

எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிந்தனையாற்றல் ஆகிய மூன்று திறன்கள் மு.கருணாநிதியைக் கலைவெளிக்கும் அரசியல் களத்துக்கும் இழுத்துக்கொண்டு வந்தன. முதலில் ‘சுயமரியாதை சங்கம்’ தொடங்கி, பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பகுத்தறிவுப் பிரச்சார பீரங்கியாக வலம்வந்தார் ‘அஞ்சா நெஞ்சன்’ பட்டுக்கோட்டை அழகிரிசாமி.
அவருடைய இடி முழக்கம் போன்ற மேடைப் பேச்சுகள், காங்கிரஸைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருந்த பெரியார் ஈ.வெ.ராவின் எழுத்து, பேச்சுகள், பெரியாரின் பாசறையில் அறிவார்ந்த பேச்சாளராக மேலெழுந்து வந்துகொண்டிருந்த சி.என்.அண்ணாதுரையின் ஆணித்தரமான வாதங்கள் ஒளிரும் மேடை முழக்கங்கள் ஆகியன கருணாநிதியை அரசியல்படுத்தின.