

தங்கர் பச்சானின் கதைக்காகவே ‘களவாடிய பொழுதுகள்’ படத்தில் விருப்பத்துடன் நடித்தார் பிரபுதேவா. அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அதன் வெளியீடு தள்ளிப் போய்விட்டது. தங்கர் பச்சான் – பிரபுதேவா கூட்டணி அந்தப் படத்தை இன்னும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் பிரபுதேவாவுக்குப் பெரிய வெற்றியாக அமைந்துவிட்டது ‘தேவி’.
அதைத் தொடர்ந்து பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எங் மங் சங்’. எம்.எஸ்.அர்ஜுன் இயக்கும் இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு அப்பாவாக நடிக்கிறார் தங்கர் பச்சான். பிரபுதேவாவுக்கு ஜோடி லட்சுமி மேனன். எங்க நாராயணன், மங்களம், சங்கர் ஆகிய மூன்று இணைபிரியா நண்பர்களின் நகைச்சுவை கலாட்டா என்பதால் படத்துக்கு ‘எங் மங் சங்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
அடுத்த ‘ஈட்டி’
தடகள விளையாட்டு வீரனைச் சுற்றி நடக்கும் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஈட்டி’ என்ற விறுவிறுப்பான படத்தை எடுத்த ரவியரசு தற்போது அடுத்த ஈட்டியை வீசத் தயாராகிவிட்டார். படத்துக்குத் தலைப்பு ‘ஐங்கரன்’. காதல் கலந்த ஆக் ஷன் திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். நர்ஸ் கதாபாத்திரம் ஏற்கவிருக்கும் மகிமாதான் இவருக்கு ஜோடி.
மீண்டும் சோனாக்ஷி
‘லிங்கா’ படத்தின் மூலம் தமிழில் நடித்தார் சோனாக்ஷி. அதன் பிறகு எந்தத் தமிழ் படத்துக்கும் அவர் அழைக்கப்படவில்லை. ஆனால் தமிழ் இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘அகிரா’ என்ற இந்திப் படத்தில் அக்ஷன் நாயகியாக நடித்து அசத்தினார். தற்போது மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இம்முறை இந்திக்குப் பதிலாக தமிழ்ப் படம். லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி மீண்டும் உறுதியாகியிருக்கும் நிலையில், அந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம் சோனாக்ஷி.
மலையாளம் பேசும் விஷால்
தமிழைத் தவிர மற்ற மொழிகளில் தயாராகும் நேரடிப் படங்களில் விஷால் இதுவரை நடித்ததில்லை. முதல்முறையாக மோகன்லாலுடன் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க இருக்கிறார். மோகன் லாலை வைத்து ‘கிராண்ட் மாஸ்டர்’ என்ற படத்தை இயக்கிய பி.உன்னிகிருஷ்ணன் அடுத்து இயக்கும் மலையாளப் படத்தில்தான் முக்கியக் கதாபாத்திரம் ஏற்கிறார் விஷால்.
சங்கமித்ரா ஹாசன்!
ஸ்ரீ தேனாண்டான் பிக்ஸர்ஸ் நிறுவனம் 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. இதில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என இயக்குநர் வட்டாரத்தில் கூறப்பட்டது. தற்போது ‘சங்கமித்ரா’ என்ற படத்தின் டைட்டில் ரோலில் நடிக்க ஸ்ருதி ஹாசன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று நம்பகமான தகவல். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
நரகாசுரன்
‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கி விமர்சகர்கள், பாக்ஸ் ஆபீஸ் ஆகிய இரண்டு வட்டாரங்களிலும் பாராட்டுகளைக் குவித்தவர் கார்த்திக் நரேன். இந்த 21 வயது இளைஞர் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘நரகாசுரன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறாராம். அந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் தயாரிக்க இருக்கிறார் என்று நம்பகமான தகவல்.
குதிரையின் வேகம்
லாட்டரி தடைசெய்யப்பட்டுவிட்டாலும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் பல குடும்பங்களை அழித்துவரும் குதிரைப் பந்தயம் ஒரு சூதாட்டமாக இன்னும் தமிழகத்தின் சென்னை, கோவை, உதகை ஆகிய ஊர்களில் நடத்தப்பட்டுவருகிறது. ஆனால், குதிரைப் பந்தயத்தின் தீமையைப் பற்றித் தமிழில் அதிக படங்கள் வந்ததில்லை. எனவே குதிரைப் பந்தயத்தை மையப்படுத்தி இயங்கும் நிழலுலகை ‘என்னோடு விளையாடு’ படத்தின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் அறிமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி.
“குதிரையின் வேகத்தையே விஞ்சும் திரைக்கதையுடன் ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்காக அரசு அனுமதி பெற்று நிஜ பந்தயக் குதிரைகளை வைத்துப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர். பரத், சாந்தினி, ‘மதயானைக் கூட்டம்’ கதிர், ‘சூது கவ்வும்’ சஞ்சிதா என இரண்டு ஜோடி. இந்த நால்வருமே நடிகர்களாகத் தெரிய மாட்டார்களாம்.