

கழுகு படத்தின் மூலம் வெற்றிப் பட நாயகர்களின் வரிசையில் இணைந்திருக்கும் கிருஷ்ணா, விஜய் ஆண்டனி நடித்த ’நான்’ படத்தின் மூலம் கவர்ந்த ரூபா மஞ்சரி, சூது கவ்வும் படத்தில் வில்லனாக நடித்த கருணா, கதைக்காகப் பெயர் வாங்கும் படங்களின் நாயகியாக வலம்வரும் ஓவியா என்று வலுவான இளம் நட்சத்திரக் கூட்டணியுடன் களமிறங்கியிருக்கிறார் டி.கே. ‘யாமிருக்க பயமே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இவர் கே.வி. ஆனந்தின் உதவியாளர். “ஒரு வெற்றிகரமான படத்துக்கு நட்சத்திரங்கள்கூட முக்கியமில்லை. திரைக்கதைதான் முதல் தேவை. அடுத்தது என்ன என்று ரசிகர்களால் யோசிக்க முடியாதபடி நகரும் திரைக்கதையைக் கேமராவை வைத்து படம் பிடித்ததே தெரியாத வண்ணம் படமாக்கிவிட்டால் அந்தப் படம் வெற்றி. இந்தப்படத்தின் திரைக்கதையை படித்த எனது குரு கே.வி. ஆனந்த், கோ படத்தின் தயாரிப்பாளருக்கு அவரே சிபாரி சு செய்ததை மறக்கமுடியாது!” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
யாமிருக்க பயமேன் என்ற வாக்கியம் தைரியம் தரக்கூடியது. அதை மாற்றி யாமிருக்க பயமே என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களே?
படத்தில் நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள். கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, கருணா, ஓவியா. இந்த நான்கு பேரும் ஒரு வீட்டில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த வீட்டை விட்டு இவர்கள் வெளியே வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தே ஆக வேண்டிய கட்டாயம். அவர்களால் அந்த வீட்டிலிருந்து தப்பிக்க முடிந்ததா என்பதுதான் திரைக்கதை.
பயம் என்பதுதான் படத்தின் மையமா?
ஆமாம். ஆனால் பயம் என்ற ஒரு வார்த்தைக்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே இல்லை. இது பீட்சா மாதிரியான படமும் இல்லை. ஆனால் வீடு முக்கியமான கதாபாத்திரம். சூது கவ்வும் கிருஷ்ணா, சென்னைக்கு வெளியே கொள்ளியூர் என்ற ஊரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார். அந்த வீட்டிற்கு மற்ற மூன்று கதாபாத்திரங்களும் வந்து சேருகின்றன. இந்த ஊரும் கதையும் கற்பனைதான். ஆனால் நாம் எத்தனை எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எதிலும் பேராசைப்படக் கூடாது என்பதைச் சொல்லும் ஹாரர்- நகைச்சுவைப் படம் இது.
படம் முழுக்கவே மிரட்டுவீர்களா?
பயமும் நகைச்சுவையும் சரியான கலவையில் பயணிக்கும் விதமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறேன். சென்னையிலும் நைனிடால் நகரத்திலும் படமாக்கியிருக்கிறோம்
இரண்டு கதாநாயகிகள் பற்றி…
ரூபா மஞ்சரி - ஓவியா இடையே நடிப்பில் போட்டி இருந்தது. ரூபா முதல்முறையாக முழுநீள நகைச்சுவைக் கதாநாயகி வேடத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல ஓவியாவுக்கும் மாறுபட்ட வேடம். இதில் புதிய ஓவியாவைப் பார்க்க முடியும்.