

சூர்யாவின் திரைவாழ்க்கையில் அவரை வசூல் நாயகனாக்கிய படம் ‘கஜினி’. அந்தப் படத்தின் கதையை இயக்குநர் முருகதாஸ் முதலில் சொன்னது விக்ரமிடம்தான். விக்ரம் நடிக்க மறுத்த கதையைக் கேட்டு சூர்யா ஒப்புக்கொண்டார். இப்போது யூ டேர்ன் தருணம். சூர்யாவுக்காக கௌதம் மேனன் எழுதிய ‘துருவநட்சத்திரம்’ கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது சூர்யா மறுத்த கதையில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் விக்ரம். துருவநட்சத்திரம் தற்போது படப்பிடிப்பில் இருக்கிறது. முதல் பார்வை போஸ்டரையும் சுடச் சுட வெளியிட்டுவிட்டார் இயக்குநர்.
கை கொடுக்கும் காதல் தோல்வி
கதையில் தோல்வி இருந்தால் படம் வெற்றிபெறுமா? ஜெய்யின் ‘ராசி’ அப்படித்தான் சொல்கிறது. ஜெய் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் `எனக்கு வாய்த்த அடிமைகள்'. படத்தை இயக்கியிருப்பவர் மகேந்திரன் ராஜாமணி. காதலில் தோல்வி அடைந்த நாயகனைக் கொண்ட படங்கள் ஜெய்க்கு நிறையவே கைகொடுத்திருக்கின்றன. இந்தப் படத்திலும் நண்பர்களால் காதலை இழக்கும் நாயகன் வேடம் ஏற்றிருக்கிறாராம். ஜெய்யின் காதலை உதறிவிட்டுச் செல்லும் அந்தத் கதாநாயகி ப்ரணிதா. ‘சகுனி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த அதே கன்னடக் கதாநாயகிதான்.
சேதுபதிக்கு இணை
தனிக் கதாநாயகியாக நடித்த எந்தப் படமும் எடுபடாத நிலையில் நடிக்க நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திரம் ‘கொடி’ படத்தில் அமைந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டை விட்டார் த்ரிஷா. திரையுலக நண்பர்களின் அறிவுரையைக் கேட்டு இனி நடிப்பில் முழு கவனம் செலுத்த இருக்கிறாராம். இப்படி முடிவெடுத்ததும் விஜய் சேதுபதியிடமிருந்து அழைப்பு பறக்க, அவருடன் ‘96’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான கதாபாத்திரமாம் த்ரிஷாவுக்கு.
‘பலம்’ காட்டும் ஹ்ருத்திக் ரோஷன்!
இந்திக் கதாநாயகர்களின் தமிழ் மொழிமாற்று அவதாரப் பட்டியலில் ‘தூம்’ படத்தின் மூலம் இணைந்தவர் பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவான ஹ்ருத்திக் ரோஷன். ஒரு இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழ் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கத்தில் இந்தியில் உருவாகியிருக்கும் ‘காபில்’, தமிழில் ‘பலம்’ என்ற தலைப்புடன் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தையும் துணிந்து வெளியிட்டுவிட்டார் இயக்குநர். இதில் ஹ்ருத்திக்கின் ஜோடி யாமி கவுதம். விந்து தானம் என்னும் சிக்கலான விஷயம் குறித்த ‘விக்கி டோனர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி, ராதா மோகனின் ‘கவுரவம்’ படத்தின் மூலம் தமிழிலும் நடித்தாரே அவரேதான். ‘இப்போது இன்னும் அழகாகிவிட்டார்’ என்று யாமிக்கு மறுநல்வரவு கூறியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
கவனமான தேர்வு
கொங்கணி உட்பட இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் நடித்துவிட்டவர் ஜாக்கி ஷெராஃப். ‘ஆரண்ய காண்டம்’ படம் வழியே அவரைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் தியாகராஜன் குமாரராஜா. அதன் பிறகு ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் ராஜா வேடம் ஏற்று பெர்ஃபாமென்ஸ் கேப்ச்சரிங் முறையில் நடித்துக்கொடுத்தார். தற்போது மீண்டும் அவரைத் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். `சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிப்பவர் மாதவன். ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் இமேஜுக்கு ஏற்ப அவரை எதிர்நிற்கும் அதிரடி வில்லனாக ஜாக்கி ஷெராஃப்தான் சரியாக இருப்பார் என்று கவனமாக தேர்வு செய்திருக்கிறாராம். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லையாம்.
அடுத்த ஆட்டம்!
பண மதிப்பு இழப்பு பிரச்சினை சீராகிவரும் சமயத்தில் வெளியான ‘துருவங்கள் 16’ படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைத்ததில் குஷியாகியிருக்கிறாராம் நடிகர் ரகுமான். தன்னுடைய நடிப்பை ஊடகங்கள் பாராட்டியதில் குளிர்ந்துபோன அவர், அடுத்து தன்னைத் தேடிவந்த மற்றொரு த்ரில்லர் கதையை உடனடியாக ஒப்புக்கொண்டிருக்கிறார் சமீபத்தில் ‘முதல் பார்வை’ வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் படம் ‘பகடி ஆட்டம்’. ராம் கே.சந்திரன் இயக்கிவரும் இந்தப் படத்தில் பெண்களுக்கு எதிராகச் சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் கிரைம் குற்றங்களைத் துப்பறியும் அதிகாரியாக வேடம் ஏற்று நடித்துவருகிறாராம்.