

சிறுகதையும் நாவலும் எப்படி ஒன்று கிடையாதோ, அப்படித்தான் குறும்படம் மற்றும் முழுநீளப் படத்துக்குத் திரைக்கதை எழுதுவதும் ஒன்றல்ல. குறும்படம் என்னும் வடிவம், மிகக் குறைந்த நேரத்தில் வாழ்வின் ஆகச்சிறந்த தருணம் ஒன்றின் தரிசனத்தைப் பார்வையாளருக்கு வழங்குவது.
ஆனால் ஒரு முழுநீளத் திரைக்கதையில் உலவும் கதாபாத்திரங்கள் விரிவான நாடகமயப்படுத்தலை (Dramatization) நம்பியிருப்பவை. மாறாக, ஒரு வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக ஆகவிரும்பினால் ஒரு குறும்படத்துக்குத் திரைக்கதை எழுதிப் பழகுவதிலிருந்து உங்கள் பயிற்சியைத் தொடங்குவது நல்ல அறுவடைக்கான சிறந்த தொடக்கம். ஒரு குறும்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கான திரைக்கதையை எழுதும் முன் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
நறுக்கென்ற கால அளவு
மூன்று நிமிடம் முதல் 30 நிமிடம் வரையிலான கால அளவுகளில் குறும்படங்களை எடுக்க முடியும். இருப்பினும் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் முடிந்துவிடும் கால அளவுகொண்ட குறும்படங்கள், சர்வதேச அளவில் நடத்தப்படும் குறும்படப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் எளிதில் அள்ளிவிடுகின்றன. இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
நறுக்கென்ற சிறிய கால அளவு கொண்ட குறும்படங்கள் திரைப்பட விழாக்களின் நேரத்தைத் திருடுவதில்லை என்பது முதல் காரணம். சிறிய கால அளவு கொண்ட குறுப்படங்களைத் தேர்வுக்குழுவினர் அயர்ச்சியின்றி விரைவாகப் பார்த்துமுடித்து அதன் உள்ளடக்கம், உருவாக்கம் ஆகியவற்றைக் குறித்து விரைவாக முடிவெடுக்க முடிவதால், முதலில் இதுபோன்ற படங்களை ‘எண்ட்ரி’ என்ற அளவிலேயே திரைவிழாக்களில் அனுமதித்துவிடுகிறார்கள்.
அடுத்து சிறிய கால அளவு கொண்ட குறும்படத்தில், கதாபாத்திரத்தின் முக்கிய தருணம் மிக விரைவாக வந்துவிடுகிறது. அதைக் காட்சியில் கொண்டுவந்து பார்வையாளர்களின் உணர்வுகளை மிக விரைவாகக் கிளற வேண்டிய கட்டாயம் குறும்பட இயக்குநருக்கு உருவாகிறது. எனவே, அதை அவர் நீட்டி முழக்காமல் திரைக்கதையில் தருணத்தை உருவாக்கும் இடத்தை நோக்கி விரைவாக நகர்கிறார்.
இதனால் தேவையற்ற அனைத்தும் நீக்கப்பட்டுக் குறைந்த ஷாட்களில் கதை சொல்லும் திறன் திரைக்கதையாளருக்கு வளரத் தொடங்கிவிடும். வெறும் மூன்றரை நிமிடமே கொண்ட ‘வூடு’ என்ற இந்த அனிமேஷன் குறும்படத்தைக் காணுங்கள். ‘வூடு’ என்பது ஆப்பிரிக்கப் பழங்குடிகள் நம்பிப் பின்பற்றிவந்த ஒரு மாந்திரீக மூடநம்பிக்கைக் கலை. இந்தக் குறும்படத்தில் ஒரு வூடு பொம்மை தனது சக பொம்மைகளின் உயிரைக் காப்பாற்ற துணிந்து ஒரு சாகசத்தில் ஈடுபடுகிறது.
நண்பர்களுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்வதுடன், தங்களைப் பயன்படுத்தி, சக மனிதர்களைத் துன்புறுத்த முயலும் வூடுவைப் பிரயோகிப்பவனை அவனது வழியிலேயே வீழ்த்துவதுடன் படம் முடிகிறது. இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரும் உணர்வுக் கடத்தல் மூன்றரை நிமிடங்களில் சாத்தியமாகிவிடுவதை ஒரு குறும்படத் திரைக்கதை எழுத்தாளராகக் கண்டு உணருங்கள். https://bit.ly/1DAKAU2 இந்தப் படம் என்றில்லை, பத்து நிமிடம் வரையிலான குறும்படம் ஒன்றுக்கு 7 முதல் 8 பக்கத் திரைக்கதை எழுதினால் போதுமானது.
பசியும் ருசியும்
உங்கள் குறும்படத்தை எடுப்பதற்கான எளிய டிஜிட்டல் கேமராவும் லென்ஸ் உள்ளிட்ட சில உபகரணங்களும் ஏன்; சிறிய அளவிலான ஒரு ‘ட்ரோன்’ கூட உங்கள் கைவசம் இருக்கலாம். எடுத்த ஷாட்களை எடிட் செய்து அதைக் காட்சியாக்க லேப்-டாப்பும் சில அடிப்படையான ஓபன் சோர்ஸ் மென்பொருட்களையும் அதில் நீங்கள் உள்ளிட்டு வைத்திருக்கலாம். இவ்வளவு இருந்தும் உங்களால் உண்மையாகவே ஒரு நல்ல குறும்படத்தை எடுக்க முடியாது.
குறும்படத் தயாரிப்புக்கு திரைக்கதை எழுதவும், அதில் நடிக்கவும் ஒளிப்பதிவு செய்யவும் எடிட் செய்யவும் என உண்மையான கலைப்பசியுடன் இருப்பவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை உங்கள் படக்குழுவில் இடம்பெறச் செய்யாவிட்டால் உங்கள் குறும்பட புராஜெக்ட் நகராது. திரைப்பட உலகிலும் யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் உலகிலும் சாதிக்கத் துடிப்பவர்களிடம் பசியையும் ரசனையின் ருசியையும் நீங்கள் காண, முடியும்.
எனவே, உங்கள் குழுவுக்கான சக படைப்பாளிகளை முதலில் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களைக் கொண்டு ஒரு படக்குழுவை உருவாக்குங்கள். படக்குழுவில் இருப்பவர்களில் யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து அவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்து அளியுங்கள்.
இவை அனைத்துக்கும் முன் குறும்படத்துக்கான திரைக்கதையை எழுதிவிடுங்கள். குறும்படத்துக்கும் முழுநீளப் படத்துக்கும் திரைக்கதை எழுதும் ஃபார்மேட் என்ற அடிப்படையில் இரண்டும் மாறப்போவதில்லை.
எனவே, ஒரு சிறுகதையை வாசித்துவிட்டு குறும்படத்துக்கான திரைக்கதையை எப்படி எழுதுவது என்பதை நோக்கி நகரலாம் (‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுபெற்ற எஸ்.ராமகிருஷ்ணனின் ‘புத்தனாவது சுலபம்’ என்ற சிறுகதையை வாசிக்க https://bit.ly/2QpSkdw என்ற இணைப்பில் செல்லுங்கள்). இணையத்தில் வாசிக்க வாய்ப்பு அமையாதவர்களுக்குச் சிறுகதையின் கதைச்சுருக்கத்துடன் (synopsis) அடுத்த திரைப்பள்ளியில் சந்திப்போம்.
தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in