Published : 21 Sep 2018 11:36 AM
Last Updated : 21 Sep 2018 11:36 AM

திரைப்பள்ளி 18: ஒரு திரைக்கதையின் கருணை மனு!

கதைக்கருவை முதன்மைப்படுத்தி, அதன் மையப் பிரச்சினை (Central Conflict) கோரும் கதாபாத்திரங்களை உருவாக்கி, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் போதிய முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை எழுதப்பட்ட படமே ‘ஒரு கிடாயின் கருணை மனு’. படத்தின் தலைப்பில் ஆட்டுக்கிடாயின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால், அது அந்த ஆட்டின் கதை அல்ல. ஆட்டுகிடாயைப் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்த லாரியில் கிளம்பும் கிராமவாசிகள், கொலைப்பழி ஒன்றில் சிக்கிக்கொள்வதையும் அதிலிருந்து மீள, சுயநலநோக்கில் அவர்கள் செய்யும் முயற்சிகளையும் மிகையின்றிச் சித்தரிக்கும் கதை.

மனித உயிரோ மற்றவையோ, சுயநலம் என்று வரும்போது உயிரின் மதிப்பை மறந்துவிடுவதே இயல்பு. அதுபற்றித் துளி பிரச்சாரமும் இன்றி, முக்கியச் சம்பவத்துக்குப் பின்னான கிராமவாசிகளின் அணுகுமுறையை மிகையின்றி நாடகமயப்படுத்தி, எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு வலுச்சேர்க்க, கடைசி காட்சிவரை ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கிராமியம் குறையாத உயிர்ப்புடன் சித்தரித்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, கொண்டாடப்பட வேண்டிய திறமைகளில் ஒருவர்.

தாங்கள் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்துவிட்டதாகக் கருதும் கிராமத்தினர், அதை மறைக்கச் செய்யும் குளறுபடிகள் சுயநலத்தின் குற்றமாக மாறுகின்றன.

இதற்காக அவர்கள் நான்கு ஆண்டுகள் நீதிமன்றப்படிகளில் ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. லாரியில் வந்து விழுந்தவன், காயப்படாமல் இறந்துவிட்ட நிலையிலும் அவன் இறக்கக் காரணமாக இருந்தது லாரியா, இல்லை, அவன் சாப்பிட்டிருந்த விஷமா என்பதைக்கூட அறிந்து தெளிய முடியாத பதற்றத்தில், கிராமவாசிகள் பிணத்தை மறைத்து வைக்க முனைவதிலிருந்து தொடங்கிறது இத்திரைக்கதையின் மிகையற்ற நாடகம்.

பலியிடக் கொண்டுவரப்பட்ட ஆட்டுக் கிடாயின் மவுனப் பார்வைக் கோணத்திலிருந்து விரிந்துசெல்லும் திரைக்கதை, உயிரின் வலியைப் பார்வையாளனுக்கு ஓசையின்றிச் சொல்லிவிடுகிறது.

எல்லோரும் ஹீரோதான்

கிராமிய வாழ்வைப் பின்னணியாகக் கொண்ட பெரும்பாலான திரைப்படங்கள் ஒரு போலியான கிராமத்தை சிருஷ்டித்துக் காட்ட பிரயத்தனப்படுவதைப் பார்த்துப் பழகியிருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில், புதுமணத் தம்பதிகளுக்காக ஆட்டுக் கிடாயைக் குலதெய்வத்துக்குப் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தக் கிளம்பும் நடுவன்பட்டி கிராமம், அசலான, இயல்பான மனிதர்களை உலவும் ஒன்றாக அதிசயிக்க வைக்கிறது.

புதுமணத் தம்பதிகள் விதார்த், ரவீணா, அவர்களின் பெற்றோர், குலதெய்வத்துக்கு நேர்ந்துகொண்ட பாட்டி, இவர்களின் உறவுகள், விதார்த்தின் நண்பர்களான கொண்டி, ஏழரை, ஆடு வெட்டியபின் அதைக் கறியாக்கித் தரும் கசாப்புக் கடைக்காரர், அதைக் கறி விருந்தாக்கக் காத்திருக்கும் சமையல்காரர், லாரி டிரைவர், விபத்தல்லாத விபத்துக்குப் பின் ஸ்தலத்துக்கு வந்துசேரும் லாரி உரிமையாளர், சொந்த உறவுகளிடமே வருமானம் பார்க்க குட்டையைக் குழப்பும் வக்கீல் மாமா, குலதெய்வம் இருக்கும் விடம்பன்குளம் கிராமத்தின் கோவில் பூசாரி என ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியப் பிரச்சினைக்குப்பின் எப்படி நடந்துகொள்ளுமோ அப்படியே நடந்துகொள்கின்றன. அதனால் விதார்த் என்ற கதாநாயக நடிகர், கதைக்கருவை முன்னிலைப்படுத்தும் திரைக்கதையில் ஒரு சக கதாபாத்திரமாக மட்டுமே வலம்வரும் அதிசயம் நடந்தேறுகிறது.

எந்தக் கதாபாத்திரமும் வீண் என்றோ அவசியமற்றது என்றோ தோன்றாமல் அதனதன் இயல்பில் அப்படியே இருப்பதும், மையப் பிரச்சினையே அனைத்துக் கதாபாத்திரங்களின் செயல்களைத் தீர்மாணிப்பதும் இதை ஓர் உலகத் திரைப்படமாக உயர்த்திவிடுகிறது.

ஒரு விபத்து கொலை வழக்காக மாறிய மையப் பிரச்சினையின் வழியே, இரு கிராமங்களின் கதையை, அந்தக் கிராமங்களில் வாழும் மனிதர்களின் கதையை, அவர்களது நாட்டார் தெய்வ வழிபாடு, அதிலிருந்து நீங்க வேண்டிய பழமைகள், வெள்ளந்தித்தனம், தற்காத்துக்கொள்ளும் சுயநலம், பொறுப்பேற்காமை மலிந்த சாமானியர்களின் உலகை நம்முன் உள்ளது உள்ளபடி காட்சிக்கு வைக்கிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு’.

குற்றவுலகின் விரிவும் ஆழமும்

இதற்குச் சற்றும் குறைவின்றி, ஒரு இடத்தின் கதையையும் அங்கு வாழும் மனிதர்களின் கதையும் சொன்ன படம் ‘சிட்டி ஆஃப் காட்’. குற்றவுலகை மையப்படுத்தி உலகின் அனைத்து மொழிகளிலும் எண்ணற்ற திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால், குற்றவுலகை இயக்கும் ‘அவதாரம்’ போன்ற நிழல் மனிதர்கள் ஒருசிலரை மட்டும் திரைக்கதையில் முதன்மைப்படுத்தி, அவர்களது வாழ்க்கையில் மலிந்த பலவீனங்கள், குற்றத் தொழில்போட்டியின் வன்ம விளையாட்டால் விளையும் வன்முறை என தனிமனிதச் சாகசக் கதைகளாக அவை வெளிவருகின்றன. இதுபோன்ற படங்கள் முன்வைக்கும் குற்றவாளிகளின் உலகம் மிகக் குறுகிப்போன ஒன்று.

ஆனால் ‘சிட்டி ஆஃப் காட்’ இதுபோன்ற தனி மனித தாதாக்களின் கதையைத் தொடவில்லை. உலகின் மிக அழகான சுற்றுலா நகரங்களில் ஒன்று என வெளியுலகத்துக்கு அறிமுகமானது பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ. கால்பந்து விளையாட்டை வழிபடும் நகரங்களில் ஒன்று. முக்கியமாக நவீன உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும், 98 அடி உயரம்கொண்ட கிறிஸ்து மீட்பர் சிலை நிறுவப்பட்டிருக்கும் நகரம். அதனாலேயே ‘கடவுளின் நகரம்’ என்று அழைக்கப்படுவது.

அப்படிப்பட்ட நகரத்தின் வெளித்தெரியாத பின்தங்கிய குடிசைப்பகுதி ஒன்றின் கதை. அடிப்படை வசதிகள் கூட உருப்படியாகச் செய்துதரப்படாமல், ஆள்பவர்களால் தண்ணீர் தெளித்துவிடப்பட்ட இந்தப் பகுதி, எப்படி இளம் குற்றவாளிகளின் உற்பத்திக்கேந்திரமாக மாறியது என்பதைக் கூறும் கதை.

ஆனால், இளங்குற்றவாளிகள் குறித்த எவ்வித பச்சாதாப பயாஸ்கோப்பும் காட்டாமல் உள்ளது உள்ளபடி பிரச்சினையின் ஆழத்தை மவுனமாக ஆனால் அழுத்தமாகவும் ஆழமாகவும் பேசிய தழுவல் திரைக்கதையை, மவுனம் நிரம்பிய ஒரு கருணை மனுவாக எழுதியிருந்தார் பிராவ்லியோ மாந்தொவானி.

உயிர்கள் உதிரும் நிலம்

நான் லீனியர் கால வரிசையில் அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை. அந்த நகரில் பிறந்து வளர்ந்து, குற்றத்தொழிலிருந்து தப்பிப் பிழைத்த வெகுசில இளைஞர்களில் ஒருவனாகிய ராக்கெட் என்ற பத்திரிகை ஒளிப்பட கலைஞனின் ‘பாய்ண்ட் ஆஃப் வியூ’வில் தொடங்கும் கதை, அதன் முடிவிலிருந்து தொடங்குகிறது.

குற்றவாளிகளை வேட்டையாட வரும் போலீஸ் அணி, லில் டைஸ் தலைமையில் இயங்கும் போதைப்பொருள் விற்பனை அணி இருவருமே துப்பாக்கிக்களுடன் கொடூரமாக மோதிக்கொள்ளத் தயாராகிறார்கள். அவர்களுக்கு நடுவே மாட்டிக் கொள்கிறான் ராக்கெட். துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்குகையில் அவன் தப்பிக்க முயல்கிறான். அந்தக் காட்சியிலிருந்து ராக்கெட் சிறுவனாக இருந்த அறுபதுகளுக்குத் தாவிச்செல்கிறது திரைக்கதை.

சிறுவன் ராக்கெட்டின் விருப்பம் எப்படியும் ஓர் சிறந்த ஒளிப்படக் கலைஞனாக வேண்டும் என்பது. அவன் வயதையொத்த லில் டைஸின் விருப்பமோ கொள்ளையடிப்பது, கொலை செய்வது, போதைப்பொருள் கடத்துவது என அப்படியே முரண். ஸில் டைஸ் அந்தப் பகுதியின் அடையாளம். ராக்கெட் அந்தப் பகுதியின் விநோதம். பத்து வயது நிரம்புவதற்குள் பல கொலைகள், கொள்ளைகள் செய்து அப்பகுதியின் தனிப்பெரும் போதைப்பொருள் கடத்தல்காரனாக உருவெடுக்கிறான்.

தனது வேட்டையிலிருந்து தப்பிக்கும் கேரட் உடன் மோதுகிறான் வளர்ந்து இளைஞனாகிவிட்ட லில் டைஸ். அந்த மோதலிலிருந்து தப்பித்தாலும் அப்பகுதியில் வளர்த்த பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்களால் அவன் சுட்டுக்கொல்லப்படுகிறான். ‘பொதைப்பொருள் கடத்தல், திருட்டு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது என எங்களைத் தடுக்க இந்த ஸில் டைஸ் யார்’ என அந்தச் சிறுவர்கள் நினைத்ததுதான் விளைவே ஸில் டைஸின் படுகொலை.

விளையாட்டு பொம்மைகள் இருக்க வேண்டிய அப்பகுதி சிறார்களின் கைகளில் எப்போதும் வெடிக்கக் காத்திருக்கின்றன துப்பாக்கிகள். மனித உயிர்கள் கண் இமைப்பதற்குள் உதிர்ந்துவிழும் இரக்கமற்ற களர் நிலமாக இருக்கிறது அப்பகுதியின் கதை.

ராக்கெட், சில் டைஸ் உட்பட பத்துக்கும் அதிகமான கதாபாத்திரங்கள். மூன்று காலகட்டத்தில் நிகழும் திரைக்கதை என, ஒரு புறக்கணிக்கப்பட்ட பகுதி எப்படி நிரந்தரமான குற்றவுலகாக நீடிக்கிறது என்பதைக் கூறிய இந்தப் படம், கதை நிகழும் களத்தையே முதன்மைப்படுத்தியது. அடுத்த வகுப்பில் ஒரு திரைக்கதையின் தொடக்கமும் முடிவும் எப்படி அமைய வேண்டும் என்பதைப் பார்ப்போம்..

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x