

எம்.ஆர்.ராதாவை தெரிகிற அளவுக்கு எம்.கே.ராதாவை இன்றைய தலை முறைக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டு பேருக்குமே எம்.ஜி.ஆருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. எம்.ஆர்.ராதாவுடன் எம்.ஜி.ஆருக்கு இருந்தது நீண்ட கால நட்பென்றால், எம்.கே.ராதா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்தது ‘உடன் பிறவா அண்ணன்’ என்கிற பாசம்!
பின்னாளில் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்ற மறுநாள், கான்வாய் வாகனங்கள் பின்தொடர, சொல்லாமல் கொள்ளாமல் எம்.கே.ராதாவின் வீட்டுக்குப் போய் இறங்கினார். எம்.கே.ராதாவின் கால்களைத் தொட்டு வணங்கினார். அந்த முறை என்றில்லை, எப்போது அவரை சந்தித்தாலும் இவ்வாறு வணங்குவதை எம்.ஜி.ஆர். வழக்கமாக வைத்திருந்தார். ஒரே காரணம், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் தொடங்கி எம்.ஜி.ஆரை தன்னுடைய தம்பிபோல் ஆதரித்து வந்தவர்தான் எம்.கே.ராதா என்கிற மயிலாப்பூர் கந்தசாமி ராதா.