

‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கியவர் ராம்சேவா ‘என் காதலி சீன் போடுறா’ என்ற இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். “உண்மையுடன் கற்பனையைக் கலந்து திரைக்கதை எழுதலாம், ஆனால், நிஜ வாழ்க்கையில் உண்மையுடன் கற்பனையைக் கலந்தால் ரகளையாகிவிடும்” என்று சுவாரசியமாக உரையாடத் தொடங்கினார்.
நகைச்சுவை ததும்பும் தலைப்புகளைக் கொண்ட படங்கள், அதற்குரிய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றன. உங்கள் படம் எப்படி?
காதலர்கள் மட்டுமல்ல, ‘என்னப்பா சீன் போடுறியா?’ என்று கேட்பது அன்றாட வாழ்க்கையில் பரவலாகப் பயன்படுத்தும் வாக்கியமாக ஆகிவிட்டது. சீன் போடுதல் என்பது வெள்ளந்தித் தனத்தின் ஒரு வெளிப்பாடு. காதலிக்கும்போது எனது நம்பிக்கையைக் காட்டுகிறேன் பார் என்ற உணர்ச்சி வேகத்திலும் நம்மை எதிராளி ரசிக்க வேண்டும் என்ற உளவியல் காரணத்தாலும் நடிப்பதும் பொய் சொல்வதும் காதலர்களின் விளையாட்டுகளில் ஒன்று. இது எனது நண்பரின் காதலில் நடந்த உண்மைச் சம்பவம்.
விளையாட்டு வினையாகும் என்பார்களே அதுதான் நடந்தது. காதல் முறிந்த பிறகு அவன் உடைந்துபோனதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்தப் படத்தில் அதைக் கதையாக இறக்கிவைத்த பிறகுதான் உலகத்துக்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிட்டமாதிரி நிம்மதியாக இருக்கிறது. அந்த அளவுக்கு அதன் தாக்கம் என்னிடம் இருந்துகொண்டே இருந்தது.
உண்மை நிகழ்வுகளில் உள்ள எல்லாவற்றையுமே திரைக்கதைக்காகப் பயன்படுத்த முடியாது. இந்தப் படத்தில் காதலர்கள் விளையாட்டுக்கும் நிஜத்துக்குமான உண்மையை எந்தக் கட்டத்தில் உணர்ந்தார்கள் என்பதை உணர்வு பூர்வமாகவும் காதலில் இருக்க வேண்டிய நம்பிக்கையைக் கொண்டாடும் விதமாகவும் உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கிறேன். அதில் சினிமாத்தனம் இருக்காது. இந்தத் தலைப்பு, ரசிகர்களைத் திரையரங்குக்குள் இழுத்துவரப் பயன்படும். அதேநேரம் கதையோடும் நேரடியாகத் தொடர்பு கொண்டது.
உண்மைக் கதை என்றால் அதைத் திரைக்கதையாக எழுத வேண்டும் எனத் தூண்டிய அம்சம் எது?
உறவுகள், நண்பர்கள், காதலர்கள் யாராக இருந்தாலும் சந்தோஷமான தருணங்களை எதிர்கொள்ளுபோது உணர்ச்சிப்பெருக்கை உங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷம் தரும் உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டாலும் உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் கவனமாக இருங்கள்.
மகிழ்ச்சியை அனுபவியுங்கள், ஆனால், அந்த மகிழ்ச்சியான தருணத்துக்கு மத்தியிலும் கொஞ்சம் விவரமாக இருங்கள்; அப்போதுதான் விவகாரத்தில் சிக்கிக்கொள்ளமாட்டீர்கள் என்பதை இந்தப் படத்தின் மூலம் கூறத் தூண்டிய நண்பனுடைய காதலின் முக்கியமான ஒரு பரமபத தருணம்தான் அந்த முக்கியமான அம்சம்.
கொண்டாட்டமான ஒரு படத்தில் எதிர்பார்த்து வராத ஒன்று கிடைத்தால் ரசிகர்கள் வியந்துபோய், திரையரங்கை விட்டுச் செல்லும்போது அதை தங்கள் மனதோடு எடுத்துச் செல்வார்கள். அது இந்தப் படத்தில் நான் கூறியிருக்கும் செய்தி. அது காதலிப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் காதலிக்கப்போகிறவர்களுக்கும் கட்டாயம் பயன்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கருத்துச் சொல்வதற்கு ஏன் திரைப்படம் எடுக்க வேண்டும்?
முழுப் படத்தையும் கருத்துச் சொல்ல பயன்படுத்த முடியாது. நகைச்சுவைதான் படத்தின் வகை என்றால் சிரித்து சிரித்து வருகிற ஆனந்தக் கண்ணீருக்கு நடுவேதான் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
‘அங்காடித் தெரு’ மகேஷுக்கு இந்தப் படம் திருப்பம் தருமா?
பக்கத்து வீட்டுப் பையன் தோற்றம் கொண்ட பலர் தமிழ் சினிமாவில் ஜெயித்திருக்கிறார்கள். மகேஷ் முன்னணி இடத்துக்கு வந்திருக்க வேண்டிய திறமைசாலி. இந்தப் படத்தில் அவரது வெள்ளந்தியான தோற்றத்துக்குப் பங்கம் வராமல் அதேநேரம் அவருக்கு ‘ஸ்டைலான லுக்’ கொடுத்திருக்கிறோம். தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது காதலியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா உட்படப் பதினைந்துக்கும் அதிகமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். விஜய் டிவி.கோகுல் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். படத்தை 23 நாட்களில் படமாக்கி முடித்துவிட்டேன். அம்ரிஷின் நான்கு பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பெரும் பலமாக அமையும்.
அடுத்து?
எனது திரைக்கதை ஒன்றின் கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு விஷால் கதை கேட்க அழைத்திருக்கிறார். அடுத்து அவருடன் படம் செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.