

செப்டம்பர் 16, 2014: எம்.எஸ். சுப்புலட்சுமி 98-வது பிறந்த தினம்
இசையோடு வாழும் பலரும் ராகம், தானம், பல்லவி பாடுவார்கள். ஆனால், ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒப்பற்ற இசைக் கலைஞர் எம்எஸ். சுப்புலட்சுமி. இதற்காகத்தான் இவருக்கு மகசேசே விருது வழங்கப்பட்டது.
1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் நாள் சண்முக வடிவு அம்மாளுக்கும் சுப்பிரமணிய அய்யருக்கும் மகளாகப் பிறந்தவர் எம்.எஸ். தாயார் புகழ்பெற்ற வீணைக் கலைஞர். எம்.எஸ்.ஸின் முதல் குரு அவர்தான். ஆரம்ப காலத்தில் அம்மாவின் வீணைக் கச்சேரிகளில் பாடி வந்தார் எம்.எஸ். 1926-ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் ‘மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிருதங்கத்தில் ஜாம்பவான். எம்.எஸ்.ஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் அவரும் ஒருவர். 1935-ல் தட்சிணாமூர்த்தி அவர்களின் மணிவிழாவில் எம்.எஸ்.ஸின் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிதான் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது எம்.எஸ்.ஸுக்கு.
அதே ஆண்டு மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன், எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியது அவரது மிகச் சிறந்த கச்சேரிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. இதன் பிறகுதான் தென்னிந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் எம்.எஸ்.ஸிற்கு அழைப்பு வரத் தொடங்கியது. அதன்பிறகு நெடும் இசைப்பயணத்தை கடந்து சென்ற இந்த இசையரசியின் குரல் ஐநா அவை வரை கம்பீரமாக ஒலித்தது.
திரைக்கு பங்களிப்பு
கர்நாடக இசையில் விற்பன்னராக விளங்கிய எம்.எஸ்., தமிழ்த் திரைக்கும் கொஞ்சம் தாக சாந்தி செய்திருப்பது முத்திரை வரலாறு. தேசிய இயக்குநர் கே. சுப்பிரமணியம் இயக்கிய ‘சேவா சதனம்' என்ற திரைப்படத்தில் முதன்முதலில் பாடி நடித்தார். 1938ல் இப்படம் வெளியானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு ‘சகுந்தலை' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். எம்.எஸ்., ஜி.என். பாலசுப்ரமணியம் என இரண்டு இசை மேதைகள் இணைந்து நடித்த படம்.
இந்தப் படத்தில் இரண்டு நீளமான பாடல்கள் இடம்பெற்றன. இதனால் பெரிய அளவு இசைத்தட்டில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. மிகப் பெரிய வெற்றிப் படமான இதை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கினார். இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் பின்னாட்களில் எம்.எஸ்.ஸின் அன்புக்குப் பாத்திரமான டி. சதாசிவம். 1940-ல் சென்னையிலுள்ள திருநீர்மலை கோயிலில் எளிய முறையில் எம்.எஸ். - டி. சதாசிவம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு 1941ல் வெளியான ‘சாவித்ரி' என்கிற இசைச் சித்திரத்தில் எம்.எஸ். நாரதராக நடித்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்பு 1945-ம் ஆண்டில் தீபாவளியன்று வெளியான ‘மீரா’ படத்தில் எம்.எஸ். பாடிய அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. கணவரின் தயாரிப்பில் மீண்டும் டங்கன் இயக்கத்தில் நடித்த இந்தப் படத்தில் எம். எஸ். பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்...' கேட்டவர்களை உருக வைத்தது. படத்திற்கான கதை, வசனத்தை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. பாடல்களை எழுதியவர் பாபநாசம் சிவன். இந்தியிலும் தயாராகியிருந்த மீரா வட இந்தியா முழுவதும் அவருக்கு புகழைக் கொண்டுவந்து சேர்ந்து. எம்.ஜி.ஆரும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் சேர்ந்து நடித்த ஒரே படம் மீராதான். அது மட்டுமல்ல, எம்.எஸ். நடித்த கடைசிப் படமும் மீராதான்.
விமர்சனம்
அந்தக் காலகட்டத்தில் ஒரு படத்தைப் பாராட்டி கல்கி விமர்சனம் எழுதினால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்பது பொய்க்காத நம்பிக்கையாக இருந்துவந்தது. அவரது எழுத்துகளுக்கு மகத்தான மரியாதை இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் சத்தியாகிரகம் செய்து மாயவரம் சிறையில் கல்கி அடைக்கப்பட்டிருந்தார்.
ஆனந்த விகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக அப்போது கல்கி பணியாற்றி வந்தார். மாயவரம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கல்கியை அழைத்துச் சென்று ‘சகுந்தலை' படத்தைப் பார்க்க சதாசிவம் ஏற்பாடு செய்தார். அந்தப் படத்திற்கான விமர்சனத்தைக் கல்கி எழுதினார். அது எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் ஒரு படிக்கல்லாக அமைந்தது போனது. பல பத்திரிகைகள் சகுந்தலைக்கான கல்கியின் விமர்சனத்தைப் போட்டி போட்டு பிரசுரித்தன.
கல்கியின் பார்வை
சகுந்தலை திரைப்படம் ஐம்பது வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது அதற்கு பொன் விழா நடத்தப்பட்டது. அப்போது சகுந்தலைக்கு விமர்சனம் எழுதிய சூழலை எழுதினார் கல்கி. அதில் ‘‘சகுந்தலையை நான் மறுபடியும் பார்த்தபோது, பழைய அபிப்பிராயத்தை ஓரளவு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமென்று நினைத்தேன். அதாவது இந்தப் படத்துக்கு என்னுடைய பாராட்டுதல் போதாது - இன்னும் அதிகமாய்ச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. முக்கியமாக ஸ்ரீமதி எம்.எஸ்.ஸின் நடிப்பைக் குறித்து நான் சொன்னது போதவே போதாதுதான். ‘சகுந்தலா’ படத்தில் அவர் பாடியிருப்பதைவிட இன்னும் எவ்வளவோ உயர்வாக இப்போது கச்சேரிகளில் அவர் பாடுகிறார்.ஆனால், இந்தப் படத்தில் அவர் நடித்திருப்பதைக் காட்டிலும் சிறந்த நடிப்பை நாம் இதுவரையில் எங்குமே பார்த்தது கிடையாது.
பேச்சினாலும் பாட்டினாலுங்கூட வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளையெல்லாம் முகபாவத்தினாலேயே அல்லவா வெளிப்படுத்திவிடுகிறார்? படத்தின் முதற் பகுதியில் வரும் காதல் காட்சிகளில், அவருடைய முகத்தில் வியப்பு, பயம், நாணம், இன்பம் ஆகிய உணர்ச்சிகள் மாறி மாறியும் ஏககாலத்திலும் எவ்வளவு ஆச்சர்யமாகப் பிரதிபலிக்கின்றன! ராஜ சபைக் காட்சியில், அடபாவி! என்று ஆரம்பிக்கும் போது முகத்தில் கொதிக்கும் கோபம் ஒரு கண நேரத்தில் அளவிறந்த துக்கமாக மாறிவிடும் அற்புதத்தை என்னவென்று சொல்வது? கடைசிக் காட்சியில், துஷ்யந்தன் மனம் மாறியவனாய் வரும்போது, சகுந்தலையின் உள்ளத்தில் சுயகவுரவமும் பதிபக்தியும் ஆத்திரமும் ஆனந்தமும் ரோஸமும் கருணையும் போராடுவதை அவருடைய முகபாவம் எவ்வளவு தெளிவாய்க் காட்டிவிடுகின்றது!
‘சகுந்தலை’ ஒரு சிரஞ்சீவிப் படம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்தப் படத்தை ஒரு தடவையேனும் பார்த்த ரஸிகர்களின் உள்ளத்தில் அது எப்போதும் நிலை பெற்றிருக்கும் என்பது நிச்சயம்.” என்று எழுதினார். எம். எம். எஸ் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காதது திரையுலகுக்கு மாபெரும் இழப்பு. ஆனால் இசையுலகுக்கோ மதிப்பிட முடியாத லாபம்.