ஹாலிவுட் ஷோ: அமெரிக்காவைக் காக்க ஒரு அவதாரம்

ஹாலிவுட் ஷோ: அமெரிக்காவைக் காக்க ஒரு அவதாரம்
Updated on
1 min read

காமிக்ஸ் கதைகளின் மீது எத்தனை மில்லியன் டாலர்களையும் கொட்டத் தயார் என்று தோள் தட்டுபவர்கள் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள். குறிப்பாக மார்வெல் காமிக்ஸின் முதன்மைக் கதாபாத்திரங்கள் எதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. அதேபோல காமிக்ஸில் இருந்து உருவான ஸ்பைடர் மேன் சீரீஸின் வசூல் சாதனையை இதுவரை வேறு காமிக்ஸ் ஆக்‌ஷன் படங்கள் முறியடிக்கவில்லை. இந்த வரிசையில் மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரமான கேப்டன் அமெரிக்கா திரைப்பட வடிவம் பெற்றது. அதன் முதல் பதிப்பு 1941ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு கேப்டன் அமெரிக்கா சீரிஸ் வகைப் படங்களை ஆராதிக்கும் ரசிகர்கள் உருவானார்கள்.

வழக்கமாக கோடைக் கொண்டாட்டத்தைக் குறிவைக்கும் இதுபோன்ற படங்கள் மற்ற நாடுகளை எட்டிப் பார்க்கச் சில மாதங்கள் பிடிக்கும். இப்போது அப்படி அல்ல. கேப்டன் அமெரிக்கா - தி வின்டர் சோல்ஜர் அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் (ஏப்ரல் 4) தமிழகத்தில் 'எதற்கும் அஞ்சாதவன் ' என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. தமிழ் தவிர ஹிந்தி , தெலுங்கு என்று பல பிராந்திய மொழிகளிலும் ஆக்‌ஷன் அதகளம் பண்ண வருகிறார் இந்த அமெரிக்க கேப்டன்.

அப்படி என்னதான் கதை? நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்குப் பிறகு கதைநாயகன் ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்துவருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது , அவரைக் காக்க ஸ்டீவ் முற்படுகிறார். அப்போது அமெரிக்காவும் அதன் தொடச்சியாக மொத்த பூமியும் சந்திக்க இருக்கும் ஒரு பெரும் ஆபத்து அவர் கவனத்துக்கு வர, திரும்பவும் தனது ‘பாட்ஷா’ முகத்தை அவர் உலகுக்குக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .தனக்கு எதிரான சதிகளை முறியடித்து , தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோ, பால்கன் ஆகிய சாகாக்களுடன் இணைந்து இறுதிக் கட்டப் போருக்குத் தயாராகிறார். ஆனால் எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் அத்தனை பேரையும் அடிபணிய வைக்கும் தி விண்டர் சோல்ஜர் என்ற மாபெரும்அழிவு சக்தி எதிரியின் கையில் இருக்கிறது. அதை இந்த அமெரிக்கக் கேப்டன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கேப்டன் அமெரிக்காவின் திரைக்கதை.

இந்தப் படம் முந்தைய வசூல் சாதனைகளை எவ்வளவு தூரம் முறியடிக்கும் என்ற ஆருடங்கள் ஹாலிவுட்டில் இப்போதே தூள் பறக்கின்றன.

அன்டனி,ஜோ ரஸஷோ இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் செரிஸ் ஈவான்ஸ், ஸ்கார்லேட் ஜான்சன், சாமுவேல் எல். ஜாக்சன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in