

‘லிரிக் இன்ஜினியரிங்’ என்ற ஐடியாவை பிரபலப்படுத்திவருபவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி. அவர் இணை இயக்குநராக பணிபுரிந்துவரும் நிறுவனம் ‘டூபாடூ’ (DooPaaDoo).
திரைப்பாடல்களை எழுதவும் இசையமைக்கவும் விரும்பும் சுயாதீனக் கலைஞர்களை ஒருங்கிணைக்கும் செயலி இணையதளம் இது. இயக்குநர்கள் தங்கள் படங்களுக்குத் தேவையான பாடல் வரிகள், இசையை இந்த செயலி வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் ‘காஞ்சனா 3’ படத்துக்குத் தேவையான ஆறு பாடல்களை இந்த செயலி வழியாகவே பெற்று படத்தில் இணைத்திருக்கிறார் அந்தப் படத்தின் இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ்.
இதற்காக அவர் அளித்த தொகையை, அவர் தேர்ந்தெடுத்த பாடல்களை உருவாக்கிய சுயாதீனக் கலைஞர்களுக்கு டூபாடூ வழங்கியிருக்கிறது.
இதுபற்றி ‘டூபாடூ’வின் தலைமைச் செயல் அதிகாரி கவுந்தேயா கூறும்போது, “நாங்கள் இன்னும் பல இயக்குநர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். சுயாதீன கலைஞர்களை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் புகழை விரிவுபடுத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம்.” என்கிறார்.