

சமந்தா ஒரு படத்துக்காகச் சிலம்பம் கற்றுவருகிறார் என்ற செய்தியை முன்னர் தந்தோம். அந்தப் பயிற்சியை அவர் எந்தப் படத்துக்காக மேற்கொண்டார் என்பதைத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். நகைச்சுவை, காதல் கலவையில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி. இவர்கள் இணைந்திருக்கும் மூன்றாவது படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை வரும் 16-ம் தேதி குற்றாலத்தில் தொடங்குகிறார்கள். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சமந்தா. இம்முறை நகைச்சுவையைக் குறைத்துக்கொண்டு ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர். இந்தப் படத்துக்காகத்தான் சமந்தா சிலம்பாட்டப் பயிற்சி எடுத்திருக்கிறார். ஆக்ஷனில் அசத்த இருக்கிறார் சமந்தா.
அஜித் கேட்ட தீம் பாடல்
இந்த ஆண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களில் ஒன்று அஜித்தின் ‘விவேகம்’. ஜேம்ஸ் படத்தின் சாயலுடன் ரசிகர்களைக் கவர்ந்துவருகிறது படத்தின் டீஸர் டிரெய்லர். இந்தப் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்திடம் தீம் பாடல் ஒன்று படத்தில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம் அஜித். அதற்காகப் பத்துக்கும் அதிகமான டியூன்களை மெட்டமைத்து அஜித்திடம் அனிருத் கொடுக்க, அதிலிருந்து ஒரு பாடலைத் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை சிங்கிளாக விரைவில் வெளியிட இருக்கிறார்களாம். அஜித் உடன் காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் உள்படப் பலர் நடித்து முடித்திருக்கும் இந்தப் படத்தை சிவா இயக்கியிருக்கிறார்.
த்ரிஷாவுக்கான தேடல்
விஜய் சேதுபதி - த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் படம் ‘96’. இந்தப் படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி ஆகிய இருவரது சிறுவயதுக் கதாபாத்திரங்கள் படத்தில் 10 நிமிடங்கள் இடம்பெறுகின்றனவாம். விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாகச் சிறுவனைப் பிடித்துவிட்டதாம் படக்குழு. ஆனால், த்ரிஷாவின் சிறு வயதுக் கதாபாத்திரத்துக்கு இன்னும் சிறுமி கிடைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறாராம் இயக்குநர். படத்தை சி.பிரேம் குமார் இயக்கிவருகிறார். இவர், விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர். கதையின் பெரும்பாலான பகுதிகள் கும்பகோணத்தில் நடக்கின்றன.
300 திரைகள்
‘பாகுபலி’க்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிகத் திரைகளில் வெளியாகும் தென்னிந்திய மொழிமாற்று படம் ‘புலி முருகன்’. மோகன்லால் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி கேரள சினிமா வரலாற்றில் 150 கோடி ரூபாயை வசூலித்த இந்தப் படத்தைத்தான் 3டி தொழில்நுட்பத்தில் 300 திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள்.