சிற்றிதழ் அறிமுகம்: இன்றைய தகவல் நாளைய வரலாறு

சிற்றிதழ் அறிமுகம்: இன்றைய தகவல் நாளைய வரலாறு
Updated on
1 min read

திரைப்பட வெளியீடு, திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் சார்ந்த தகவல்களை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றித் திரட்டித் தந்து திரைப்பட வரலாற்றுக்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர் பிலிம்நியூஸ் ஆனந்தன்.

அவரது மறைவுக்குப்பின், அவரது வழியில் பலர் முயன்று வருகிறார்கள். அந்த வகையில் முழு ஆண்டுக்குமான திரைப்படத் தகவல்களைத் திரட்டித் தொகுத்தளிக்கும் பணியைத் திறம்படச் செய்து வருகிறது ‘துளசி சினிமா நியூஸ்’ என்ற காலாண்டிதழ்.

கடந்த மூன்று மாதங்களில் எந்தெந்த தேதியில் எத்தனை படங்கள் வெளிவந்தன, அவற்றில் மொழிமாற்றுப் படங்கள் எத்தனை என்பதில் தொடங்கி, படக்குழு சார்ந்த விவரங்கள், திரைத்துறை சார்ந்த தேசிய, மாநில விருது பெற்ற படங்கள், நட்சத்திரங்கள் மற்றும் ஆளுமைகளின் பட்டியல், திரையுலகத் திருமணங்கள், இறப்புகள் என சினிமா வரலாற்றின் ஒரு பகுதியாக மாறவிருக்கும் தகவல்கள் துல்லியமாக வெளியிடப்படுகின்றன.

கடந்த மூன்று மாதங்களில் திரைத்துறை மீது தாக்கமும் ஆதிக்கமும் செலுத்திய முக்கியச் செய்திகளைத் தேர்ந்தெடுத்து ‘திரையுலகச் செய்திகள்’ என்ற பத்தியின் கீழ் வெளியிட்டிருக்கிறார்கள். இவை தவிர கடந்தகால சினிமா வரலாற்றுத் தகவல் துளிகளையும் வெளியிடுகிறது துளசி சினிமா நியூஸ். சினிமா தகவல்களின் ஒருபகுதியாகப் படங்களின் வெற்றி, தோல்வி வசூல் விவரங்களும் இடம்பெறத் தவறவில்லை. 

இந்தச் சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஏவி.எம் பட நிறுவனத்தின் நீண்டகால மக்கள் தொடர்பாளரும் மூத்த பத்திரிகையாளருமான பெரு.துளசிபழனிவேல். திரைப்பட மக்கள் தொடர்பைத் தாண்டி, கடந்தகால சினிமா வரலாற்றைப் பல பத்திரிகைகளில் எழுதிவருபவர். தனிச்சுற்றுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டுவரும் இந்த இதழை, திரை ஆர்வலர்கள் சந்தா செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

துளசி சினிமா நியூஸ்

ஆசிரியர்: பெரு.துளசிபழனிவேல்

எண்:18/9 முத்துவேல் தெரு,

ராகவன் காலனி, கோடம்பாக்கம், சென்னை -24

தொடர்புக்கு: 9500024843சிற்றிதழ் அறிமுகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in