சுயாதீன சினிமா: சென்னையில் சனல்குமார்!

சுயாதீன சினிமா: சென்னையில் சனல்குமார்!
Updated on
1 min read

பெரும்பாலான திரையரங்குகள் இன்று நொறுக்குத்தீனிகளை விற்கும் ‘ஜங்க்’ உணவுக்கூடங்கள் ஆகிவிட்டன. பெருவணிகப் படங்களைத் திரையிட்டு உணவு விற்பனையில் லாபம் பார்ப்பதில் குறியாக இருக்கிறார்கள். அதையும் மீறி திரையரங்குகளில் வெளியாகும் பல நல்ல சினிமாக்கள், மக்களின் கவனத்தைப் பெற்றும் போதிய காட்சிகள் தரப்பாடாமல் அல்லது பெருவணிகப் படங்களோடு போட்டி போட முடியாமல் திரையரங்குகளை விட்டு வெளியேற்றப்பட்டுவிடுகின்றன.

அதுபோன்ற இந்திய மொழிப் படங்களை மட்டும் திரையிட்டு, நல்ல ரசனையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயலும் திரைப்பட சங்கங்களில் ஒன்று ‘படப்பெட்டி திரைப்பட இயக்கம்’.

ஒருவருக்கு ரூபாய் நூறு வீதம் மட்டும் நன்கொடையாகப் பெற்றுக்கொண்டு, தரமான திரையரங்கில், முழுமையான டிஜிட்டல் தரத்தில் திரையிட்டு முழுமையான திரையரங்க அனுபவத்துக்கு ஏற்பாடுசெய்கிறது படப்பெட்டி. அதேநேரம், திரையிடப்படும் படத்தின் படைப்பாளியையும் அதன் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அழைத்து அவர்களுடனான நேரடி உரையாடலையும் சாத்தியப்படுத்துகிறது.

அந்த வகையில் கலை மக்களுக்கானது என்கிற புரிதலை ஏற்படுத்த விரும்பும் படப்பெட்டி திரைப்பட இயக்கம், வரும் நவம்பர் 11-ம் தேதி ஞாயிறு அன்று ‘ஒழிவுதிவசத்தெ களி’ என்ற மலையாளப் படத்தை, சென்னை, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம்.ப்ரிவியூ திரையரங்கில் காலை 10.30 மணிக்கும், மாலை 3.30 மணிக்கும் என இருமுறைத் திரையிடுகிறார்கள்.

உள்ளடக்கம், மிக நீளமான ஷாட் உருவாக்கம் ஆகியவற்றுக்காக உலக அரங்கில் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தின் இயக்குநர் சனல்குமார் சசிதரன், தனது தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இத்திரையிடலில் பங்கு பெறுகிறார். திரையிடலின் முடிவில் இயக்குநரோடு பார்வையாளர்கள் கலந்துரையாடலாம்.

இந்த இரு நிகழ்வுகளோடு, ‘சுயாதீனத் திரைப்பட இயக்குநருக்கு உரிய வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பிலான பின்னிரவுக் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்கிறார். நிகழ்வு குறித்த விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள படப்பெட்டி திரைப்பட இயக்கம் என்ற முகநூல் பக்கத்தைப் பாருங்கள். சுயாதீன சினிமா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in