

தடை செய்யப்பட்ட தேசாபிமான நாடகங்களுக்காகச் சட்டமன்றத்தில் ஆழமான வாதங்களை முன்வைத்துப் பேசி, நாடகக் கலைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றார் ஒரு காங்கிரஸ் போராளி. ஒத்துழையாமை இயக்கம் தொடங்கி, நேரடியாக நாடகக் கலைஞர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்! அவர்களைத் துணிந்து சிறை புக வைத்தார். பின்னர், திரைப்படத் துறையின் வளர்ச்சியைத் தேசத்தின் வளர்ச்சிகளில் ஒன்றெனக் கருதி, அது குறித்து எழுதினார், பேசினார். வளர்ச்சி மாநாடு நடத்தினார்.
1939இல் திரைப்பட வர்த்தகச் சபை தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர், 1920கள் முதல் 35 வரையிலும் தமிழகக் காங்கிரஸின் முகமாக விளங்கிய தீரர் எஸ்.சத்தியமூர்த்தி. தேச விடுதலைப் போராட்ட அரசியலையும் நாடக, திரைப்படக் கலைஞர்களையும் ‘இந்திய தேசியம்’ என்கிற வலிமையான இழையில் இணைத்ததில், அவர் செய்து காட்டிய முன்மாதிரி அண்ணாவை வெகுவாகக் கவர்ந்தது.