

ம
லையாளத்தில் தவிர்க்க முடியாத இளம் நாயகனாக வலம்வரும் துல்கர் சல்மான், ‘வாயை மூடிப்பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ‘ஓ காதல் கண்மணி’ அவருக்குத் தமிழில் வெற்றியாக அமைந்தது. தற்போது பாலிவுட்டிலும் அடிவைக்கிறார்.
ஆகாஷ் குரானா இயக்கிவரும் ‘கர்வான்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். அந்தப் படத்தில் துல்கருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் தற்போது சர்வதேச நட்சத்திரமாகப் புகழ்பெற்றிருக்கும் இர்ஃபான் கான். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில் தனது இரண்டாவது இந்திப் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் துல்கர்.
அனுஜா சவுகான் எழுதிய ‘த ஜோயா ஃபேக்டர்’ என்ற நாவலைத் தழுவி அதே தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடி சோனம் கபூர். ‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநதி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஆகிய தமிழ்ப் படங்களில் தற்போது நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.