

தெலுங்குத் திரையுலகின் வசூல் ஹீரோக்கள் பட்டியலில் மகேஷ்பாபு முதலிடத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவரையே தற்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கிறார்கள். ஆனால் அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நாங்கள் விட்டுத் தரமாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள் சிரஞ்சீவியின் ரசிகர்கள். ரஜினியைப்போல தொடர்ந்து நடிக்காமல் அரசியல், சினிமா என்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி தற்போது ‘சைரா’ என்ற வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் மூன்று சிறப்பு அம்சங்கள். நயன்தாரா, சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பது அதில் ஒன்று. இரண்டாவது விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள். படத்தை இந்தியிலும் வெளியிட வேண்டும் என்றால் பாலிவுட் ரசிகர்கள் நன்கறிந்த ஒரு முகம் வேண்டுமே.
சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதால் இந்தப் படத்தில் நட்புக்காக ஒரு கவுரவக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘பிக்பி’ அமிதாப் பச்சன். உடல்நிலை சரியில்லாமல் பரபரப்பை ஏற்படுத்திய அமிதாப் தேறி தற்போது இந்தப் படத்தில் நடித்துக் கொடுப்பதற்காக ஹைதராபாத் வந்திருப்பதுதான் அந்த மூன்றாவது சிறப்பு அம்சம். படக் குழுவின் அனுமதிக்காகவெல்லாம் காத்திருக்காமல் ஏற்றிருக்கும் கதாபாத்திரத் தோற்றத்தைத் தனது வலைப்பூவில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
“ஆந்திரத்தின் சூப்பர் ஸ்டார் எனது நண்பர் சிரஞ்சீவி நடிக்கும் பிரம்மாண்ட வரலாற்றுப் படத்தில் கவுரத் தோற்றத்தில் நடிக்க அழைத்தார். வீரம் செறிந்த சரித்திரக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கும் படம் என்பதால் நடிக்கச் சம்மதித்தேன். அந்தப் படத்தில் நான் வரவிருக்கும் தோற்றத்தின் மேக்-அப் டெஸ்ட் இது. இதுவே இறுதி அல்ல என்றாலும் எனது தோற்றதுக்கு மிக நெருக்கமான கெட்-அப் என்று கூறலாம்” என்று கூறி வழக்கம்போல தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துவிட்டார்.