

வெறும் 13 கோடியில் தயாராகி 108 கோடி வசூல் செய்தது கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2014-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘குயின்’ திரைப்படம். அதைத் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தனது மீடியன்ட் நிறுவனம் சார்பாக மறு ஆக்கம் செய்திருக்கிறார் மனு குமரன். ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற தலைப்பில் தமிழ் மறு ஆக்கத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குநர் ரமேஷ் அரவிந்த். இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் முன்னோட்டம் 72 லட்சம் பார்வையாளர்களை எட்டிச் சாதனை படைத்திருக்கிறது. ‘இந்தியன் 2’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் காஜலின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘பாரீஸ் பாரீஸ்’தான்.
காதலர் தினத்தில் வர்மா!
பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வர்மா’ படத்தின் ட்ரைலர் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மறு ஆக்கமான இதில் துருவ் ஜோடியாக நடித்திருப்பவர் மேகா. ‘விகடகவி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ரதன் இசையமைத்திருக்கும் படம். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கும் இவர்தான் இசை. தற்காலத்தின் தேவதாஸ் என்று கூறத்தக்க கதாபாத்திரத்தில் துருவ் நடித்திருக்கும் இந்தப் படத்தை பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இவரும் வில்லன்!
‘பாண்டியநாடு’, ‘குரங்கு பொம்மை’ படங்களின் வழியாகச் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்தார் பாரதிராஜா. நடிப்பில் ஒரு கை பார்த்துக்கொண்டே, ‘ஓம்’ படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். வெகுளித்தனமான அப்பா வேடங்களுக்கு மட்டுமல்ல; மிரட்டும் வில்லனாகவும் தன்னால் முகம் காட்டமுடியும் என்பதை ‘ராக்கி’ படத்தின் மூலம் காட்ட வருகிறார் பாரதிராஜா. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான வஸந்த் ரவி.
போராளிகளின் கூடல்!
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துவரும் இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடி நடாஷா சிங். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது. ராஜு முருகனுடன் மூன்றாவது முறையாக இந்தப் படத்துக்காக இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்நிலையில் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் எளிய மனிதர்களின் குரலாக அவர்களுக்காகக் களமாடிவரும் சமூகப் போராளிகளின் குரலாக,‘வெரி வெரி பேட்..’
எனத் தொடங்கும் பாடல் ஒன்றை இந்தப் படத்துக்காக எழுதியிருகிறார் யுகபாரதி. தோழர் நல்லக்கண்ணு, பாலபாரதி, திருமுருகன் காந்தி, முகிலன், ப்யூஷ் மனுஷ், க்ரேஸ் பானு, ஜக்கையன், வளர்மதி ஆகியோரை அழைத்து இந்தப் பாடலின் புரமோ வீடியோவில் இடம்பெறச் செய்திருக்கிறார் இயக்குநர்.