

“நான் விஜய் அண்ணாவுடைய தெறி ஃபேன்! அவரை வைத்து மூன்று வேடங்கள் என்ன, ஐந்து வேடங்கள் கொண்டக் கதையைக்கூட எடுக்க முடியும். ‘மெர்சல்’ படத்தில் அவருக்கு நான் அமைத்த மூன்று கேரக்டர்களில், கிராமத்து வெள்ளந்தி மனிதரான வெற்றிமாறன் கதாபாத்திரம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.
அந்த கேரக்டர், சக கிராமவாசிகள் மதிக்கும் ஒரு கம்பீரமான வீரனாகவும் அதேநேரம் ஒரு ‘டான்’ என்கிற எண்ணம் வந்து விடாதபடியும் ‘தேவர் மகன்’ கமல்ஹாசன் சாரைப் போல இருக்க வேண்டும் என்றே எழுதினேன். அந்தக் கதாபாத்திரத்துக்கான ‘லுக்’கை உருவாக்க, தன் உடலை முறுக் கேற்றிக்கொண்டதில் தொடங்கி, அதற்கான உடல்மொழி, நடிப்பை, மற்ற இரண்டு மகன் கதாபாத்திரங்களில் சின்ன சாயல்கூட வராமல், அவற்றை அவ்வளவு ஸ்டைலாக, தனித்தனியே பிரித்துக் காட்டி நடித்தார். அப்படியொரு ஃபெர்பார்மென்ஸை அவரால் மட்டுமே கொடுக்க முடியும் என்று ‘மெர்ச’லில் காட்டினார். வெற்றிமாறனாக அப்படியொரு ‘ரெட்ரோ’ கேரக்டரை விஜய் அண்ணா அதற்கு முன் செய்திருக்கவில்லை. அதனால் வெற்றிமாறன் மீது ரசிகர்கள் ‘மெர்ச’லாகிப் போனார்கள்.