

கேரளம், ஆந்திரம் போலவே கர்நாடக மாநிலமும் புகழ்பெற்ற கதாநாயகிகள் பலரைத் தமிழுக்குக் கொடுத்திருக்கிறது. “அந்த வரிசையில் இடம்பெறுவதே எனது லட்சியம்” என்ற முழக்கத்துடன் தமிழுக்கு அறிமுகமாகிறார் தற்போது கன்னட சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருப்பதாக வர்ணிக்கப்படும் ‘யூ டர்ன்’ படத்தின் நாயகி ஷ்ரத்தா நாத். இவர் ஒரு வழக்கறிஞர். தற்போது ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களின் நாயகன் நிவின் பாலியின் ஜோடியாக கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஷ்ரத்தா. மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் கௌதம் ராமச்சந்திரன்.
காத்தாடிப் பெண்
ஸ்ரீ தேவியின் மகள்கள் நடிக்க வருகிறார்கள் என ஊகச் செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் தேவி குடும்பத்திலிருந்து ஒருவர் நிஜமாகவே நடிக்க வந்துவிட்டார். அவர் தேவியின் அக்காள் மகனும் நடிகை மகேஸ்வரியும் தம்பியுமான அவிஷேக். சமீபத்தில் வெளியாகிச் சிறந்த குழந்தைகள் படமாக கவனம் ஈர்த்த ‘கத சொல்லப் போறோம்’ படத்தின் இயக்குநர் எஸ்.
கல்யாண் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘காத்தாடி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கதாநாயகனைவிட இந்தப் படத்தில் அதிக கவனம் ஈர்க்கும் நட்சத்திரம் தன்ஷிகா. இவர் நடித்திருக்கும் ‘கபாலி’ அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில், அந்தப் படம் வெளிவரும் முன்பே பல படங்களில் பிஸியாகியிருக்கிறார். இந்தப் படத்தில் சுழன்றடிக்கும் காவல் அதிகாரியாக நடிக்கிறாராம் தன்ஷிகா.
மறுக்கும் நிறுவனம்
‘நான் ஈ', ‘விஸ்வரூபம்', ‘தோழா', ‘பெங்களூரு நாட்கள்' போன்ற பல தரமான படங்களைத் தமிழ்த் திரையுலகிற்குத் தயாரித்து அளித்த பிரபல படத் தயாரிப்பு நிறுவனம் பொட்லூரி. வி. பிரசாத் எனப்படும் பி.வி.பி. சினிமா. படத் தயாரிப்பிலிருந்து இந்த நிறுவனம் வெளியேறிவிட்டதாக சில செய்திகள் வெளியானதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தவறான செய்தி என்றும் இதுபோன்ற உண்மையற்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பி.வி.பி. நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது.
“தோல்விகளைக் கண்டிராத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்தத் தோல்விகளை வெற்றிப் படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்குப் பாதை வகுக்கும். ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் ஒரு துறை, சினிமாதான்.
அப்படி ஏற்பட்ட ஒரு சறுக்கலுக்காக பாரம்பரியமிக்க எங்கள் நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது. முன்னணி நாயகன் நடிக்க பிரபல இயக்குநரின் கூட்டணியில் உருவாகிவரும் படத்தை நாங்கள் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் பல படங்கள் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்” என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்கத்திலிருந்து நடிப்புக்கு
ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்ராஜ் நடிப்பில் வெளியான ‘நாளை’, ‘சக்ர வியூகம்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் உதயபானு மகேஸ்வரன். ஆனால் நவீன் இயக்கிய ‘மூடர்கூடம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடித்தபிறகு இயக்கத்தை மறந்து முழுநேர நடிகராகிவிட்டார் இவர். தனித்தன்மை மிக்க நடிப்புத் திறனால் குறுகிய காலத்தில் ‘ஜீவா’, ‘மாயா’, ‘எனக்குள் ஒருவன்’, ‘144’, ‘இது நம்ம ஆளு’ உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் ‘ஆபீஸ்’ தொலைக்காட்சித் தொடரும் இவருக்கு நிறைய ரசிகர்களைச் சேர்த்திருக்கிறது. எந்த முத்திரைக்குள்ளும் சிக்காத குணச்சித்திரமாக வலம் வரும் இவர் ‘கபாலி’ படத்தில் மலேசிய போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கதாபாத்திரத்தைக் காணக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
அடுத்த தாக்குதல் தயார்!
அலட்டிக்கொள்ளாத நடிப்பு, கதைத் தேர்வில் காட்டும் பிடிப்பு என்று தமிழ் சினிமாவில் தனித்து நிற்பவர் இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆன்டனி. ‘நான்', 'சலீம்', ‘இந்தியா - பாகிஸ்தான்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான இவரின் ‘பிச்சைக்காரன்' திரைப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இடைவெளி எடுத்துக்கொள்ள விரும்பாத விஜய் ஆன்டனி தற்போது ‘சைத்தான்' என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் தனது அடுத்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் மென்பொருள் பொறியாளராக நடித்திருக்கும் இவருக்கு ஜோடியாக அருந்ததி நாயர் அறிமுகமாகிறாராம்.
வைரல் டீஸர்!
‘தங்க மீன்கள்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் ராமின் அடுத்த படம் ‘தரமணி'. இருமுறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் ஜே. சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீஸர் தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் காதலர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸரில் நாயகி ஆன்ட்ரியா பேசும் அதிரடியான வசனங்களுக்காகவே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புதுமுகம் வசந்த் ரவி இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
மூன்று கதாநாயகிகள்!
மாஸ் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகிகளைப் பார்க்க முடியும். ஆனால் அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தில் மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெதுராஜ் என ஒன்றுக்கு மூன்று கதாநாயகிகள். படத்தின் நாயகன் அட்டகத்தி தினேஷுக்கு கதைப்படி மொத்தம் மூன்று ஜோடிகளாம்.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்திருக்கும் இந்தப் படம் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணத்தின் புகழைப் பாட வருகிறது என்கிறார்கள்.
திரைக்கதை தயார்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘இறைவி’ வெளியாகும் நிலையில் ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘இடம் பொருள் ஏவல்’ என எக்கச்சக்கப் படங்களையும் கையில் வைத்திருக்கிறார். இவற்றுடன் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கும் தன்னைத் தயார்செய்துகொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.
அனேகன் படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை வேலைகள் முடிந்துவிட்டன. விஜய் சேதுபதியுடன் இணைந்து டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
200 பேருடன் மோதல்
விக்ரம் இரு வேடங்களில் நடிக்கும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டதை எட்டியுள்ளது. ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கிவரும் இப்படத்திற்கான அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சி ஒன்று சென்னையில் படமாக்கப்பட்டுவருகிறது. இன்று தொடங்கும் இதில் கிட்டத்தட்ட 200 சண்டை நடிகர்கள் கலந்துகொள்கிறார்கள். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘இருமுகனு’க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.