

போர்க் களத்தில் நின்று நேரடியாகச் செய்திகளைச் சேகரிப்பவர் பத்திரிகையாளர் விடேக். அவருடைய காதல் மனைவி அன்னா. உள்ளூர் நிலவரங்களைத் தரும் அவரும் ஒரு பத்திரிகையாளர்தான். மனைவியும் குழந்தைகளும் நிம்மதியாக ஊருக்குள் வசிப்பதால் யுத்த பூமியில் நிதானமாக இருக்கிறார் விடேக். ஆனால், தன்னுடைய கணவருக்கு எந்தத் தருணத்திலும் இறப்பு நேரிடும் என்ற பயத்தில் கலவரப்பட்டுக் கிடக்கிறாள் அன்னா.
ஏதேனும் தொலைபேசி அழைப்புவந்தால்கூட அது விடேகின் மரணச் செய்தியாக இருக்குமோ என்ற பயம் அவளைச் சூழ்கிறது. தனது குழந்தைகளைக்கூடக் கவனிக்க முடியாமல் எந்நேரமும் போர் குறித்த நிலவரங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தபடியே கிடக்கிறாள். ஆனாலும், குழந்தைகளிடமும் அவ்வப்போது வீடு திரும்பும் கணவனிடமும் தன்னுடைய வலியை மறைத்துக்கொள்கிறாள்.
யுத்தத்தைவிடவும் கொடியது…
சொல்லொணா தனிமை அவளைப் பிடித்தாட்ட நாளடைவில் மனப்பிறழ்வுக்கு ஆட்படுகிறாள். அக்கம்பக்கத்தில் நடக்கும் கட்டுமானப் பணியில் எழும் இரைச்சல் கூடக் குண்டு பொழியும் சத்தம் போல அவளைத் துளைக்கிறது. சின்ன ஒலியைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் அலறுகிறாள்; ஓலமிடுகிறாள். கணவன் உயிரோடு வந்து சேர வேண்டும் என்ற மனநிலையில் இருந்து அவருடைய மரணச் செய்திக்காகக் காத்திருக்கும் நிலைக்கே தள்ளப்படுகிறாள்.
நிஜத்துக்கும் கற்பனைக்கும் இடையிலான இடைவெளி மயங்குகிறது. போர்க் களத்தில் மரணமடைந்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்து இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள் அன்னா. திடீரென்று விடேக் கண்முன்னே வந்து நிற்கிறார். இனியும் இந்த மனப் போராட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவளாகக் கணவனையே கொன்றுவிடுகிறாள். பின்பு அதுவும் அவள் மனம் ஏற்படுத்திய மாயை என்று தெரியவருகிறது.
இப்படிப் போரால் ஏற்படும் மன அழுத்தத்தை, பெண்ணின் தனிமையைத் தீவிரமாகத் திரையில் புனைந்திருக்கும் படம், ‘53 வார்ஸ்’. போலந்து நாட்டின் பெண் எழுத்தாளர் கிரஜினா ஜகல்ஸ்காவின் சுயசரிதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் போலந்து நாட்டின் படம் இது. யுத்தத்தைவிடவும் கொடியது யுத்தம் ஏற்படுத்தும் அச்சுறுத்தலும் தாக்கமும்.
அவை எப்படி இருக்கும் என்பதை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் போலந்து நாட்டின் பெண் திரைப்பட இயக்குநர் ஈவா புகோவ்ஸ்கா. பிரபல நடிகையான இவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படமான இது 16-வது சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட்டது.
ஆழ்மனத்தை வாட்டும் ரணம்
போர் மூண்டிருக்கும் உலகில் தங்களுடைய கணவனும் மகன்களும் பத்திரமாக வீடு திரும்பும் தருணத்துக்காக ஏங்கிக் காத்திருக்கும் பெண்களின் மனத்தைத் திரையில் விரித்துக்காட்டிய படம் இது. போரில் இருந்து மீண்டுவரும் நாழிகைக்கான காத்திருப்பின் வலியைத் திரை முழுவதும் படர வைத்திருக்கிறார் இயக்குநர் ஈவா. அதிலும் போர்க் களத்தைக் காட்டாமலேயே அத்தனை அதிர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
செச்னியா, ஆப்கானிஸ்தான், ஜார்ஜியா, இங்குஷாதினே எனப் போர் மூண்ட தேசங்களின் பெயர்கள் மட்டுமே ஆங்காங்கே சில காட்சிகளில் உச்சரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ரஷ்யாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள செச்னியாவில் நிகழும் சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அன்னா பார்க்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் மங்கலாகத் தோன்றுகிறது. ஆனால், போர் ஏற்படுத்தும் ரணம் எத்தனை கொடியது என்பதை இந்தப் படம் பார்வையாளர்களின் ஆழ்மனத்தில் ஊடுருவ வைத்திருக்கிறது.
பேச்சு மொழியால் கடத்த முடியாத நுண்ணிய உணர்வுகளை அன்னாவாக நடித்திருக்கும் மேக்தெல்லெனா பாப்லவ்ஸ்காவின் முகம் நம் மனத்திடம் சொல்கிறது. ஒட்டுமொத்தத் திரைக்கதையின் கனத் தையும் அவர் மட்டுமே சுமக்கிறார்.
மறுபுறம் போரின் பெருமையைப் பேசும் ஆண் மைய உலகையும் படம் மறைமுகமாக விமர்சிக்கிறது ‘53 வார்ஸ்’. ஒவ்வொரு முறையும் தன் மனைவியையும் குழந்தைகளையும் காண வரும்போதுதெல்லாம் விடேக் கர்வத்தோடு போர்க் காட்சிகளை விவரித்துக்கொண்டே இருக்கிறார். அழிவைப் பதிவு செய்யும் போதை அவர் தலைக்கேறுகிறது. இதனால் தன்னுடைய காதல் மனைவியின் அழுகுரல் அவருக்குக் கடைசிவரை கேட்கவே இல்லை.