

எண்பத்து ஏழு வயது சாருஹாசனை, ‘டான் 87’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி. நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த ஜனகராஜையும் மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…
தமிழ் சினிமா நிறைய ‘டான்’கதைகளைப் பார்த்துவிட்டது. நீங்கள் சாருஹாசனுக்காக இந்தக் கதையை எழுதினீர்களா?
கதையை முதலில் எழுதிவிட்டேன். பிறகு, இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது சாருஹாசன் சார்தான் என் மனதில் வந்து நின்று மிரட்டினார். மணிரத்னம் சாரின் ‘தளபதி’ படத்தில் அவ்வளவு பெரிய டான் தேவா (மம்முட்டி) அவர் முன்னால் வந்து நின்று தனது உயிர் நண்பன் சூர்யாவுக்காக (ரஜினி) சாருஹாசனிடம் அவரது மகளைப் பெண் கேட்பார். அப்போது மம்முட்டியை நேருக்கு நேராகப் பார்த்து ஒரு மிரட்டலான லுக் விட்டு “தர முடியாது வெளியே போ. மீறினே.. என் பொணத்து மேலதான் இந்தக் கல்யாணம் நடக்கும்”என்பார்.
தியேட்டரே மிரண்டு போகும். அவ்வளவு பெரிய டான், துணிச்சலான ஓர் ஆச்சாரமான பிராமண அப்பாவுக்கு முன்னால் வீக்காகிவிடுகிறார். அப்போது மம்முட்டி கேரக்டர் தோற்றுப்போய் வெளியே வரும். அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் சாருஹாசனின் அந்த போல்டான, பவர்ஃபுல் கண்களைப் பார்த்தால் மிரண்டுபோவேன். அந்தப் படத்திலிருந்தே எனக்கு சாருஹாசனை மிகவும் பிடித்துப்போய்விட்டது. ‘தளபதி’ படத்தில் காட்டிய அந்த கெத்துதான் இந்த வயதான டான் கேரக்டருக்குத் தேவைப்பட்டது.
இத்தனை வயதுக்குப்பிறகு எதற்கு டான் கேரக்டர் என்று சாருஹாசன் மறுத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
அவரும் இதே கேள்வியைக் கேட்டார். நீங்கள் நடிக்காவிட்டால் படத்தை ட்ராப் செய்துவிட்டு வேறு படத்தை எடுக்கப்போய்விடுவேன் என்று சொன்னேன். ஆனால் அவர் விடாமல் என்னைத் தேடி வந்த உண்மையான காரணத்தை கூறுங்கள் என்று கேட்டார். அப்போது அவரிடம் ‘தளபதி’ படக்காட்சியையும் பிரதாப் போத்தனும் ராதிகாவும் மனவளம் குன்றியவர்களாக நடித்திருந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படக்காட்சியும் எனக்கு ஏற்படுத்திய பாதிப்பை பற்றி கூறினேன். ‘மீண்டும் ஒரு காதல் கதை’யில் சாருஹாசன் சார் பாதிரியாராக வருவார்.
ஒரு காட்சியில் “உலகம் உருண்டை லட்டும் உருண்டை”என்று நகைச்சுவையாக சொல்லிக் கொடுப்பார். இதுபோல் துணைக் கதாபாத்திரங்களில் உங்களைப் பிராமணராகவும் வழக்கறிஞராகவும் காட்டியது எனக்குப் பிடிக்கவில்லை. ரகுவரன், சத்தியராஜ்போல மிக உயரமாக, நல்ல வலுவான உடலோடு இருக்கிறீர்கள். உங்கள் தோற்றத்துக்கும் ஏற்றக் கதாபாத்திரங்களை தமிழ் சினிமா உங்களுக்குக் கொடுக்கவில்லை என்று வருத்தப்பட்டேன். உடனே “என்னைத் தாத்தா கேரக்டருக்கு கேட்டு வருவீர்கள் என்று பார்த்தால் தாதா என்கிறீர்களே!” என்று ஆச்சரியப்பட்டார்.
ஆனால் படப்பிடிப்புச் செல்லும்வரை அவருக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. டானுக்கான அவரது கெட்-அப் போடப்பட்டு, பிரத்யேக ஆடைகள் அணிந்து அவர் செட்டுக்குள் நுழைந்தபோதே தெரிந்துவிட்டது அவர் வேற லெவல் என்று. முதல் நாள் ஒரு காட்சியில் அவர் நடித்து முடித்து காட்சியைப் பார்த்தபின் எனக்கு வாழ்த்துகள் சொன்னார். அந்த அளவுக்கு வீச்சுடன் அவரது தோற்றமும் நடிப்பும் அவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டன.
இது எந்த மாதிரியான டான் கதை?
இதற்குள் மொத்தம் மூன்று கதைகள் இருக்கின்றன. உட்கார்ந்த இடத்திலிருந்தே உத்தரவுகளால் ராஜ்ஜியம் நடத்தும் ஒரு வயதான டானின் காதல் கதை ஒரு ட்ராக். பாலா சிங், மனோஜ்குமார் ஆகிய இருவரும் இடம்பெறும் அரசியல் கதை. ஆனந்தப் பாண்டியன் ஸ்ரீபல்லவி என்று இன்னொரு ஜோடியின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள். இந்த மூன்று கதைகளும் எங்கே எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பதுதான் திரைக்கதை.
வயதான டான் கேரக்டருக்கு காதலியாக நடிக்க 70 வயதை எட்டிய ஒரு பெண்மணியைத் தேடிக்கொண்டிருந்தபோது சாருஹாசன் சாரே, "என்னோட கேர்ள் ஃபிரெண்ட் ஒருத்தர் இருக்காங்க. ஓய்வு பெற்ற லெக்சரர், போய் பார்த்துவிட்டு வாருங்கள்”| என்று அனுப்பினார். பிறகுதான் அவர் கீர்த்தி சுரேஷின் பாட்டி என்று எனக்குத் தெரியும். இந்த ஜோடியின் காதல் புதுமையாக இருக்கும். அதேபோல ஸ்ரீபல்லவி இந்தப் படத்துக்குப்பின் தமிழ் சினிமாவில் தனக்கென்று நிரந்தரமான ஓர் இடத்தைப் பிடிப்பார்.
நடிப்பதை நிறுத்திவிட்டு ஒதுங்கியிருந்த ஜனகராஜை எப்படிப் பிடித்தீர்கள்?
அவர் இந்தியாவிலேயே இல்லை என்று கூறிவிட்டார்கள். பிறகு ஒரு தனியார் டிடெக்டீவ் சி.ஐ.டி. போலச் செயல்பட்டு அவரைக் கண்டுபிடித்தேன். அவரது வீட்டைக் கண்டுபிடிக்கவே எனக்கு மூன்று மாதம் ஆனது. ஆறுமாதம் அலையவிட்டு கதையைக் கேட்டு அதன்பின்னர்தான் நடிக்க ஒப்புக்கொண்டார். எனது கதாபாத்திரம் பற்றி மீடியாவிடம் வாயைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் நடிக்க வந்தார்.