

ஷாரூக் கானும் பெண் இயக்குநர் ஃபரா கானும் அருமையான நண்பர்கள். ஃபரா கானின் இயக்கத்தில் ஷாரூக் கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ மற்றும் ‘மெய்ன் ஹூன் நா’ படங்கள் பெரும் வெற்றியை ருசி பார்த்தவை.
மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்திருக்கும் ‘தி ஹேப்பி நியூ இயர்’ படத்தின் டிரைலரைப் பத்து நாட்களில் மூன்று மில்லியன் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். பாலிவுட்டுக்கு நிஜமான நட்சத்திர தீபாவளி என்று தோன்ற வைக்கும் இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன், பொமன் இரானி, சோனு சூத் ஆகியோருக்குச் சமமான முக்கியத்துவம் தரும் பாத்திரங்கள் உண்டு.
ஜாக்கி ஷெராஃப் வில்லனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் ‘மோகினி’ என்ற பெயருடன் மராத்தி நடனக் கலைஞராக வருகிறார். சார்லி என்ற ஸ்டைலிஷ் திருடனாக வரவிருக்கிறார் ஷாரூக்.
உலகின் புகழ்பெற்ற வைரங்களை ஆறு பேர் கொண்ட தன் நண்பர்கள் குழுவுடன் கொள்ளையடிக்கப் புறப்படுகிறார் ஷாரூக். ஆனால் அந்த ஆறு பேரும் ஆறு கிரகங்கள் என்றால் நகைச்சுவை ரகளைக்கு எவ்வளவு இடமிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆடல், பாடலோடு நகைச்சுவையும் ஆக்ஷனும் கலந்த த்ரில்லராக இந்தப் படம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவுதானா படத்தின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால் ஐ படத்துக்குக் கொஞ்சமும் குறையாத 15 கோடியில் படத்தை எடுத்திருக்கிறார்கள். துபாயில் உள்ள புகழ்பெற்ற அட்லாண்டிஸ், தி பாம் ரிசார்ட்டிலும் பெரும்பகுதியைப் படம் பிடித்தில் இடம்பெரும் வான வேடிக்கைக்கு மட்டுமே 3 கோடி பணத்தைக் கரியாக்கியிருக்கிறார்களாம்.
பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இரட்டை இசை அமைப்பாளர்கள் விஷால் சேகரின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் மனுஷ் நந்தன். இவர் பத்திரிகையாளர் ஞாநியின் புதல்வர்.
தீபாவளிக்கு ஷங்கரின் ‘ஐ’ படமும் வெளியாகும் நிலையில் தமிழ் பேசிக்கொண்டு ஷாரூக் கானும் அக்டோபரில் ஆஜராகிறார். சும்மாவா... போட்ட பணத்தை எடுக்க வேண்டுமே!
இதற்கிடையில் ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலியின் கணவரும் ஹாலிவுட் நாயகனுமான பிராட் பிட் நடித்த ஃபியூரி (Fury) என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தின் இந்திய உரிமையைப் பெற்றுள்ள பிவிஆர் நிறுவனம் ஃபியூரி படத்தை இந்தியாவில் இரண்டு வாரங்கள் கழித்து, அதாவது அக்டோபர் 31-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். ஷாரூக் கான் படத்துக்கு வழிவிடும் விதமாகவே ஃபியூரியைத் தள்ளி வைத்திருக்கிறார்களாம்.