

படத் தயாரிப்புக்கு, கல்கத்தா, பம்பாய், கோலாப்பூர் நகரங்களை நோக்கிச் செல்வதைக் கைவிட்டு, 40களின் தமிழ் சினிமா சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியிருந்தது. இன்னொரு முக்கிய மாற்றமும் நடந்தது! மதராஸ் மட்டுமே தமிழ் சினிமாவின் உற்பத்திக் கேந்திரம் என்றிருந்த நிலையை சேலம், கோவை நகரங்கள் தகர்த்திருந்தன.1940 முதல் 1955 வரையிலான 15 ஆண்டுகளில் ஏவி.எம்., ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், ஜூபிடர், பட்சி ராஜா ஆகிய மூத்த நிறுவனங்கள் ஆரோக் கியமான போட்டியுடன் படங்களைத் தயாரித்தன. இவை பல வெற்றிகளைக் கொடுத்தாலும் இணையாகப் பல தோல்விகளையும் கொடுத்தன.
இந்த நிறுவனங்களில் ஜூபிடர் பிக்சர்ஸ் ஒரு தனித்துவமான நிறுவனம். அதை உருவாக்கி வளர்த்த சோமசுந்தரம் - மொய்தீன் ஆகிய இருவரும், சினிமாவை ஒரு சீர்திருத்த, பொழுது போக்குக் கலையாகப் பார்த்த ரசனையான நண்பர்கள். சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, கண்ணதாசன் போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்களையும் பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., நம்பியார் தொடங்கி பின்னாளில் உச்சம் பெற்ற பல நடிகர்களையும் திரையிசையை ஆண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தன் குரலால் கோட்டை கட்டிய டி.எம்.சௌந்தர்ராஜன், தன் திரைமொழியால் தமிழ் சினிமாவுக்கு ஊட்டம் தந்த சி.வி. ஸ்ரீதர் போன்ற அடுத்த தலைமுறை, இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக் குரியவர்கள்.