சென்னையின் முதல் கோலிவுட்! | ஆக.22 சென்னை நாள்
சென்னையின் கீழ்ப்பாக்கம், மாநிலத்தின் மிகப் பழமையான மனநலக் காப்பக மருத்துவமனைக்காகப் பெயர்பெற்றது. இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஓர் அங்கமாக விளங்கும் இந்த மருத்துவ மனை, 1871இல் 66 ஏக்கரில் ‘லூனாட்டிக் அசைலம்’ என்கிற பெயருடன் பிரிட்டிஷ் அரசால் தொடங்கப்பட்டது. அதுவே பின்னர் ‘கவர்மெண்ட் மென்டல் ஹாஸ்பிடல்’ என்று 1922இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று நாட்டின் சிறந்த மனநலச் சிகிச்சை கிடைக்கும் மருத்துவமனைகளில் ஒன்று.
இவ்வளவு பெருமை வாய்ந்த கீழ்ப்பாக்கம்தான் 1934இல் தொடங்கி, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஐந்து ஸ்டுடியோக்களுடன் தமிழ் சினிமாவின் முதல் கனவுத் தொழிற்சாலையாக விளங்கியது. அந்த ஐந்தில், பலரது கைகளுக்கு மாறி, பல பெயர்களைப் பெற்று, படத் தயாரிப்பில் மிகவும் பரபரப்பான ஒன்றாக 1970 வரையிலும் புகழ்பெற்று விளங்கியது ‘நியூடோன்’ (Newtone) ஸ்டுடியோ.
