Last Updated : 16 Feb, 2017 02:31 PM

Published : 16 Feb 2017 02:31 PM
Last Updated : 16 Feb 2017 02:31 PM

சினிமா ஸ்கோப் 27: வெள்ளித்திரை

பிறமொழியில் ஒரு நல்ல படத்தைப் பார்க்கும்போது, அதைத் தமிழில் உருவாக்க வேண்டும் எனப் படைப்பாளிகள் சிலர் நினைக்கின்றனர். சிலர் வணிகரீதியில் வெற்றிபெற்ற படத்தை மொழிமாற்றத் துடிக்கிறார்கள். தற்போதைய மலையாளப் படங்கள் பல இரண்டாவது காரணத்தாலேயே மொழிமாற்றம் பெறுகிறதோ என்று தோன்றுகிறது. மலையாளப் படங்கள் தமிழுக்கு வருவது என்பது இன்று நேற்று தொடங்கிய பழக்கமல்ல; நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டிருக்கிறது; இப்போது காணப்படுவதைப் போல, ஒரு மலையாளப் படம் வணிகரீதியில் (பாக்ஸ் ஆபிஸ் ஹிட்) வெற்றிபெற்றுவிட்டாலே தமிழில் அந்தப் படத்தை மறு ஆக்கம் செய்தே ஆக வேண்டும் என்று போட்டிபோடும் மனநிலை அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. அழுத்தமான கதைகளுக்கும் திரைக்கதைகளுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

கறுப்பு வெள்ளைக் காலம் முதல்

எம்.ஜி.ஆர். நடித்த ஒரே ஒரு மலையாளப் படமான ‘ஜெனோவா’ தமிழில் வெளியாகியிருக்கிறது. சிவாஜி கணேசன் நடித்த ‘பாபு’படமும் மலையாளத்தில் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘ஓடயில் நின்னு’ படத்தின் மறு ஆக்கமே. எம்.கிருஷ்ணன் நாயர், தான் இயக்கிய ‘பாடுன்ன புழா’படத்தையே தமிழில் ‘மன்னிப்பு’ என்னும் பெயரில் இயக்கினார். வங்காளப் படங்கள், பிரெஞ்சுப் படங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் தனது படங்களைப் படைத்தவராக அறியப்பட்டிருக்கும் கே.பாலசந்தரும் பல மலையாளப் படங்களைத் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார். ஐ.வி.சசி இயக்கத்தில் மது, ஷீலா நடித்த ‘ஆ நிமிஷம்’தான் ‘நூல் வேலி’ ஆனது. கமல் ஹாசன் நடிக்க அவர் இயக்கிய ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் மூலமும் மலையாளம்தான். கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘அடிமைகள்’தான் ‘நிழல் நிஜமாகிற’தானது.

நகலெடுக்க முடியாத அசல் படங்கள்

ஆக, தமிழுக்கும் ஏற்ற, தமிழில் கிடைக்காத கதைகளுடன் மலையாளப் படம் வெளியாகும்போது, அதைத் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள். இந்தப் போக்கின் தொடர்ச்சியாகவே, ஃபாசில் தனது பல மலையாளப் படங்களை ‘பூவே பூச்சூடவா’, ‘பூவிழி வாசலிலே’, ‘வருஷம் 16’, ‘காதலுக்கு மரியாதை’ என்று படமாக்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. உணர்வுபூர்வமான கதையம்சப் படங்களைப் போலவே, மலையாளத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படங்களும், அரசியல் படங்கள் சிலவும் தமிழுக்கு வரத் தொடங்கின.

சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், ஜெயராம் நடித்த ‘மழவில்காவடி’ என்னும் படத்தைத்தான் பாண்டியராஜன் ‘சுப்பிரமணியசாமி’ என்னும் பெயரில் தமிழ்ப் படமாக்கியுள்ளார். சத்யன் அந்திக்காடு இயக்கிய ‘நாடோடிக் காற்று’தான் தமிழில் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடிப்பில் ‘கதாநாயகன்’ ஆனது. இந்தப் படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றாலும் அதையும் தாண்டி மலையாளப் படங்கள் கொண்டிருந்த ஆதார உணர்வைத் தமிழ்ப் படங்கள் எந்த அளவுக்குக் கொண்டிருந்தன என்பதைப் பொறுத்தே அவற்றுக்கான வரவேற்பு தமிழில் கிடைத்திருக்கிறது. ‘மக்கள் என் பக்கம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ போன்ற படங்கள் மலையாளத்திலிருந்தே தமிழுக்கு வந்திருந்தன என்றபோதும் அவை அசல் தமிழ்ப் படங்களைப் போன்ற நிறத்தையே கொண்டிருந்தன.

மரணித்த மறு ஆக்கங்கள்

ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்கு ஒரு படத்தை மறு ஆக்கம் செய்யும்போது, முதல் மொழியைவிட மேம்பட்ட வகையிலோ குறைந்தபட்சம் அதற்கு இணையான வகையிலோ படத்தை உருவாக்கினால் மட்டுமே அந்த மறு ஆக்கத்துக்கு மதிப்பு ஏற்படும். கதை, திரைக்கதை, வசனம், கதாபாத்திரங்களின் உருவாக்கம், கதை நிகழும் களம் போன்ற பல்வேறு அம்சங்களும் இரண்டாவது மொழியில் பொருந்திப் போகும்போதுதான் சிறந்த படைப்பாக மாறும் இல்லையெனில் அது பத்தோடு பதினொன்றாகிப் போகும். யதார்த்தத்தில் இது எந்த அளவு சாத்தியமாகியிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

மலையாளத்தில் வெளியான ‘22 ஃபீமேல் கோட்டயம்’ என்னும் திரைப்படம், கேரளாவிலிருந்து தாதியாக பெங்களூருக்குச் செல்லும் ஓர் இளம் பெண்ணின் வாழ்வைச் சிதைப்பவனை அவள் பழிவாங்குவதைச் சொன்னது. இந்தப் படத்தைத் தமிழில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்னும் பெயரில் தமிழில் உருவாக்கினார்கள். இந்தப் படத்தின் மைய அச்சானது இளம்பெண்கள் தாதிகளாகப் பிற மாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ பணிக்குச் செல்வதுதான். தமிழ்ச் சூழலில் இப்படியொரு பழக்கம் வழக்கத்திலேயே இல்லை. ஆக, அடிப்படையிலேயே இந்தப் படம் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுவிடுகிறது. இப்படி, ஒரு மண்ணுக்கேயான பிரத்தியேகப் பண்புகளைக் கொண்ட கதைகளைப் பிறிதொரு மண்ணுக்காக மறு ஆக்கம் செய்யும்போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது பாதகமான முடிவையே தரும்.

நொண்டியடிக்கும் நட்சத்திரத் தேர்வு

சில வேளைகளில் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வும் சிக்கலாக மாறிவிடும். உதாரணமாக மலையாளத்தில் பல சுவாரசியமான திரைக்கதைகளை உருவாக்கியுள்ள இயக்குநர் சீனிவாசன் படைக்கும் பாத்திரங்கள் கேலிக்குரிய பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவை கோமாளித்தனமானவை மட்டுமல்ல; அவற்றிடம் உள்ளடங்கிய ஒரு புத்திசாலித்தனம் பளிச்சிடும். அப்படியான பாத்திரங்களைப் படைப்பதே சீனிவாசனின் இயல்பு. அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்குத் தமிழில் நடிகர்களே இல்லை. ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் தமிழ்ப் படைப்பாளிகள் கவலைகொள்வதில்லை. இலுப்பைப் பூக்களின் சர்க்கரையில் திருப்தியடைந்துவிடுகிறார்கள்.

‘வடக்குநோக்கியந்திரம்’ படத்தில் அவர் ஏற்றிருந்த சந்தேகக் கணவன் பாத்திரத்தைத் தமிழில் கருணாஸ் ஏற்று நடித்திருந்தார். கருணாஸ் என்னும் காமெடி நடிகரை அப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்ததால் ‘திண்டுக்கல் சாரதி’ மிக ஏமாற்றம் தந்த திரைப்படமாக மாறியது. ‘உதயனானுதாரம்’ படத்தில் சீனிவாசன் ஏற்றிருந்த வேடம், தமிழ்ப் படங்களில் காணப்படும் அபத்தமான, கதாநாயகத்தனக் காட்சிகளைப் பகடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இயல்பிலேயே அந்தக் கதாபாத்திரத்திடம் ஒரு கோணங்கித் தனமும் வெகுளித் தனமும் தென்படும்.

ஆனால், தமிழில் அதை ‘வெள்ளித் திரை’ ஆக்கியபோது அந்த வேடத்தை ஏற்றிருந்தவர் பிரகாஷ்ராஜ். அவர் கமலையே கரைத்துக் குடித்து ஏப்பம்விட்ட திருப்தியில்தான் நடிக்கவே தொடங்குவார். அத்தகைய அதிபுத்திசாலி நடிகர் பிரகாஷ்ராஜ். அவரை அந்த வெகுளித்தனமான கதாபாத்திரம் தாங்குமா? இவ்வளவு ஏன், சீனிவாசன் ஏற்றிருந்த ஒரு கதாபாத்திரத்தைத் தமிழில் இயக்குநர் தங்கர்பச்சானே ஏற்று நடித்திருக்கிறார் என்றால் சீனிவாசனை எந்த அளவு தமிழ்த் திரையுலகம் அலட்சியமாகக் கையாண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவற்றுக்கு மாறாக, இயக்குநர் பார்த்திபன், தனது ‘புள்ளகுட்டிக்கார’னில் சிறுவேடம் ஒன்றில் சீனிவாசனையே பயன்படுத்தியிருப்பார்.

மாறிய ரசனை, மாறாத மறுஆக்கம்

இதுபோக, மலையாளப் படங்களின் போக்கே பெருமளவில் மாறிவிட்டது. அவை தமிழ்ப் படங்களைப் போலவே உருவாக்கப்படுகின்றன. சமீபத்தில் ‘பிரேமம்’ அங்கே பெரிய வெற்றியைப் பெற்றதன் காரணம் அதன் படமாக்கலில் வெளிப்படையாகக் காணப்பட்ட தமிழ்ப் படத்தனமே. நடிகர் விஜய் நடித்த பல தமிழ்ப் படங்கள் அங்கே வசூலை வாரிக்குவிக்கின்றன. பார்வையாளர்களின் மனம் அங்கே பெரிய அளவில் மாறியிருக்கிறது. இப்போதைய மலையாள ரசிகர்களின் தேவை ‘பிரேமம்’தான் ‘செம்மீன்’ அல்ல. அவர்களுக்காக உருவாக்கப்படும் ‘பிரேமம்’ போன்ற திரைப்படங்கள் ஒரு பார்வையில் தமிழ்ப் படங்களே. அவற்றைத் தமிழில் மறு ஆக்கம் செய்ய இவ்வளவு அடித்துக்கொள்ள வேண்டுமா? அப்படி அடித்துப் பிடித்து உருவாக்கிய பல படங்கள் கலைரீதியாகவும் வசூல்ரீதியாகவும் தோல்வியைத்தானே தந்துள்ளன?

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x