

அதுவொரு ஞாயிற்றுக் கிழமை. சென்னை வடபழனியிலிருந்து நாளிதழ் செய்தியாளர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தது ஒரு இன்னோவா கார். ஒரு மணிநேரப் பயணத்துக்குப் பிறகு மரக்காணம் வர, கார் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டது. பிரதானச் சாலையில் இருந்து விலகி ஊருக்குள் நுழைந்தது. கடந்த ஆண்டு பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இடையே கலவரம் நடந்த ஊர். அதை நினைத்துக் கொஞ்சம் கிலி வந்துவிட்டுப்போக, அதற்குள் ஊரைக் கடந்து ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பனங்காட்டின் நடுவே காரை நிறுத்தினார் ஓட்டுநர். காரிலிருந்து இறங்கி எல்லோரும் நடந்தபோது மூச்சிரைக்க ஓடிவந்தார் ஒரு இளைஞர். “சார் ஃபீல்டு... ஃபீல்டு... அப்படியே கொஞ்சம் பதுங்கிடுங்க... ஒரு ரெண்டு நிமிஷம் பளீஸ்” என்று கெஞ்சலாகப் பரபரத்தார் அந்த இளைஞர். சட்டென்று அருகிலிருந்த புதருக்குள் அவர் பதுங்கிக்கொள்ள, அவர் பக்கத்திலேயே எல்லோரும் பதுங்கிக்கொண்டோம்.
அடுத்த கணம் அந்தப் பனங்காட்டின் பல இடங்களில் ‘டமால் ... டமால்...’ என்ற கனத்த சத்தத்துடன் அடுத்தடுத்துக் குண்டுகள் வெடித்துச் செம்மண் புழுதியோடு புகை கிளம்ப, எல்லோருமே வெலவெலத்துப் போனோம். பத்துப் பதினைந்து வெடிப்புகளுக்குப் பிறகு அந்தப் பிரதேசம் ஒரு ராணுவக் குண்டு வீச்சுக்குப் பிறகான அமைதியோடு இருக்க, மெல்ல எழுந்து எல்லோரும் எட்டி பார்த்தால், ஒரு அழகான பெண்ணும் இளைஞனும் மிதிவண்டியில் வந்துகொண்டிருந்தார்கள். “நான் அப்பவே சொன்னேன்தானே? நீங்கள்தான் கேட்டியள் இல்லை!” என்று ஈழத்தமிழில் கடிந்துகொண்டாள் அந்தப் பெண்.
“ஷாட் ஓகே!” என்று கத்தியபடி, தன் கழுத்தில் கிடந்த பெரிய விசிலை எடுத்து நீளமாக ஊதினார் ஆனந்த். ‘யாழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருப்பவர். அங்கே நாங்கள் கண்ட காட்சி. யாழ் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியின் படப்பிடிப்பு.
“கொஞ்ச நேரத்தில் கிலி பிடிக்க வெச்சுட்டீங்க... இது என்ன ஈழத்தின் இறுதிப் போரைப் பின்னணியாகக் கொண்ட படமா?” என்று கேட்டு, வந்த வேலையை ஆரம்பித்தோம்.
“முதலில் இதைத் தெளிவுபடுத்த விரும்புறேன். இலங்கையையும், ஈழத்தையும் பின்னணியாக வைத்துக் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிகபட்சம் 10 படங்கள் வந்திருக்கும். இந்தப்படங்கள் அத்தனையுமே, அங்கே நடந்த உள்நாட்டுப்போரைப் பின்னணியாக வைத்து, அங்கே ஈழமக்கள் எதிர்கொண்ட இழப்புகளையும் துயரங்களையும் அவர்களது நிர்க்கதியையும் பேசிய படங்கள். ஆனால் உள்நாட்டுப் போர் தீவிரம் கொள்ளும் முன் 2000ஆவது ஆண்டுகளில் இருந்த ஈழத்தின் சூழல்தான் என்னுடைய கதைக்களம். அப்போது அங்கே ஒரு பக்கம் ராணுவத்தின் தாக்குதல், இன்னொரு பக்கம் போராளிகளின் போராட்டம். இவற்றுக்கு மத்தியில் மன அழுத்தத்தோடு மக்கள் வாழ்ந்தார்கள். அதே நேரம் ஈழத்தில் காதலும் இருந்தது. திருமணங்கள் நடந்தன. விவசாயம் இருந்தது. விழாக்கள் இருந்தன. வழிபாட்டை அவர்கள் விட்டுவிடவில்லை. வாசிப்பையோ அல்லது கலைகள் மீதான தங்கள் நேசிப்பையோ அவர்கள் விட்டுவிட வில்லை. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் ஈழத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை நான் இயக்கிவருகிறேன். இது போரைப் பற்றிய படமல்ல; ஈழ மக்களின் வாழ்க்கையை, அவர்கள் தங்களது சமூக அடையாளத்தைத் தேடுவதைப் பற்றிய படம்” என்று ஆச்சரியமூட்டினார் ஆனந்த்.
ஈழத்துக் காதல் கதையைக் கொண்ட படத்துக்கு ‘யாழ்’ என்ற தலைப்பு ஏன் என்றால்... “இது வெறும் காதல் கதை மட்டுமல்ல. பொழுதுபோக்கை நம்பிவரும் ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தும் படமாக இருக்க வேண்டும் என்பதால், இதை ஒரு த்ரில்லராகவும் உருவாக்கிவருகிறேன். படத்தில் குத்து பாடலை மட்டும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. மற்ற எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களும் சரியான கலவையில் இருக்கும். விபுலானந்த அடிகளாரின் ‘யாழ் நூல்’, இன்னும் பல வரலாற்று நூல்களில் திடமாகக் கூறப்பட்டிருக்கும் உண்மை இந்தப் படத்தின் முக்கியச் சரடாக வருகிறது. யாழ் எனும் இசைக்கருவியைக் கண்டறிந்து யாழ் இசையை உலகுக்குக் கொடையாக அளித்தவர்கள் தமிழர்கள். நமது களரியும் சிலம்பமும் எப்படி நம்மை விட்டு இங்கிருந்து சென்று திரும்பவும் நம்மிடமே குங்ஃபூவாகவும், கராத்தே கலையாகவும் திரும்ப வந்ததோ, அதேபோல யாழிசையையும் நாம் இழந்துவிட்டோம். பாணர்கள் சைவச் சித்தாந்தக் கருத்துகளையும்,தமிழர்களின் கலை, கலாசாரத்தையும், ஊர் ஊராகச் சென்று யாழிசையோடு பரப்பினார்கள். யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததே அதனால்தான். அங்கிருக்கும் யாழ் தேவி கோவிலிலிருந்து காணாமல் போகும் ஆதி யாழை ஒன்றைத் தேடிச் செல்வதும் கதையின் முக்கியக் கூறு” என்று விரிவாகக் கூறுகிறார் ஆனந்த்.
இவ்வளவு விஷயங்களில் எதை மையப்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, “போர் மேகங்களுக்கு மத்தியிலான காதல், யாழைத் தேடிய த்ரில் பயணம் என்று படம் விறுவிறுப்பாக நகரும். ஒரு கணம் கூடத் தலையைத் திருப்ப முடியாதவாறு திரைக்கதை இருக்கும்” என்று பதில் வருகிறது.
அது சரி, ஆனந்த் இந்தப் படத்தை ஏன் இலங்கையில் எடுக்கவில்லை?
“இது இலங்கையை விமர்சிக்கும் படமில்லை. ஆனால் இலங்கையில் படத்தை எடுக்கும் அளவுக்கு இன்னும் அங்கே நிலைமை சீராகவில்லை. அதனால்தான், வன்னி மாவட்டத்தை அப்படியே ஒத்திருக்கும் மரக்காணத்தில் படத்தின் பெரும்பகுதியை எடுத்திருக்கின்றோம்” என்கிறார்.
ஈழத்தின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் இப்படியொரு காதல் படம் அவசியமா என்றால், “உலகம் முழுவதும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் மட்டும் பத்து லட்சம் பேர். இவர்கள்தான் தமிழ்நாட்டில் உருவாகி அங்கே செல்லும் திரைப்படங்களைப் பார்ப்பவர்கள். இலங்கைப் படமென்றாலே துயரம்தானா என்று அவர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். வடுக்களை அவர்கள் மறக்க விரும்புகிறார்கள். இது தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் விரும்பும் படமாக இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த முயற்சி” எனும் ஆனந்த் மேலும் சில தகவல்களைச் சொல்கிறார்.
“கதை முழுவதும் இலங்கையிலேயே நடக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கதாபாத்திரம் யாரும் கிடையாது. கதாபாத்திரங்கள் ஈழப் பேச்சு வழக்கிலேயே பேசுவார்கள். விஜய் மில்டன் இயக்கிவரும் ‘கோலிசோடா’ படத்தின் இசையமைப்பாளர் அருணகிரிதான் இந்தப் படத்துக்கும் இசை. பாடல்களும் ஈழத் தமிழிலேயே இருக்கும்” என்கிறார். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆஸ்த்ரேலியாவில் குடியேறி வாழும் தமிழர். அங்கே திரைப்படக் கல்லூரியில் படித்து பல குறும்படங்களை இயக்கியவர்.