” என்றார் அப்பா. நான், வீட்டுக்கு ஒரு பிலிம் ஸ்டார் போதுமே என்றேன். அவர் விடுவதாக இல்லை “எல்லோருக்கும் சினிமா அருகில் வருவதில்லை.. அது என் உருவத்தில் உன் பக்கத்திலேயே இருக்கிறது” என்று எடுத்துச் சொன்னார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது? நான் நடிக்க வேண்டுமானால் முதலில் நடிப்பை ஒழுங்காகக் கற்றுக்கொண்ட பிறகே அதில் இறங்குவேன் என்றதும் என்னை பாலு மகேந்திரா சாரிடம் அழைத்துச் சென்றார். அவரது ‘சினிமா பட்டறை’ பள்ளியில் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். பாலு மகேந்திரா சாரின் பேச்சுகளும் அவர் சினிமா பற்றி கூறிய விஷயங்களும் விலை மதிக்க முடியாதவையான இருந்தன. எனக்கு சினிமா இயக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகி விட்டது.. இதனால் விருப்பத்துடன் விஸ்காம் படித்து முடித்தேன்.

இயக்குநராக விரும்பி இப்போது நடிகராகியிருக்கிறீர்களே?

நடிப்போ இயக்கமோ மகன் சினிமாவில் இருக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் கனவு. அதனால் என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துவிட இயக்குநர் லிங்குசாமியிடம் என்னை அழைத்துச்சென்றார் அப்பா. என்னைப் பார்த்த லிங்குசாமி “இவன் ஒரு ஹீரோ மெட்டிரியல்... அவனை வீணாக்கிவிடாதீர்கள். முதலில் ஹீரோவாக்குங்கள். படங்களில் நடிக்கும் அனுபவமே அவரை இயக்குநராக்கிவிடும்” என்று எடுத்துக் கூறினார்.

என்னைப் பார்க்கிற நண்பர்களும், அப்பாவின் நண்பர்களும் “எப்போ ஹீரோ வேஷம்?” என்று கேட்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் என்னை நடிகனாக உணர ஆரம்பித்தேன். ரகுராம் மாஸ்டரிடம் நடனம், பாண்டியன் மாஸ்டரிடம் ஃபைட் என்று என்று என்ன தேவையோ எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தயாரானேன். நான் நடிக்கப்போகிறேன் என்றதும் நிறைய உதவி இயக்குநர்கள் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார்கள். சரண்ராஜ் பையன் என்றால் நாலு பைட், நாலு பாட்டு இருக்கும்படி கதை சொன்னால் போதும் என்றுதான் எல்லோரும் வந்தார்கள். எனக்கு அதுமாதிரியான கதைகளில் விருப்பம் இல்லை.

நல்ல நடிகன் என்று முதலில் பெயர் வாங்க வேண்டும் என்று கடந்த இரண்டு வருடமாக காத்திருந்தபோதுதான் ‘லாலி லாலி ஆராரோ’கதையுடன் வந்தார் இயக்குநர் லிங்கன் ராஜாளி. நான் அம்மா பிள்ளை. எனக்காகவே எழுதப்பட்ட கதைபோல அமைந்துவிட்டது இந்தப் படத்தின் கதை.

என்ன கதை?

அம்மாதான் உலகம் என்று வாழும் ஒருவனது வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் பெரும்புயல்தான் கதை. லாலி என்ற கதாபாத்திரம் எனக்கு. எனக்கு அம்மாவாக லட்சுமிபிரியா மேனன் நடித்திருக்கிறார். மிகச் சிறந்த கலைஞர் அவர். தாய்க்கும் மகனுக்குமான கெமிஸ்ட்ரி இந்தக் கதைக்கு மிகவும் முக்கியம். அது எங்களிடையே அமைந்தது வரம். கதாநாயகியாக ஷிவானி அறிமுகமாகிறார். அவருக்கும் இதுதான் முதல்படம். நாகர்கோவில், கேரளாவில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம்.

சமீபத்தில் ரஜினியை சந்தித்தீர்களே?

அப்பாவும் அவரும் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். என்னைப் பார்த்துமே “உன்னோட உயரம் 6.1, சரியா?” என்றார். நான் ஆடிப்போய்விட்டேன். அதுதான் என் உயரம். படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, அந்த கேரக்டரை உண்மையிலேயே நீ செஞ்சியா?” என்று தட்டிக்கொடுத்து ‘ஆல் த பெஸ்ட்’சொன்னார். “படம் ரெடியானதும் நான் பார்க்க வருவேன்” என்றார். அவரைப் பார்த்ததும் கிடைத்த எனர்ஜியில் நடிப்பில் ஒரு கை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கு ரசிகர்கள் தரும் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in