

வெற்றியோ தோல்வியோ போட்ட முதலீட்டுக்கு இழப்பை ஏற்படுத்தாத நடிகர் எனப் பெயரெடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது ‘கொலைகாரன்’. அந்தப் படத்துடன் ‘அக்னிச் சிறகுகள்’, ‘தமிழரசன்’, ‘காக்கி’ என ஓடி ஓடி நடித்துக்கொண்டிருப்பவரைப் படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
படங்களை உடனுக்குடன் ஒப்புக் கொள்வதில் விஜய் சேதுபதிக்கும் விஜய் ஆண்டனிக்கும்தான் போட்டியோ எனத் தோன்றுகிறது?
நிச்சயமாகக் கிடையாது. எனக்கென்று ஒரு தோற்றம் இருக்கிறது. எனக்கென்று ஒரு குரல், வசன உச்சரிப்பு இருக்கிறது. அதேபோலத்தான் எனது உடல்மொழியும். அது, என் உடலோடு ஒட்டிப்பிறந்த சட்டை மாதிரியான ஒன்று. ‘நான்’ என்ற படம் வந்த நாளிலிருந்து இந்த விஷயங்களையும் மனத்தில் வைத்து, கதைகளைத் தேர்வுசெய்து நடித்துக்கொண்டிருக்கிறேன். என்றாலும், நான் ஒப்புக்கொள்ளும் கதைகளில் கதாநாயகனுக்கான இடம் வலுவாக, மாஸாக இருக்கிறதா என்று பார்க்கிறேன்.
ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறதா என்று தேடுகிறேன். பொழுதுபோக்கு அம்சங்களுக்குத் திரைக்கதையில் போதிய இடம் கூடி வந்திருக்கிறதா என்று ஆராய்கிறேன். வேண்டு மானால் இப்படிச் சொல்லலாம். யார் அதிகப் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது என்பதிலும் எவ்வளவு விரைவாகப் படங்களை முடித்துக் கொடுக்கிறோம் என்பதில் வேண்டுமானால் எனக்கும் விஜய்சேதுபதிக்கும் போட்டி என்று கூறலாம். விஜய் சேதுபதி துணிந்து சோதனை முயற்சிகளை ஏற்று நடிப்பவர்.
‘பிச்சைக்காரன்’ உங்களை வசூல் நாயகன் ஆக்கியது. ஆனால், அதன் பிறகான சில படங்களின் கதைகளைத் தேர்வுசெய்ததில் கொஞ்சம் சறுக்கிவிட்டீர்கள் என்று கூறலாமா?
அதைச் சறுக்கல் என்றோ தவறான தேர்வு என்றோ பார்க்கத் தேவையில்லை. நான் மெட்டமைத்த ‘நாக்க முக்கா’ என்ற அந்த ஒரு பாடலுக்காகவே படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கியது. அதற்கு ஈடுகொடுக்கிற மாதிரியான ஒரு சூப்பர் டூப்பர் பாடலை வேறொரு படத்துக்கு என்னால் இசை அமைக்க முடிந்ததா? மிராக்கிள் என்பது மில்லியனில் ஒன்றாக நிகழ்வதுதான்.
‘பிச்சைக்காரன்’ படமும் அப்படியொரு மிராக்கிள்தான். தாய்மையை மிக உயரமான இடத்தில் வைத்துக் கொண்டாடியதும் அந்தப் படத்தின் ‘பிளாக் பஸ்டர்’ வெற்றிக்கு ஒரு காரணம். கதை கேட்டு, பிடித்து, நடித்து நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையில்தான் ஓடுகிறேன்; உழைக்கிறேன். ஆனால், எவ்வளவு அழகான படத்தை உருவாக்கி முடித்திருந்தாலும், அதன் வெற்றி சில புறக் காரணங்களையும் சார்த்திருக்கிறது.
ஒரு படம் தயாராகி முடிந்தவுடன் வியாபாரமாக அது எப்படிக் கையாளப்படுகிறது, அது யார் கைக்குப் போகிறது, அதை அவர்கள் எப்படி, எந்தத் தருணத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் என்பவைதாம் அந்தக் காரணங்கள். பல நேரத்தில் மிகச் சாதாரணப் படங்கள்கூட நன்றாக ஓடியிருக்கும். அதற்கு இந்தப் புறக் காரணங்கள் சரியாக அமைந்துவிடுவதும் ஒரு காரணம்.
’காளி’ படத்தில் இடம்பெற்ற ‘அரும்பே அரும்பே’ பாடல் 50 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நீண்ட விடுமுறையில் போய்விட்டார் போலிருக்கிறதே?
நடிகர் விஜய் ஆண்டனியின் வளர்ச்சிக்காக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்குச் சிறிது காலம் விடுமுறை கொடுப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நடிகர் விஜய் ஆண்டனி வெவ்வேறு இசைக்கலைஞர்களின் வெவ்வேறு பாணி இசையில் நனைந்தால்தான் அவருக்கு விதவிதமான கலர் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது ‘கொலைகாரன்’ படத்தில் சைமன் கே. கிங் இசையில் ‘கொல்லாதே கொல்லாதே’ என்றொரு பாடல். ரசிகர்கள் கொண்டாடப்போகும் பாடல். படத்தில் இசையும் படமாக்கமும் எனக்கு வேறொரு கலர் தந்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இளையராஜாவின் இசையை வைத்துத்தான், நான் இசையையே கற்றுக்கொண்டேன். அவரது இசையில் நடிப்பதையும் எனக்கான முக்கியத் தருணமாக உணர்கிறேன்.
‘அண்ணாதுரை’யில் எடிட்டிங் பொறுப்பையும் நீங்கள் ஏற்றிருந்தீர்களே?
இசையைப் போலவே எடிட்டிங்கும் எனக்குப் பிடித்தமான கலைதான். எடிட்டிங்கும் ஒரு லயத்தோடு சம்பந்தப்பட்டிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். எனது முதல் படத்திலிருந்தே ‘ரஃப் கட்’டுக்குப் பின்னர் ‘ஃபைனல் கட்’டை நானே செய்து வந்திருக்கிறேன். பெயர் போட்டுக் கொள்ள விரும்பியதில்லை அவ்வளவுதான். ‘அண்ணாதுரை’ படத்தின்போது எனது எடிட்டர் வேறொரு படத்துக்குப் பணியாற்றப் போனவர், வேலை முடியாமல் அங்கே மாட்டிக்கொண்டார். அதனால் அதிகாரபூர்வமாக நானே பெயர்போட்டு எடிட் செய்தேன்.
போலீஸ் கதைகள் உங்களை அதிகம் வட்டமிடுகிறதோ?
இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு கதையும் எப்படி வேறுபடுகிறது என்பதில்தானே விஷயம் அடங்கியிருக்கிறது. பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் ‘தமிழரசன்’ என்ற உணர்வுபூர்வமான தமிழனாக நடிக்கிறேன். நல்ல போலீஸ் கதாபாத்திரம். எல்லோரையும் கவரும் விதத்தில் அமைந்த குடும்பக் கதை. இதற்கு நேர்மாறாக ‘காக்கி’ படத்தில் ஒரு அடாவடி போலீஸாக நடித்துவருகிறேன். இது முழுவதும் காவலர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட படம்.
மற்ற படங்களைப் பற்றிக் கூறுங்கள்?
‘மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் ‘அக்னிச் சிறகுகள்’ மற்றுமொரு சிறந்த கதை. அதில் அருண் விஜய்யுடன் நடிக்கிறேன். எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் பழகும் திறமையான நடிகர் அவர். இதில் ஷாலினி பாண்டேயுடன் நடிப்பதையும் முக்கியமானதாக நினைக்கிறேன். கடவுளே நடித்தாலும் கதை இருந்தால்தான் நடிகர்களுக்கும் நடிப்புக்கும் வேலை.
‘கொலைகாரன்’ படத்தில் நடிகர்களாக நின்றாலே போதும் என்ற அளவுக்குக் கதை இருக்கிறது. அந்த மாயத்தை இயக்குநர் ஆண்ட்ரூ செய்திருக்கிறார். என்றாலும், வேலைகள் முடிந்து ஃபைனலாகச் சில காட்சிகளைப் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியிலும் சர்வசாதாரணமாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் அர்ஜுன் சார். ஒரு ரசிகனாகச் சொல்கிறேன். ‘கொலைகாரன்’ கோடைவிடுமுறைக்குச் சரியான விருந்தாக இருக்கும்.