

“மனித வாழ்க்கை எவ்வளவு உயரமான இடத்தில் இருந்தாலும் அடிப்படை வசதிகள் கிடைக்கிறதோ இல்லையோ, அங்கே டிஜிட்டல் உலகம் மலையேறி வந்து தன் ஆட்டத்தைத் தொடங்கிவிடும். சுவாசிக்க ஆக்ஸிஜன் குறைவான இடத்திலும் ஸ்மார்ட்போன் இயங்கும். இந்தப் பின்னணியில் உண்மை நிகழ்வு ஒன்றின் தாக்கத்துடன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்” என்கிறார் எவனும் புத்தனில்லை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் எஸ்.விஜயசேகரன். அவரிடம் உரையாடியதிலிருந்து...
படத்தின் தலைப்பு, குற்றவுலகைப் பின்னணியாகக் கொண்ட படம் எனச் சொல்கிறதே..
இதில் இருப்பது நிழலுலகமோ அதுசார்ந்த குற்றவுலகமோ கிடையாது. ‘உள்ளங்கையில் உலகம்’ என்று வருணிக்கப்படும் டிஜிட்டல் உலகம்தான் இதில் கதைப்பின்னணி. இதுவொரு கமர்ஷியல் ஆக் ஷன் எண்டர்டெயினர். ஆனால், வழக்கமான மசாலா கிடையாது. முக்கியப் பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டு, யதார்த்தமான களத்தில் பயணிக்கும் பொழுது போக்குப்படமாக இதை இயக்கியிருக்கிறேன்.
இன்றைய டிஜிட்டல் உலகம் என்பது, தொழில்நுட்பம் அறியாத சாமானிய மக்கள்வரை பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒரு பாதிப்பை மையப்படுத்தியே திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
இந்தக் கதையில் பாதிக்கப்படும் அப்பாவிகள் யார்?
எனது கதையில் அப்பாவி மக்கள் என்பவர்கள் ஒரு மலைக் கிராமத்தில் வசிக்கும் அண்ணன், தங்கை மற்றும் அவர்களைச் சுற்றி வாழும் உறவுகளும் நண்பர்களும். மூவாயிரம் ரூபாய்க்கு இன்று ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. இண்டர்நெட்டுக்காக பிரவுஸிங் செண்டர்களையும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களையும் நாம் நம்பியிருந்த காலம் இப்போது இல்லை.
இன்று அதிவேக இண்டர்நெட், குறைந்தவிலை ஸ்மார்ட் போன் களுக்குக் கிடைத்து விட்டது. இந்த டிஜிட்டல் ஜனநாயகம் அறிவுப் புரட்சியை ஏற்படுத் தினாலும் ஆபத்துகளையும் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டிருக்கிறது. டீன் ஏஜ் பருவம் என்பது ஏற்கெனவே சிக்கலான ஒன்றாக இருக்கும்போது, அந்தச் சிக்கலை டிஜிட்டல் யுகம் எப்படி மேலும் சிக்கலாக்குகிறது என்பதையும் அதிலிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது என்பதையும் அண்ணன் – தங்கை கதாபாத்திரங்களை வைத்துக் கூறியிருக்கிறேன்.
ஆனால் இது அண்ணன் – தங்கை கதை மட்டுமே அல்ல, அதைத் தாண்டி, சைபர் உலகின் ஊடுருவல், சாமானிய மனிதர்களின் அன்றாட வாழ்வை எப்படி அசைத்துப் பார்க்கிறது என்பதுதான் விறுவிறுப்பான அம்சமாக இருக்கும். ஒரு மலைக்கிராமத்தின் பின்னணியில் கதை நடப்பது இன்னும் ஆச்சரியத்தைக் கொடுக்கும். லொக்கேஷன் ரொம்பவே ப்ரெஷ்சாக இருக்கும்.
எங்கே படமாக்கியிருக்கிறீர்கள்?
ஆசியாவிலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளைவது நமது மாநிலத்தில்தான். மேற்குத் தொடர்ச்சிமலையில் கொலுக்குமலை என்றொரு இடம். குரங்கணியிலிருந்து மூணாறு செல்லும் வழியில் வலப்புறம் திரும்பி மேலே ஏற வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் தேயிலை விளைகிறது.
தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் மக்கள் அங்கேயே கிராமங்களில் வசிக்கிறார்கள். புதிதாகச் செல்லும் பலருக்கும் ஆக்ஸிஜன் பிரச்சினை ஏற்படும் இடம். அங்கே சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற இடத்தில்தான் நாங்கள் படமாக்கினோம். அங்கே சைக்கிள் கூடப் போக முடியாது.
அதனால் மருத்துவர் குழுவை அருகில் வைத்துக்கொண்டுதான் 19 நாட்கள் படப்பிடிப்பை முடித்தோம். அப்படியும் படக்குழுவைச் சேர்ந்த பலர் மயக்கம்போட்டு விழுந்துவிட்டார்கள். விலங்குகளுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக, அவர்களது வீடுகளிலேயே தங்கி 80 சதவீதப் படத்தை முடித்தோம். நமது நாட்டில் இப்படிப்பட்ட ஒரு இடம் இருக்கிறதா என்று எண்ணும் அளவுக்குக் காட்சிகள் வந்திருக்கின்றன.
உங்களைப் பற்றியும் படக்குழு பற்றியும் கூறுங்கள்?
உதவி இயக்குநராக ஒரு நீண்ட அனுபவத்துக்குப் பின் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு இது. படத்தில் இரண்டு ஜோடிகள். நபி நந்தி , சரத், சுவாசிகா, நிகாரிகா ஆகிய நான்குபேர் நாயகன், நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கவிஞர் சினேகன், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சங்கிலிமுருகன் எனப் பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜா சி.சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் ஒளிப்பதிவாளர் கதிரிடம் பணிபுரிந்தவர். மரியா மனோகர் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறோம்.