'ரைட்' விமர்சனம்: ஒரு காவல் நிலையத்தின் கதி!

'ரைட்' விமர்சனம்: ஒரு காவல் நிலையத்தின் கதி!
Updated on
2 min read

காவல் நிலையத்தைக் கதைக் களமாகக் கொண்ட திரைப்படங்களில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘மகாராஜா’ அதன் ‘நான் - லீனியர்’ திரைக்கதைக்காகப் பெரிதும் கொண்டாடப்பட்டது. தற்போது ‘ரைட்’ முந்தைய படத்தின் ‘டெம்போ’வை தனது திரைக்கதையாலும் அதனுள் இருக்கும் சமுக அக்கறையாலும் முந்திச் செல்ல முயன்றுள்ளது.

சென்னைக்கு வருகை தரும் பிரதமரின் பாதுகாப்புப் பணிக்கான குழுவில், கோவளம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரகுராம் (நட்ராஜ்) அனுப்பப்படுகிறார். அந்த நேரத்தில், அவரது காவல் நிலையத்தை அங்குள்ள ஒரு லேப்டாப் மூலம் கட்டுப்படுத்துகிறான் ஒரு மர்ம மனிதன். லேப்டாப் திரையில் தோன்றும் அவன், ‘காவல் நிலையத்தின் பல இடங்களில் ‘டைம் பாம்’ வகை வெடிகுண்டைப் பொருத்தியிருக்கிறேன். எனது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் குண்டுவெடிப்புக்குப் பலியாக வேண்டியிருக்கும். யாரேனும் வெளியேற முயன்றால், ரிமோட் வழியாகக் குண்டுகளை வரிசையாக வெடிக்க வைப்பேன்’ என்று மிரட்டுகிறான்.

மிரட்டலுக்குப் பயப்படாமல் வெளியேற முயன்ற ஒரு விசாரணைக் கைதியை ஒரு குண்டை வெடிக்க வைத்துத் தடுத்தும் நிறுத்துகிறான். காவல் நிலையத்தைக் கட்டுப்படுத்து அந்த மர்ம நபர் யார், அவனுடைய கோரிக்கைகள் என்ன?

காவல் நிலையத்தில் சிக்கியிருக்கும் எழுத்தர், உதவிப் பெண் ஆய்வாளர், பெண் காவலர், ஒரு தங்கச் சங்கிலித் திருடன், தன்னுடைய 21 வயது மகன் ஜெய்யை காணவில்லை என புகார் கொடுக்க வந்த நடுத்தர வயதுக்காரரான சக்திவேல் (அருண் பாண்டியன்) ஆகியோர், ‘டெலிகான்ஃபிரன்ஸ்’ வழியாக வழிநடத்தும் சென்னை காவல் ஆணையாளரின் உத்தரவுகளை எப்படியெல்லாம் என்னவெல்லாம் செயல்படுத்தினார்கள். உண்மையில் யார் அந்த மர்ம நபர், அவருடைய கோரிக்கைகள் என்ன என்பதைப் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் விவரிக்கிறது திரைக்கதை.

மக்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்புப் பிரச்சினை வந்தால் என்னவாகும் என்கிற திரைக்கதையின் ‘ட்ரீட்மெண்ட்’ சில இடங்களில் ஊகிக்க வைக்கிறது. என்றாலும் கதையின் முக்கிய சம்பவங்களும் அவற்றின் நகர்வும் அதிலிருக்கும் தர்க்க ரீதியாக நியாயங்களும் படத்தைச் சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்திச் சென்றுள்ளன.

நட்டி நடராஜ் நிறையப் படங்களில் காக்கிச் சட்டை அணிந்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் சற்றும் எதிர்பாராத் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது. படத்தின் கதைதான் நாயகன் எனும்போது, நட்ராஜ் முதன்மை முகம்போல் வெளிப்பார்வைக்குத் தோன்றியாலும் அந்த இடத்தைத் தட்டித் தூக்கிக்கொண்டு போய்விடுகிறார் அருண் பாண்டியன். அவரது உடல்மொழியில் முதுமை எட்டிப் பார்த்தாலும் அதை மீறி அவர் வெளிப்படுத்தும் நடிப்பின் தேர்ச்சி, திரையுலகில் அவரது ஆழ்ந்த அனுபவத்தைக் காட்டிவிடுகிறது.

காவல் நிலையத்தையே அதிகமும் காட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிலையில், அதற்குள்ளேயே முதன்மை நடிகர்கள் உழலவேண்டிய நிலையில் அதை நடிகர்கள் சிறப்பாகச் செய்ததுடன், ஒளிப்பதிவாளரும் (எம்.பத்மேஷ்) தன்னுடைய சவாலான பணியை போரடிக்காத காட்சி சட்டகங்களின் வழியாக நிறைவேற்றியிருக்கிறார்.

பப் கலாச்சாரம், வர்க்கப் பின்னணியைத் தாண்டி அதில் உழலும் இளைய சமூகம், பெண்களுக்கு அங்கிருக்கும் பாதுகாப்பு ஆகிய சிக்கல்களை யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் சிறந்த நடிகர்கள் குழுவை கொண்டு சித்தரித்ததில் ‘ரைட்’ என டிக் அடிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in