Published : 26 Sep 2014 12:22 PM
Last Updated : 26 Sep 2014 12:22 PM

அலசல்: ஆஸ்கர் ஆட்டம் ஆரம்பம்

தொடங்கிவிட்டது ஆஸ்கர் காய்ச்சல். கடந்த 1957-ம் ஆண்டு மெஹபூப் கான் இயக்கிய ‘மதர் இண்டியா’ படம்தான் முதன்முதலில் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படம். கடந்த 57 வருடங்களில் மூன்று இந்தியப் படங்கள் மட்டுமே சிறந்த வெளிநாட்டு மொழிப் படங்களுக்கான ஆஸ்கர் பிரிவில் முதல் 5 இடங்களில் அழுத்தமாக இடம்பிடித்தன.

ஆனால் இதுவரை ஒரு இந்திய மொழிப் படம்கூடச் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வெல்ல முடியவில்லை. கடைசியாக 2001-ம் ஆண்டு போட்டியில் நூலிழையில் விருதைத் தவறவிட்ட படம் ‘லகான்’.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2014-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்படும் இந்தியப் படம், கடந்த அக்டோபர் முதல் நடப்பு செப்டம்பர் 26ம் தேதி வரை வெளியாகியிருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்தபட்சம் 7 நாட்களாவது ஓடியிருக்க வேண்டும் என்பதும் விதிமுறை. ஆனால் தேர்வுப் பட்டியல் செப்டம்பர் 23-ம் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது.

ஐம்பதாயிரம் ரூபாயை விண்ணப்பத் தொகையாகக் கட்டினால்தான் ஒரு படத்தைத் தேர்வுக்கு அனுப்ப முடியும். தமிழ் சினிமாவிலிருந்து ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ‘கோச்சடையான்’ ஆகிய இரண்டு படங்கள் டெல்லிக்கு அனுப்பட்டிருக்கின்றன. பாராட்டுகளையும், விருதுகளையும் அள்ளிய ‘தங்க மீன்கள்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்கள் ஏனோ அனுப்பப்படவில்லை.

இந்தியப் படங்களின் வலிமை

ஆஸ்கர் விருது பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் “ஆஸ்கர் விருதுதான் உலகின் உயர்ந்த திரை விருதா?” என்ற கேள்வியும் எழும். ஆனால் ஆஸ்கரின் மீதான ஆவல் என்னமோ குறைந்தபாடில்லை. இதுவரை 46 இந்தியப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 30 இந்திப் படங்கள்.

இந்திப் படவுலகத்துக்கு அடுத்து ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட படங்களில் தமிழுக்கு இரண்டாமிடம். இதுவரை எட்டுத் தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறந்த கலைப்படங்களை எடுக்கும் வங்காளம், மராத்தி, கன்னடம், மலையாளம் மொழிப் படங்களை விடத் தமிழுக்குக் கூடுதல் இடம் என்பது ஆச்சரியமான உண்மை. முதன்முதலில் அனுப்பப்பட்ட தமிழ்ப் படம், தெய்வ மகன் (1969). கடைசியாக அனுப்பப் பட்ட படம், ஹேராம் (2000).

கமலும் ஆஸ்கரும்

1987 முதல் 2000 வரை மட்டும் 7 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட சம அளவில் தமிழும் (7), ஹிந்தியும் (6) தேர்வாகியுள்ளன. கடந்த 1993-94-ம் ஆண்டுகளில் இரண்டு இந்திப் படங்கள் தேர்வானால் அடுத்து வந்த 1995-96-ல் இரண்டு தமிழ்ப் படங்கள் தேர்வாகியிருக்கின்றன! ஆஸ்கருக்கான தேர்வு என்கிற வகையில் தமிழ் சினிமாவுக்குப் பொற்காலம் அது.

ஆஸ்கரை ஒரு கட்டத்துக்குப் பிறகு கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிய கமல ஹாசன் நடிப்பிலும் எழுத்துபூர்வ பங்களிப்பிலும் உருவான ஏழு படங்கள் இதுவரை ஆஸ்கருக்கு அனுப்பட்டுள்ளன. இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. கமலுக்கு அடுத்த இடத்தில் வருகிறார் அமீர் கான். அவரது நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவான நான்கு படங்கள் ஆஸ்கருக்குத் தேர்வு பெற்றிருக்கின்றன.

1985 முதல் 2000 வரை கமல் நாயகனாக நடித்த ஏழு படங்கள் ஆஸ்கருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கமலின் ஆஸ்கர் கனவு தீவிரமாக இருந்த காலகட்டம் அது. இருந்தாலும் குணா, மகாநதி, அன்பே சிவம் போன்ற கமலின் சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைக்காமலே போய்விட்டது.

வெகுஜனத்தன்மை, கலையாளுமை இரண்டும் அமையப்பெற்ற மணிரத்னத்தின் நாயகன், அஞ்சலி ஆகிய படங்கள் ஆஸ்கருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் ஜனரஞ்சகமாக மட்டுமே திரைப்படங்களை எடுக்கும் ஷங்கரின் இந்தியன், ஜீன்ஸ் ஆகிய படங்களும் ஆஸ்கர்வரை போய்விட்டுத் திரும்பியதுதான் ஆச்சரியம்.

இதுவரை இரண்டு மலையாளப் படங்கள் மட்டுமே ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. ஸ்வாதி முத்யம் என்ற ஒரேஒரு தெலுங்குப் படம் ஆஸ்கருக்குத் தேர்வாகிச் சென்றதில் டோலிவுட் தப்பித்தது. ஆனால் கன்னடத் திரையுலகுக்கு ஒருமுறைகூட இந்தக் கவுரவம் கிடைக்கவில்லை.

ஆச்சரியகரமாக 2000-க்குப் பிறகுதான் தமிழில் வித்தியாசமான முயற்சிகள் அதிகம் நடக்கின்றன. ஆனால் கடந்த 15 வருடங்களில் ஒரு தமிழ்ப் படத்தாலும் ஆஸ்கர் பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. அதனால் என்ன? காலம் கனியக் கூடும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x