

மரியம் ஸகாரியாவை பாலிவுட்டின் ஆட்ட நாயகி என்றால் அது மிகையில்லை! இம்ரான் கானுடன் கோக் விளம்பரத்தில் குளிர்ச்சியாக வந்து போனாரே அதே ஸகாரியாதான். உண்மையில் ஸகாரியா புகழ்பெற்றிருக்க வேண்டியது கோலிவுட்டில்தான். ஸ்வீடன் அப்பாவுக்கும், ஈரானிய அம்மாவுக்கும் பிறந்த இந்த ஆறடி அழகி, ஸ்வீடனில் 25 வயதில் ஆரம்பித்த நடனப் பள்ளி அங்கே ஹிட் அடித்தது. யார் சொன்னார்களோ நன்றாகப் போய்க்கொண்டிருந்த நடனப் பள்ளியை இழுத்து மூடிவிட்டு, பாலிவுட்டில் வந்து நிரந்தரமாகத் தங்கிய ஸகாரியா. இந்தி மியூசிக் வீடியோக்களில் தேவதையாக வந்து போனார். கூடவே மாடலிங்.
இந்த நேரத்தில் ஸகாரியாவைத் தனது ‘தலைநகரம்’ படத்துக்காகக் கோலிவுட் அழைத்துவந்து ஒரு ஆட்டம் போடவைத்தார் இயக்குனர் சுந்தர் சி. அதன் பிறகு டோலிவுட்டும் அதைத் தொடர்ந்து பாலிவுட்டும் ஸகாரியாவைப் பிடித்துக்கொண்டன. ஐந்தே ஆண்டுகளில் 15 பாலிவுட் படங்களில் அதிரடி ஆட்டங்கள் என்றால் இவரது ஆட்டம் ரசிகர்களை எப்படி ஆடவைத்திருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
கோலிவுட்டுக்கும் ஸகாரியாவுக்குமான பந்தம் முடிந்துவிடவில்லை. அதை இப்போது புதுப்பித்திருக்கிறார் லிங்குசாமி. சூர்யா நடித்த ‘சிங்கம்-2’ படத்தின் தொடக்கப் பாடலுக்கு அஞ்சலி ஆடியதுபோல லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘அஞ்சான்’ படத்தில் ‘டான்’ சூர்யாவுடன் ஸகாரியா ஆடுகிறார். மும்பையில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் இந்தப் பாடலைச் சுடச்சுடப் படமாக்கிவிட்டார்கள். இனி மரியம் ஸகாரியாவை மேலும் பல தமிழ்ப் படங்களில் பார்க்கலாம்.