

கோச்சடையான் படத்தைத் தயாரித்த ஈராஸ் நிறுவனத்தின் தமிழகத் தலைவராக ரஜினி மகள் சௌந்தர்யா அஸ்வின் பொறுப்பேற்றவுடன் கத்தி படத்தின் பாடல்களை வாங்கி அதிரடி செய்தார்.
தற்போது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துக்கொண்டிருக்கும் கமலின் உத்தம வில்லன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படங்களின் தமிழகத் திரையரங்க வெளியீட்டு உரிமைகளை ஈராஸ் நிறுவனத்தை வாங்கவைத்துவிட்டாராம்.
மூன்றே மாதங்களில் ஒரு படம்
ராவணன் படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் திரும்பாமல் ‘கடல்’ என்ற நேரடித் தமிழ்ப் படத்தை இயக்கிய மணி ரத்னம் அடுத்து மூன்றே மாதங்களில் குறுகியகாலத் தயாரிப்பாக ஒரு படத்தை இயக்குகிறார். வாயை மூடிப் பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன் இணையும் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இந்தப் படத்தில் இன்னொரு ஆச்சரியம் பிரகாஷ்ராஜ்! இருவர், பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மணி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
யாரும் வாங்காத ஊதியம்!
எந்திரன் 2 படத்தில் எழுத்தாளர் ஜெய மோகனோடு இணைந்து பணியாற்ற ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம். நாமாகத் தேடிப் போவதைவிட நம்மைத் தேடிவரும் வாய்ப்புகள் நிச்சயம் கைவிட்டுப் போகாது என்பதைச் சரியாக உணர்ந்திருக்கும் ஜெயமோகன், எந்திரன் 2 படத்தில் பணியாற்றத் தனக்கு ஒரு பெரிய தொகையை ஊதியமாகத் தரவேண்டும் என்று கேட்டாராம்.
இதைக் கேட்டுத் துணுக்குற்றாலும் இவரோடும் பணியாற்றிப் பார்த்துவிடலாம் என்பதற்காக அந்தத் தொகையை வாங்கித் தர, ஷங்கர் சம்மதம் சொல்லியிருப்பதாகச் செய்திகள் அடிபடுகின்றன.