

கடந்த மாதம் இணையத்தில் வெளியாகி 12 லட்சம் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘லேசா வலிச்சுதா’ என்ற பாடல். ஜெகன் சாய் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘ஜாஸ்மின்’ படத்துக்காக சி.சத்யா இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் பாடல்.
இசையிலும் வரிகளிலும் நிரம்பி வழியும் காதலைத் தாண்டி, ‘ஜாஸ்மின் – எ டெவில் ஃப்ளவர்’ என்ற படத்தின் துணைத் தலைப்பு கூறும் கதையின் ரகசியம் பற்றிக் கேட்டதும், உற்சாகம் பொங்கப் பேசத் தொடங்கினார் இயக்குநர் ஜெகன் சாய்…
வெள்ளைப் பன்றிக்குட்டி ஒன்றை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து ‘ஜெட்லீ’ என்ற படத்தை இயக்கி வந்தீர்களே… அந்தப் படம் என்னவானது?
முதல் கட்டப் படப்பிடிப்புடன் தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்திருக்கிறோம். நாய் தொடங்கி யானைவரை விலங்குகளை வைத்து நிறையப் பொழுதுபோக்குப் படங்களை எடுத்திருக்கிறார்கள். ஆனால், வெள்ளைப் பன்றி தமிழ் சினிமாவில் இதுவரை இடம்பெற்றதில்லை. உலகமயமாக்கலுக்குப் பின்னர் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், கலாச்சாரரீதியாகப் பல மூடநம்பிக்கைகளைக் கைவிட இன்னும் நாம் தயாராக இல்லை.
இதைக் கிண்டலடிக்கும் ஒரு முழுநீள நகைச்சுவைக் கதையில் பேசும் வெள்ளைப் பன்றிக்குட்டி ஒரு கதாபாத்திரமாக இடம்பிடித்துக்கொண்டது. முதல் கட்டமாக வசனப் பகுதிகளைப் படம்பிடித்தோம். பன்றிக்குட்டி அனிமேஷனையும் லைவ் ஆக்ஷனையும் இணைக்க, ‘நார்னியா’ படத்துக்கு 3டி அனிமேஷன் செய்த ஹாலிவுட் நிறுவனத்தை அணுகினோம். பன்றிக்குட்டி வரும் காட்சிகளுக்கு மட்டும் ரூ 4.5 கோடி செலவாகும் என்று தெரியவந்தது.
அதேபோல ‘ஜெட்லீ’ படத்தின் முதல்பார்வை போஸ்டர்களைப் பார்த்துவிட்டு இந்திய அளவில் வியாபாரமும் சூடுபிடித்தது. இதில் புதுமுகங்களுடன் அமிதாப் பச்சன் போன்ற ஒரு அகில இந்திய நட்சத்திரம் இருந்தால் இது இன்னும் பெரிய படமாகிவிடும் என்று முடிவு செய்தோம். எனவே, அதைப் பெரிய திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறோம். அதற்குமுன் இயக்குநராக என்னை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால், ‘ஜாஸ்மின்’ திரைப்படத்தை முதலில் இயக்கி முடித்திருக்கிறேன்.
‘ஜாஸ்மின் – எ டெவில் ஃப்ளவர்’ என்ற தலைப்பே கதை சொல்கிறதே…
கதையைச் சொல்வதுபோல் தோன்றலாம். ஆனால், துளியளவுகூட ஊகிக்க முடியாது. இது பெண்ணுலகம் சார்ந்த ஓர் அழகியல் கதை. ஹாலிவுட்டிலும் பிரெஞ்சுமொழி சினிமாவிலும் ரொமாண்டிக் திரில்லர் வகையில் உருவாகும் படங்களுக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
தமிழில் ரொமாண்டிக் திரில்லர் படங்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்வேன். பிடிவாதத்துடன் அதைத் தமிழில் முயன்றிருக்கிறேன். காட்சியமைப்பு, வசனம், இசை ஆகியவற்றில் இருக்கும் ‘ரிச்னெஸ்’ ரசிகர்களை ‘அட!’ போட வைக்கும்.
என்ன கதை?
ஆதிநீலி, பத்ரகாளி, உமையவள் தொடங்கி தேவதைத் தொன்மம் வரை நமது கலாச்சாரத்திலும்
அவளால் அவர்களைக் கடந்து வர முடிந்ததா என்பதுதான் கதை. இதுவொரு பெண் மையக் கதை. அந்த மூன்று ஆண்களின் பார்வையில் அவளொரு மனித தேவதை. தேவதையிடம் அன்பெனும் வரத்தைக் கேட்கலாம். ஆனால், அவளது இறக்கைகளைக் கேட்க முடியுமா? ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்றொரு சிறந்த பழமொழி உண்டு. அதன் அர்த்தத்தை, தொன்மையை அசைத்துப் பார்க்கும் கதை.
பெண் மையக் கதையில் ஒரு புதுமுகமா?
‘அருவி’ படத்தில் தொடங்கி தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்டே அதுதானே? தவிர இந்தக் கதைக்கு ஒரு அறிமுகக் கதாநாயகியும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் புதுமுகங்களாக இருந்தால் ரசிகர்கள் ‘திரில்’ உணர்வை இன்னும் அதிகமாக உணர முடியும்.
கதாநாயகியாக பெங்களூரு மாடல் அனிகா விக்ரமன் அறிமுகமாகிறார். இவருடன் திராவிடன், இளங்கோ பொன்னையா, பினுராம், கஸ்தூரிப் பாட்டி, டிவி நட்சத்திரமான மீனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
உங்கள் படக்குழு?
முதலில் இசையமைப்பாளர் சி.சத்யா பற்றிக் கூற வேண்டும். கதையைத் தாங்கிப்பிடிக்கும் சிறந்த ஆறு பாடல்களைத் தந்திருக்கிறார். அதில் ‘லேசா வலிச்சுதா’ பாடல் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார்.
ஒளிப்பதிவை பகத்குமாரும், படத்தொகுப்பை தமிழ்க்குமரனும், கலை இயக்கத்தை சரவணனும் கையாண்டிருக்கிறார்கள். தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவருகின்றன.