

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸைப் போலவே விஜயை வைத்து வரிசையாக மூன்று படங்களை இயக்கி ‘ஹாட்ரிக்’ வெற்றி கொடுத்தவர் அட்லி. விஸ்காம் பட்டதாரியான இவர், இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் அவருடைய இணை இயக்குநராக உயர்ந்த திறமைக்காரர். இவர் இயக்குநராக அறிமுகமான ‘ராஜா ராணி’ 100 நாள் படம். விஜயை வைத்து இவர் முதலாவதாக இயக்கிய ‘தெறி’ ரூ.100 கோடி வசூல் செய்தது.
விஜயை இரண்டாம் முறையாக இவர் இயக்கிய ‘மெர்சல்’ 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. விஜயை மூன்றாம் முறை இயக்கிய ‘பிகில்’ அப்பா -மகன் என இரட்டை வேடங்களில் விஜயின் நடிப்புத் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இந்த மூன்று படங்களிலும் விஜயுடன் இணைந்து பணியாற்றிய நாள்களை இங்கே பதிவு செய்கிறார் இயக்குநர் அட்லி: “விஜய் அண்ணா, ‘நண்பன்’ படத்தில் நான் உதவி இயக்குநராகப் பணி புரிந்தபோது எனக்கு நண்பனாகிவிட்டார். அந்த நட்பில் ஒரு தம்பிக்குக் காட்டும் பாசம் இருந்தது, இப்போதும் இருக்கிறது.