தென்னாட்டு பெர்னாட் ஷாவின் தம்பி! | கண் விழித்த சினிமா 34
திராவிட இயக்கம் கோரி நின்ற சமூக மாற்றம் உருவானால், அது தரப்போகும் சமத்துவ வலிமை குறித்து முதலில் உணர்ந்தவர்கள் உழைக்கும், சாமானிய மக்கள். அவர்களை முதலில் அரசியல்படுத்தியதில், பொதுக்கூட்ட மேடைகள், தலைவர்களின் பேச்சுகள், போராட்டங்கள், பத்திரிகை எழுத்துகள் ஆகிய வடிவங்களுக்கு முதன்மைப் பங்கிருந்தது. ஆனால், நாடகம், சினிமா இரண்டையும் திராவிட இயக்கம் கைப்பற்றியபோது ஆதிக்க வர்க்கம் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொண்டது. அதன் நீரோட்டத்தில் கலப்பதைத் தவிர, அதற்கு வேறு வழி இருக்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான அந்தக் காலக்கட்டத்தில், தொழில்முறை நாடகக் குழுக்கள் புராண நாடகங்களையே அதிகமும் சார்ந்திருந்ததால் தேய்வைச் சந்திக்கத் தொடங்கியிருந்தன. மேலும், பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகம் சந்தித்த தடையும் அதன் தொடர்ச்சியாகத் திராவிட இயக்கச் சீர்திருந்த நாடகம் ஒரு இயக்கமாக உருவெடுத்ததும் புராண நாடகங்கள் மீதான நாட்டத்தைக் குறைத்தது.
